`ஏழு பேர் விடுதலை, தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு...’ பா.ம.க தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இந்த சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில் இணைந்து 23 இடங்களில் போட்டியிடுகிறது பா.ம.க. இந்தநிலையில், வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டிருக்கிறது பா.ம.க. அந்த அறிக்கையின் முக்கியப் பகுதிகளைப் பார்ப்போம்.
தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்
கல்வி:
மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும். தனியார்ப் பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணங்களையும் அரசே ஏற்கும். பள்ளிக் கல்விக்கான ஆண்டு நிதி ஒதுக்கீட்டை ரூ.80,000 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 500 ரூபாயும், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாயும் நிதியுதவி வழங்கப்படும்.

9-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். அரசு மற்றும் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் தேர்வுமுறை. தேசிய அளவில் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள 9-ம் வகுப்பிலிருந்து பயிற்சி வழங்கப்படும். உயர்கல்விக்கு பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக் கடனைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை. கடன் தொகையைத் தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும். மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
நலவாழ்வு:
அனைவருக்கும் இலவச மருத்துவச் சிகிச்சை. வருமான வரம்பின்றி அனைவருக்கும் இலவச மருத்துவக் காப்பீடு. 50 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச முழு மருத்துவப் பரிசோதனை. கடலூர், ஈரோடு மாவட்டங்களில் இரண்டாவது மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும். சென்னையில் 1,000 கோடி ரூபாய் செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.
தமிழகத்தில் நிர்வாக வசதிக்காகத் திருச்சியை இரண்டாவது தலைநகரமாகவும், மதுரையை மூன்றாவது தலைநகரமாகவும் அறிவிக்கப்படும்.
வேளாண்மை:
தமிழகத்தில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருள்களும் அரசால் கொள்முதல் செய்துகொள்ளப்படும். காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும். 60 வயதைக் கடந்தவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
சமூகநீதி:
தமிழக்தில் அனைத்து அரசு வேலைகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தமிழகத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் 80% தமிழகத்தைச் சேர்ந்தவர்களை நிரப்பப்படவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும். தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கத் திட்டம் செயல்படுத்தப்படும்.
குடும்பத் தலைவியர் நலன்:
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், ஒன்பது மாதங்களாக இருக்கும் மகப்பேறு விடுப்பு ஓராண்டாக உயர்த்தப்படும். 40 வயதைக் கடந்த குடும்பத் தலைவிகளுக்கு முழு உடல் பரிசோதனை இலவசமாகச் செய்யப்படும். காவல்துறையில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும். பெண்களுக்கான திருமண வயது 21-ஆக உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
சட்டம் ஒழுங்கு:
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும். காவல்துறையின் சுதந்திரத்தை உறுதிசெய்ய மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும். காவல்துறையினருக்கு எட்டு மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முழுமையான தேர்தல் அறிக்கை கீழே உள்ள இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது...
ஏழு தமிழர்கள் விடுதலை:
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யப் பரிந்துரைக்கும் தீர்மானத்தை, தமிழக அமைச்சரவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்திருக்கிறது. இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. ஏழு தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவதை பா.ம.க உறுதி செய்யும்.