Published:Updated:

``அந்தமானிலிருந்து கப்பலில் வேட்பாளர்களை இறக்கியிருப்பேன்!" - கடலூரில் கடுகடுத்த ராமதாஸ்

``மாவீரன் அலெக்சாண்டரைவிட நம்மிடம் படை பலம் அதிகமாக இருக்கிறது. அன்புமணியைக் கோட்டையில் அமரவைப்பது தொண்டர்களாகிய உங்கள் கையில்தானிருக்கிறது" - ராமதாஸ்.

கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடலூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ``கடலூரில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடாமல் இருந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. போட்டியிட ஆளில்லை என்று சொல்லியிருந்தால், அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்திருப்பேன். கடலூரில் முந்திரித் தொழிலாளி கோவிந்தராஜ் கொலை வழக்கைத் தோண்டி எடுத்துத் தொடர்ந்து போராடிவருகிறோம். மேலும், கொலை வழக்கில் தவறு செய்தவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. தமிழ்நாட்டை பாட்டாளி மக்கள் கட்சி ஆள வேண்டும், அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு வீடாக, திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தனியாக பா.ம.க போட்டியிட்டபோது 23 லட்சம் வாக்குகளைப் பெற்றது. ஆனால் 5.6% வாக்குகளைப் பெற்று தமிழகத்தில் 3-வது பெரிய கட்சி எனத் தலைவர் ஜி.கே.மணி சொல்வது வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

அதேசமயம் தொண்டர்களைப் பார்க்கும்போது எனக்கு உற்சாகம் பிறக்கிறது. என் பயணம் மேலும் தொடரும். மாவீரன் அலெக்சாண்டரைவிட என்னிடம் படை பலம் அதிகமாக இருக்கிறது. அன்புமணியைக் கோட்டையில் அமரவைப்பது தொண்டர்களாகிய உங்கள் கையில்தானிருக்கிறது. அன்புமணியைக் கோட்டையில் அமரவைப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள். யாருக்காகப் போராடி இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தோமோ, அவர்கள்தான் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசு சரியாகவே மேல் முறையீடு செய்திருக்கிறது.

``புதுச்சேரியில்கூட நம்மால் வெற்றிபெற முடியவில்லையே?" - கட்சி நிர்வாகிகளிடம் குமுறிய ராமதாஸ்

நல்ல வழக்கறிஞர்களை நியமித்திருக்கிறார்கள். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு, ஒரு லட்சம் இளைஞர் படை, மகளிர் படையை உருவாக்க வேண்டும். வருங்காலத்தில் அன்புமணியை முதலமைச்சராக்க வேண்டும். ஒரு ஊரில் பத்து வீடுகளுக்கு ஓர் இளைஞர் என்ற கணக்கில் தினந்தோறும் அவர்களைச் சந்தித்து காலில் விழுந்து மன்றாடி வாக்கு சேகரிக்க வேண்டும். 10 வீடுகளில் சென்று பிரசாரம் செய்தால் 50 வாக்குகள் கிடைக்கும். கொரோனா காலம் என்பதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். நான் இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டதால் பெரிய பயம் ஏதுமில்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு