Published:Updated:

``ஆன்லைன்‌ சூதாட்டத்‌தால் மேலும் ஒரு பலி; தடைச் சட்டம் என்ன ஆனது?" - முதல்வருக்கு அன்புமணி கேள்வி

அன்புமணி ராமதாஸ்

``ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடைச் சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படவில்லையென்றால்‌ அதற்கான காரணம்‌ என்ன?” - அன்புமணி ராமதாஸ்

``ஆன்லைன்‌ சூதாட்டத்‌தால் மேலும் ஒரு பலி; தடைச் சட்டம் என்ன ஆனது?" - முதல்வருக்கு அன்புமணி கேள்வி

``ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடைச் சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படவில்லையென்றால்‌ அதற்கான காரணம்‌ என்ன?” - அன்புமணி ராமதாஸ்

Published:Updated:
அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், திருச்சியில் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தைக் கண்டித்த தனது மனைவியைக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

திருச்சி மாவட்டம், லால்குடியைச் சேர்ந்த நரசிம்மராஜ் (32) என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சங்களை இழந்திருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட கடனைத் தனது வீட்டை விற்று சரிக்கட்டியதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகும், சூதாட்டத்தைக் கைவிடாத நரசிம்மராஜை, அவருடைய மனைவி சிவரஞ்சனி கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த நரசிம்மராஜ் கடந்த சில நாள்களுக்கு சிவரஞ்சனியைக் கொலைசெய்துவிட்டு, உடலை வீட்டிலேயே பதுக்கிவிட்டுத் தப்பிவிட்டார்.

கொலை
கொலை

இந்தச் சம்பவம் போலீஸாரால் நேற்று தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை அரசு இன்னும் ரத்து செய்யாதது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி, அறிக்கை மூலம் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வியெழுப்பியிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``ஆன்லைன்‌ சூதாட்டத்தால்‌ கடந்த 11 மாதங்களில்‌ உயிரிழந்தவர்களின்‌ எண்ணிக்கை 25-ஆக உயர்ந்திருக்கிறது. ஆன்லைன்‌ சூதாட்ட உயிர்ப்பலிகள்‌ அதிகரித்துக்‌கொண்டே செல்லும்‌ நிலையில்‌ தமிழ்நாடு முதலமைச்சர்‌ உறுதியளித்தவாறு ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடை அவசரச் சட்டம்‌ பிறப்பிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாமக தலைவர் அன்புமணி
பாமக தலைவர் அன்புமணி

ஆன்லைன்‌ சூதாட்டத்தைத் தடைசெய்ய அவசரச் சட்டம்‌ பிறப்பிக்கப்படும்‌, அது குறித்து அரசுக்கு இரு வாரங்களில்‌ பரிந்துரைக்க வல்லுநர்‌குழு அமைக்கப்‌படும்‌ என்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ அறிவித்தார்‌. தமிழ்நாடு அரசால்‌ அமைக்கப்பட்ட வல்லுநர்குழு, இரு வாரக்‌ கெடுவைக்‌ கடந்து கடந்த 27-ம்‌ தேதி அதன்‌ அறிக்கையை முதலமைச்சரிடம்‌ தாக்கல்‌ செய்தது. அந்த அறிக்கைமீது அன்று மாலை அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌ விவாதித்து முடிவெடுக்கப்படும்‌ என்று தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதன் பின்னர்‌ 12 நாட்களாகிவிட்ட நிலையில்‌, ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடைச் சட்டம்‌ குறித்து இப்போது வரை எந்தத்‌ தகவலும்‌ இல்லை. ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடை அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டதா... அவ்வாறு ஒப்புதல்‌ அளிக்கப்பட்டிருந்தால்‌ அந்தச் சட்டம்‌ ஆளுநரின்‌ ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டதா?

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

ஒருவேளை ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடை சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவைக்‌ கூட்டத்தில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படவில்லையென்றால்‌ அதற்கான காரணம்‌ என்ன... வல்லுநர்‌குழு பரிந்துரைகள்‌ மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்‌போகிறது என்பது குறித்தெல்லாம்‌ தமிழ்நாடு அரசு மக்களிடம்‌ விளக்கமளிக்க வேண்டும்‌. ஆனால்‌, தமிழ்நாடு அரசு அமைதியைக் கடைப்பிடித்துவருகிறது. ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடை அவசரச் சட்டத்தின்‌ இன்றைய நிலை குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும்‌. அவசரச் சட்டம்‌ இன்னும்‌ தயாராகவில்லையென்றால்‌, உடனடியாக அமைச்சரவையைக்‌ கூட்டி, ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடை அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல்‌ தர வேண்டும்‌. அதன் பின்னர்‌ அதை ஆளுநருக்கு அனுப்பி, ஆன்லைன்‌ சூதாட்டத்‌ தடை அவசரச்‌ சட்டத்தைப் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்‌" என அன்புமணி குறிப்பிட்டிருக்கிறார்.