Published:Updated:

"திருமாவளவன் என் தம்பிதான்; ஒற்றுமையோடு இருக்கவே விரும்புகிறேன்" - ராமதாஸ் நேர்காணல்

ராமதாஸ்

பழனி பாபா மாதிரி ஒரு குழந்தை உள்ளம் படைத்த மனிதரை பார்க்கவே முடியாது. அவர் என் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார். - ராமதாஸ்

"திருமாவளவன் என் தம்பிதான்; ஒற்றுமையோடு இருக்கவே விரும்புகிறேன்" - ராமதாஸ் நேர்காணல்

பழனி பாபா மாதிரி ஒரு குழந்தை உள்ளம் படைத்த மனிதரை பார்க்கவே முடியாது. அவர் என் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார். - ராமதாஸ்

Published:Updated:
ராமதாஸ்

ஆனந்த விகடன் யூ-டியூப் சேனலில் `கதைப்போமா வித் பர்வீன் சுல்தானா' என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழகத்தின் அரசியல், சினிமா, இலக்கிய ஆளுமைகள் தங்கள் பயணம் குறித்தும், சமூகப் பார்வை குறித்தும் பேராசிரியர் பர்வீன் சுல்தானாவுடன் இதில் உரையாடுவார்கள். அதில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடன் பேராசியர் பர்வீன் சுல்தானா இணைந்து நடத்திய நேர்காணலின் 3-ம் பாகம் இதோ...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவுற்ற நிலையில், அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பர்வீன் சுல்தானாவுடன் ராமதாஸ்
பர்வீன் சுல்தானாவுடன் ராமதாஸ்

இதுவரை சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் நன்றாக செயல்பட வேண்டும் என்று தான் நாங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வைக்கின்றோம். ஒரு எதிர்கட்சியாக நாங்களும் அவ்வப்போது அரசாங்கத்திற்கு அறிவுரைகளையும், அவர்கள் மீது விமர்சனங்களையும் வைத்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் அது யாரையுமே புண்படுத்தாத வகையில் வைத்துக்கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் ஒரு சமூகப் போராளியாக அறியப்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட வன்னியர் சாதியைப் பற்றி அதிகம் கவலை கொள்வது ஏன்?

வகுப்புவாதம் என்பது எப்போதுமே ஆபத்தான விஷயம்தான். எல்லோரும் ஒரு தாய் மக்கள்தான். வன்னியர் சமுதாயம் தமிழகத்திலேயே பெரிய சமுதாயம். தலைமை செயலகத்தில் 56 செயலாளர்கள் உள்ளனர். அதில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இதுவரை 20 முதலமைச்சர்கள் தமிழகத்தில் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். அதில் ஒருவர்கூட வன்னியர் இல்லை. அதனால் அந்த மக்களுக்காக நாங்கள் அதிகம் குரல் கொடுக்கிறோம். மற்றப்படி வன்னியர்களுக்கு மட்டும்தான் நான் போராடுகிறேன் என்பது மற்றவர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம். 108 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் நான் சேர்க்க போராடினேன். இஸ்லாமிய இடஒதுக்கீட்டிற்குக்கூட போராடினேன்.

தொல். திருமாவளவன் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கூட்டத்தில் உரையாற்றும் திருமாவளவன்
கூட்டத்தில் உரையாற்றும் திருமாவளவன்

ஆரம்பத்தில் நாங்கள் சேர்ந்துதான் பயனித்தோம். ஈழ தமிழர் பிரச்சனைக்காக அவர் உண்ணாவிரதம் இருந்தபோது, நான் தான் சென்று அவரிடம் பேசி, அவரை பழரசம் பருக வைத்து அவரது உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன். மதுரையில் அரசியல் செய்தவரை நெய்வேலியில் கூட்டம் போட்டு அழைத்து வந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒன்றாக தமிழுக்காக போராடியிருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் சில கருத்து வேறுபாடு காரணமாக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. மற்றபடி ஒற்றுமையாக செயலாற்றுவதுதான் என் விருப்பம்.

தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கிய மரணங்களில் ஒன்று பழனி பாபாவின் மரணம். அவரைப் பற்றி...

ராமதாஸ்
ராமதாஸ்

பழனி பாபா மாதிரி ஒரு குழந்தை உள்ளம் படைத்த மனிதரை பார்க்கவே முடியாது. அவர் என் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்தார். அவரைக் கைது செய்தபோது நான் போராட்டம் செய்தேன். அவருடைய மரணத்திற்கு நான் மட்டும் தான் பழனி சென்றேன். வேறு யாருமே வரவில்லை.

உங்களது 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் நடந்த மனநிறைவான விஷயம் என்றால் எதை சொல்வீர்கள்?

இதுவரை அப்படி எதுவுமே நடக்கவில்லையே. நாளைக்கே தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் நான் வானத்திற்கும் மேகத்திற்கும் துள்ளி குதிப்பேன். அப்போது தான் எனக்கு மனநிறைவு ஏற்படும்.

பேட்டியை வீடியோ வடிவில் காண...