Published:Updated:

`சஸ்பென்ஸ் பயணம்... சக்ஸஸ் பயணமா?'- ராமதாஸ், மோடி சந்திப்பு பின்னணி!

பிரதமரும் நேரம் கொடுத்த பிறகே தன் தந்தை பிரதமரை சந்திக்க விருப்பப்படும் விஷயத்தை சொல்லியதும், அதற்கு ஓ.கே. சொல்லப்பட்டது.

மோடி - ராமதாஸ்
மோடி - ராமதாஸ் ( PMO )

தி.மு.க-வுடன் ஒருபுறம் அறிக்கைப் போரை நடத்திக்கொண்டிருந்த பா.ம.க தலைவர் ராமதாஸ் இன்று திடீரென பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாஸ்
ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில், அன்புமணி மட்டும் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே தேசிய ஜனநாயக் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளுக்கு மந்திரி சபையில் ஒரு இடம் கொடுத்தது பி.ஜே.பி. தமிழகத்தின் சார்பில் யாருக்கும் அந்த வாய்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், நீண்ட காலத்துக்குப் பிறகு ராமதாஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பிரதமரை ராமதாஸ் சந்திக்கப்போகும் விவரமே பலருக்கும் தெரியாமல் இருந்தது. இன்று காலை டெல்லி சென்றடைந்த ராமதாஸ், பிரதமரை சந்தித்தார். ஆனால், இதற்குப் பின்னால் நடந்த சுவாரஸ்யமே வேறு என்கிறார்கள். ``கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு மோடி, தமிழகம் வந்தபோதுதான் ராமதாஸ் மற்றும் மோடி பொதுக்கூட்ட மேடையில் சந்தித்தார்கள். அந்தத் தேர்தலில் அன்புமணி வெற்றி பெற்றிருந்தால், அவருக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெறும் எண்ணம் பா.ம.க-வில் இருந்தது. ஆனால், முடிவு அதற்கு நேர்மாறாக வந்தது. அதன்பிறகு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையும் பதவியேற்றது. ஜூலை மாதம் தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டணிக் கட்சி என்ற அடிப்படையில் அவருக்கு அமைச்சரவையில் இடத்தை எதிர்பார்த்தார் ராமதாஸ். ஆனால், அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என்று பி.ஜே.பி தரப்பில் சொல்லிவிட்டனர்.

ராமதாஸ், மோடி, அன்புமணி
ராமதாஸ், மோடி, அன்புமணி
PMO

இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றம் கூட உள்ளது. அதற்கு முன்பாக அமைச்சரவையில் சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார் மோடி. இந்தத் தகவல் அன்புமணிக்குக் கசிந்தநிலையில், பிரதமரை சந்திக்க எம்.பி என்கிற அடிப்படையில் நேரம் கேட்டுள்ளார். பிரதமரும் நேரம் கொடுத்த பிறகே தன் தந்தை பிரதமரை சந்திக்க விருப்பப்படும் விஷயத்தை சொல்லியதும், அதற்கும் ஓ.கே. சொல்லப்பட்டது. இதற்குப் பிறகே வெறும் அரசியல் சந்திப்பாக இருக்க வேண்டாம் என்று எழுவர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைப் பட்டியலோடு டெல்லி கிளம்பினார் ராமதாஸ்.

டெல்லியில் பிரதமரிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசிவிட்டு, அன்புமணிக்கு அமைச்சரவையில் வாய்ப்பு குறித்து ராமதாஸ் கேட்க, `பார்க்கலாம்' என்று மோடி, புன்னகையோடு பதில் சொல்லியிருக்கிறார்.

மோடி, ராமதாஸ்
மோடி, ராமதாஸ்
PMO

அன்புமணி மீது சி.பி.ஐ வழக்கு விசாரணையில் இருப்பதால் மட்டுமே அமைச்சரவையில் இடம் கொடுக்க பி.ஜே.பி தயங்குவதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பிறகே தனது கோரிக்கை பட்டியலை பிரதமரிடம் கொடுத்துவிட்டு உடனடியாக டெல்லியிலிருந்து கிளம்பிவிட்டார் ராமதாஸ். சஸ்பென்ஸாக நடைபெற்ற இந்தச் சந்திப்பு அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தால் மட்டுமே சக்ஸஸ் சந்திப்பாகக் கருதப்படும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.