Published:Updated:

அபிமன்யு ராமதாஸ்!

எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி - ராமதாஸ்

சக்கர வியூகத்திலிருந்து வெளியேறுவாரா?

மகாபாரதப் போரில் சக்கர வியூகம் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் மட்டுமே இரு முறை இந்த வியூகத்தை உடைத்தார். ஆனால், வியூகத்தை உடைத்து உள்ளே சென்ற அர்ஜுனனின் மகன் அபிமன்யு, வெளியேற வழி தெரியாமல் மாண்டுவிட்டார்’ என்று அந்த இதிகாசம் கூறுகிறது. தானே கட்டமைத்த அரசியல் சக்கர வியூகத்தில் சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளியேற வழி தெரியாமல் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விழிப்பதாகக் கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

தேர்தல் நெருங்கிவிட்டாலே ஏதாவது ஒரு கோரிக்கையை மையப்படுத்தி, அதன் மூலமாக சீட் எண்ணிக்கையை உயர்த்திக்கொள்வதில் கெட்டிக்காரர் ராமதாஸ். இம்முறை ‘வன்னியர் உள் இட ஒதுக்கீடு’ ரூட்டைக் கையிலெடுத்து

அ.தி.மு.க-வுக்கு நெருக்குதல் கொடுத்துவருகிறார். ராமதாஸின் டிமாண்டுகளுக்குப் பிடி கொடுக்காமல், அ.தி.மு.க தரப்பு தண்ணீர் காட்டுவதால், இட ஒதுக்கீடு கோரிக்கையை விட்டுக்கொடுக்கவும் முடியாமல், அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறவும் முடியாமல் சிக்கித் திணறுகிறார் ராமதாஸ்.

பா.ம.க - அ.தி.மு.க பேச்சுவார்த்தைப் பின்னணியை அறிந்த அ.தி.மு.க சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம். ‘‘ராமதாஸ் வைத்த வன்னியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை மிகவும் சிக்கலானது. அவர் கேட்டபடி 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்குக் குறிப்பிட்ட சதவிகிதத்தைப் பிரித்துக்கொடுத்தால், மற்ற சமூகங்கள் அதிருப்தியடையும். அது தேர்தலிலும் எதிரொலிக்கும். இதுவரை நான்கு முறை ராமதாஸுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் ஜனவரி 30-ம் தேதி ராமதாஸைச் சந்தித்தபோது, ‘உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால் வடக்கிலுள்ள 80 தொகுதிகளிலும் நம் கூட்டணி வெற்றிபெற்றுவிடும். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வன்னியர் சமூகத்தைத் தவிர மற்ற சமூகத்தினர் யாரும் உங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. பிற சமூக வாக்குகள் தி.மு.க-வுக்கே சென்றன. எனவே, இட ஒதுக்கீடு கோரிக்கையில் காலம் தள்ளாமல் உடனடியாக முடிவெடுங்கள்’ என்று கட் அண்ட் ரைட்டாகக் கூறிவிட்டார் ராமதாஸ். அதற்கு, ‘ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை கேட்டிருக்கிறோம். எந்தச் சமூகம், எவ்வளவு எண்ணிக்கையில் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் மட்டுமே இட ஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற முடியும்’ என்று அமைச்சர்கள் கூறியிருக்கின்றனர். ‘இந்த விவகாரத்தில் பின்வாங்கப்போவதில்லை’ என்று ராமதாஸ் விடாப்பிடியாகக் கூறிவிட்டதால், அன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக, பிப்ரவரி 3-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் ராமதாஸ் பிடிகொடுக்கவில்லை.

அபிமன்யு ராமதாஸ்!

2019 நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி நேரம் வரை அ.தி.மு.க தலைவர்களை ‘டயர் நக்கிகள்’ என்று சொல்லிவிட்டு, அக்கட்சியுடனேயே ராமதாஸ் கூட்டணி அமைத்ததை இரு கட்சித் தொண்டர்களும் ரசிக்கவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு தொகுதிகளையும் சேர்த்து 4,00,763 வாக்குகளை அ.தி.மு.க பெற்றது. தனித்துப் போட்டியிட்ட பா.ம.க., 2,85,948 வாக்குகளை அள்ளியிருந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தபோதும், தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி 5,04,235 வாக்குகள் மட்டுமே பெற்று, 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். அ.தி.மு.க வாக்குகள் முழுமையாக அவருக்கு விழுந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம். இதே கதைதான் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம் என அ.தி.மு.க போட்டியிட்ட வடமாவட்டத் தொகுதிகளிலும் நடந்தது. இங்கேயெல்லாம் பா.ம.க-வின் வாக்குகள் முழுமையாக அ.தி.மு.க-வுக்கு மடைமாறவில்லை.

ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள் சிலர், ‘பா.ம.க-வைக் கழற்றிவிட்டு மூன்றாவது அணி அமைக்கவிடுவதுதான் நமக்கு லாபம். இதன் மூலமாக தி.மு.க-வுக்குச் செல்லக்கூடிய வன்னியர் வாக்குகளும் சிதறும்; உள் இட ஒதுக்கீடு கோரிக்கையை நாம் ‘சாஃப்ட் பெடல்’ செய்வதால், மற்ற சமூகங்களின் கோபத்திலிருந்தும் தப்பிக்கலாம். பா.ம.க கூட்டணியால் நமக்கு லாபமில்லை’ என்று முதல்வரிடம் கூறியிருக்கிறார்கள். விஷயம் தெரிந்து வெளிறிப்போயிருக்கிறார் ராமதாஸ். தி.மு.க-வும் ராமதாஸைச் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. `வன்னியர் உள் இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று தி.மு.க தனியாக அறிவித்துக்கொண்டது. இதனால், தி.மு.க கதவும் சாத்தப்பட்டுவிட்டது.

‘குலசேகரன் ஆணையம் அமைக்கப்பட்டது காலம் தாழ்த்தும் முடிவு’ என்று அவசரப்பட்டு அறிவித்து, அ.தி.மு.க கொடுத்திருந்த ஒரு வாய்ப்பையும் நழுவவிட்டுவிட்டார் ராமதாஸ். ‘தன் கோரிக்கையை ஏற்பார்கள், அதன் மூலமாக வன்னியர்கள் மத்தியில் மீண்டுமொரு ஹீரோவாக மாறலாம், அடுத்த 15 வருடங்களுக்கு இதைவைத்தே பா.ம.க-வைக் கரைசேர்த்துவிடலாம்’ என்பதுதான் அவரது திட்டம். ஆனால், தான் அமைத்த வியூகத்துக்குள்ளேயே சிக்கிக்கொண்டு, வெளியேற வழி தெரியாமல் விழிபிதுங்குகிறார். இட ஒதுக்கீடு கோரிக்கையில் அ.தி.மு.க ஏதாவது அறிவித்தால் மட்டுமே ராமதாஸால் இந்தச் சிக்கலிலிருந்து வெளியேற முடியும். இல்லையென்றால், தனித்துப் போட்டியிட்டு நிர்க்கதி ஆக வேண்டியிருக்கும். அதற்கு பா.ம.க நிர்வாகிகள் தயாரில்லை என்பதால், ராமதாஸின் நிலை அபிமன்யு நிலையாக மாறியிருக்கிறது’’ என்றனர்.

சசிகலாவின் தமிழக வரவு, பிரதமரின் தமிழக விசிட்டுக்கு முன்னதாக பா.ம.க-வுடன் கூட்டணியை அமைத்து, ஒரு தலைவராக உருவெடுக்க எடப்பாடி பகீரத பிரயத்தனம் செய்கிறார். இது ஒன்று மட்டுமே ராமதாஸிடம் இப்போதிருக்கும் துருப்புச்சீட்டு. 30 சீட்டுகள், 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு என்பது வரை எடப்பாடி இறங்கி வந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை அமைச்சர்களின் அட்வைஸ்படி பா.ம.க-வைக் கழற்றிவிட்டு, மூன்றாவது அணி அமைக்க எடப்பாடி வழிவகுத்தால், தேர்தல் கணக்குகள் மாறலாம். அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்று வேண்டிக்கொண்டிருக்கிறது தைலாபுரம். எடப்பாடியின் பதற்றம், ராமதாஸின் வியூகச் சிக்கலை உடைக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்!