Published:Updated:

2-வது சத்தியம் மீறப்படுமா? சட்டமன்றத்துக்கு வரும் ராமதாஸ்!

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

''என் கால் செருப்புகூட சட்டமன்றத்துக்குள் நுழையாது!'' என 30 ஆண்டுகளுக்கு முன்பு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் போட்ட சபதம் நிலைகுலையுமா என்கிற கேள்வி ராமசாமி படையாச்சியார் திருவுருவப் படத்திறப்பு விழாவில் ஏற்பட்டிருக்கிறது.

சட்டசபை
சட்டசபை

சீர்மிகு சரித்திரங்கள் பலவற்றைப் படைத்தது சென்னை மெரினாவில் இருந்த சீரணி அரங்கம். அப்படி ஒரு வரலாறு 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அரங்கேறியது.

மெரினா கடற்கரை பரப்பு முழுவதும் மஞ்சள் கொடிகள். வன்னியர் சமுதாய மக்களின் தலைகள்... மைக் முன்பு ராமதாஸ் உரையாற்ற வந்து நின்றபோது, திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது.

எடப்பாடி, ராமதாஸ், பன்னீர்செல்வம்
எடப்பாடி, ராமதாஸ், பன்னீர்செல்வம்

''1. எந்தக் காலத்திலும் கட்சியிலும், சங்கத்திலும் பதவி வகிக்க மாட்டேன்.

2. பொதுக் கூட்டங்களுக்குச் சொந்த செலவில்தான் வந்து போவேன்.

3. வாழ்நாளில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடமாட்டேன். என் கால் செருப்புகூட சட்டமன்றத்துக்குள்ளேயோ, நாடாளுமன்றத்துக்குள்ளேயோ நுழையாது.

4. என் வாரிசுகளோ, சந்ததியினரோ கட்சியிலோ சங்கத்திலோ எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள்.

5. பிரதமர் பதவி கொடுத்தாலும் சரி, ஸ்விஸ் பேங்கில் ஆயிரம் கோடி ரூபாய் போடுவதாகச் சொன்னாலும் சரி, ராமதாஸ் விலைபோகமாட்டான்'' என்ற மிக முக்கியமான இந்த ஐந்து வாக்குறுதிகளை வரிசையாக அளித்த ராமதாஸ், "இதையெல்லாம் நாட்குறிப்பில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இது என் தாய்மீது சத்தியம். இதை மீறினால் நடுரோட்டில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்'' என்றார்.

என் கால் செருப்புகூட சட்டமன்றத்துக்குள் நுழையாது என நான் சொல்லியிருந்தும் கோட்டையில் என்னை நுழைய வைத்துவிட்டார் ஜெயலலிதா!
ராமதாஸ்

இந்தச் சத்தியங்கள் செய்யப்பட்டு, சரியாக 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. ராமதாஸின் ஐந்து சத்தியங்களில் ஒன்றான, ''என்னுடைய வாரிசுகளோ, சந்ததியினரோ கட்சியிலோ சங்கத்திலோ பொறுப்புக்கு வரமாட்டார்கள்'' என்கிற சத்தியம் ஏற்கெனவே மீறப்பட்டு விட்டது. அன்புமணி ராமதாஸ், பா.ம.க-வின் இளைஞர் அணித் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆனதுடன், ஐந்தாண்டுக் காலம் மத்திய அமைச்சராகவும் இருந்து விட்டார். அந்த சத்தியங்களில் அடுத்த ஒன்றும் பொய்க்கப் போகிறது. ''வாழ்நாளில் என் கால் செருப்புகூட சட்டமன்றத்துக்குள்ளோ, நாடாளுமன்றத்துக்குள்ளோ நுழையாது'' என்ற சத்தியத்தை மீறி, சட்டமன்றத்துக்குள் நுழையப் போகிறார் ராமதாஸ்.

ராமசாமி படையாச்சியார்
ராமசாமி படையாச்சியார்

மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியார் திருவுருவப் படத்தை, சட்டப்பேரவையில் வரும் 19-ம் தேதி மாலை 5.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார். இந்த விழாவில்தான், ராமதாஸ் கலந்து கொள்ளப் போகிறார். 2001-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க இடம்பெற்றிருந்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஜெயலலிதாவைச் சந்திக்க ராமதாஸ் நேரம் கேட்டபோது, கோட்டையில் சந்திக்க நேரம் ஒதுக்கினார் ஜெயலலிதா. '' 'சட்டமன்றத்துக்குள் நுழைய மாட்டேன்' எனச் சத்தியம் செய்திருக்கிறேன். அதனால், போயஸ் தோட்டத்தில் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார் ராமதாஸ். ஆனால், ஜெயலலிதா போயஸ் கார்டனில் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. வேறு வழியில்லாமல் அன்றைக்குக் கோட்டையில் போய் ஜெயலலிதாவைச் சந்தித்தார் ராமதாஸ். அ.தி.மு.க-வுடன் பா.ம.வின் கூட்டணி முறிந்த பிறகு இந்தச் சம்பவத்தை அவர் சுட்டிக் காட்டினார். ''என் கால் செருப்புகூட சட்டமன்றத்துக்குள் நுழையாது என நான் சொல்லியிருந்தும் கோட்டையில் என்னை நுழைய வைத்துவிட்டார் ஜெயலலிதா'' எனச் சொல்லி வருத்தப்பட்டார்.

அதன்பிறகு தி.மு.க ஆட்சியில் இரண்டாவது முறையாகக் கோட்டைக்குப் போனார் ராமதாஸ். 2008 டிசம்பர் 22-ம் தேதி ராமதாஸ் தலைமையிலான குழுவினர், கோட்டையில் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து, மதுவிலக்கு தொடர்பான கோரிக்கையை வைத்தது. அதன்பிறகு ராமதாஸ் கோட்டைக்குச் செல்லவில்லை. இரண்டு முறையும் ராமதாஸ் தலைமைச் செயலகம் அமைந்திருந்த கோட்டைக்குத்தான் போனார். சட்டமன்ற நடவடிக்கைகள் நடைபெறும் அங்குள்ள பேரவை மண்டபத்துக்குள் ராமதாஸ் செல்லவில்லை. இப்போது முதன்முறையாகச் சட்டமன்ற மண்டபத்திற்குள்ளும் செல்லப் போகிறார்.

ராஜ்யசபா தேர்தலில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது...
ராஜ்யசபா தேர்தலில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தபோது...

பாட்டாளி மக்கள் கட்சிக்கு முன்பே வன்னியர் சமூகத்துக்காகக் குரல் கொடுத்த இயக்கம் உழவர் உழைப்பாளர் கட்சி. வன்னியர்களைத் திரட்டி, 'உழவர் உழைப்பாளர் கட்சி'யை ஆரம்பித்து, 1952 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 17 இடங்களில் வென்றார் ராமசாமி படையாச்சியார். வன்னியர் வாக்கு வங்கியைப் பார்த்து அசந்து போனது அன்றைக்கு ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி. காமராஜர் அழைக்கவே, காங்கிரஸ் கட்சியில் இணைந்த உழவர் உழைப்பாளர் கட்சி கரைந்து போனது. அப்போது அமைச்சர் ஆனார் ராமசாமி படையாச்சி. தற்போது அவருடைய படத்தைத்தான் சட்டசபையில் திறந்து வைக்கப்போகிறார்கள்.

ராமசாமி படையாச்சியார் விழாவுக்கான அழைப்பிதழ்கள் முக்கிய பிரமுகர்களுக்கும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பிற கட்சிகளின் தலைவர்களுக்கும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கும் பா.ம.க சார்பில் அதன் நிறுவனர் ராமதாஸ் விழாவில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது. சமீபத்தில்தான், அன்புமணி ராமதாஸ், அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தயவில் ராஜ்யசபா எம்.பி. ஆகி உள்ளார்.

ஜெயலலிதாவுடன் ராமதாஸ்
ஜெயலலிதாவுடன் ராமதாஸ்

1989 ஜூலை 16-ம் தேதி அன்று ஐந்து சத்தியங்களைச் செய்திருந்தார் ராமதாஸ். அதே ஜூலை மாதத்தில் 19-ம் தேதி நடக்கப் போகும் விழாவில்தான் சட்டமன்றத்துக்குள் நுழையப் போகிறார். பா.ம.க-வுக்கு மட்டும் வயது முப்பது அல்ல. ராமதாஸின் சத்தியத்துக்கும் வயது 30-தான்.

விழாவுக்கு ராமதாஸ் வந்தாலும் வராமல் போனாலும் செய்திதான்!