Published:Updated:

பாமக: மாவட்ட அளவில் அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை?! - கூட்டணி நிலைப்பாட்டில் தடுமாறுகிறதா?

தற்போது நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது, நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக பாமக தலைமை இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறதோ எனச் சந்தேகங்கள் கிளப்பியிருக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் ட்விட்டர் பக்கத்தில் நேற்றிரவு போடப்பட்ட ட்வீட் அரசியல் களத்தில் விவாதமாகியிருக்கிறது. ``கட்சியின் வளர்ச்சி கருதி, நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப்போகிறோம்'' என்கிற அறிவிப்பை, கடந்த 13-ம் தேதி பாமக தலைமை வெளியிட்டது. ஆனால், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பாமக - அதிமுக நிர்வாகிகள் மாவட்ட அளவில், இணைந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தியதாக நேற்று செய்திகள் வெளியான நிலையில்தான், மருத்துவர் ராமதாஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படியொரு செய்தியை பதிவேற்றியிருக்கிறார்.

பொதுவாக, மற்ற அனைத்துக் கட்சிகளைவிடவும் தலைமைக்குக் கட்டுப்பட்டு வேலை செய்வதிலும், தலைமை எடுக்கின்றன முடிவுகளை விசுவாசத்தோடு செயல்படுத்துவதிலும் தீவிரமாக இருப்பவர்கள் பாமக தொண்டர்கள். ஆனால், நாளை வேட்புமனுத் தாக்கல் முடிவடையும் நிலையில், அந்தக் கட்சியின் தலைமை எடுத்திருக்கின்ற முடிவுக்கு மாறாக, மாவட்ட அளவில் அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

பா.ம.க
பா.ம.க

பாமக-வின் நிர்வாகக்குழுக் கூட்டத்தில் 75 சதவிகிதத்துக்கும் மேலான நிர்வாகிகள், தனித்துப் போட்டியிடுவோம் என கருத்து தெரிவித்ததாலேயே இந்த முடிவை எடுத்தோம் என பாமக நிறுவனர் ராமதாஸ் (தனியார் தொலைக்காட்சி நேர்காணல்), அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால், ''தற்போது நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கும்போது, நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக பாமக தலைமை இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறதோ என சந்தேகம் எழுகிறது'' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதுமட்டுமல்ல, ``கூட்டணி விஷயத்தில் பாமக தடுமாற்றத்துடன் இருப்பதையே சமீபத்திய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன'' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம். அவர் இது குறித்து விரிவாகப் பேசினார்.

``பாட்டாளி மக்கள் கட்சி, மருத்துவர் ராமதாஸ் என்கிற ஒற்றை நபர் ஆளுமை செலுத்தக்கூடிய, ஒரு சமூகப் பின்னணியில் செயல்படக்கூடிய இயக்கம். அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருப்பவர்களில் 99 சதவிகிதம் பேர் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், தலைமையின் முடிவுக்கு மாறாக சில நிகழ்வுகள் தற்போது அரங்கேறிவருகின்றன. உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரை லோக்கல் அட்ஜெஸ்ட்மென்ட்கள் வழக்கமான ஒரு விஷயம்தான் என்றாலும், அது மறைமுகமாகவே நடக்கும். ஆனால், கட்சியின் தலைவர் மணியே அதை ஆமோதித்துப் பேசியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ஜி.கே.மணியின் பேச்சுக்குப் பின்னால் அதிமுக இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

மாவட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தையை, வெளியே லீக் செய்து, பாமக-வில் குழப்பம் இருப்பதைப் போன்ற பிம்பத்தை அதிமுக கட்டமைக்க நினைக்கிறது. காரணம், எடப்பாடி பழனிசாமியின் பலம், கட்சிக்குள் அவரின் பிடிமானம் என்பது பாமக-வுடனான உறவுதான். அது இல்லாமல்போனால், தாக்குப்பிடிப்பது கஷ்டம் என எடப்பாடி பழனிசாமி நினைத்திருக்கலாம். அதனால் இது போன்ற சில காய்களை நகர்த்தியிருக்கலாம். அதனால்தான், மருத்துவர் ராமதாஸ் உடனடியாக இதற்கு ரியாக்ட் செய்திருக்கிறார்'' என்கிறார் அவர்.

இந்தநிலையில், ``தற்போது பாமக-வில் நிலவிவரும் இந்தக் குழப்பத்தால் அந்தக் கட்சியின் வாக்குவங்கி இன்னும் சரிவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன'' என்கிறார், மூத்த பத்திரிகையாளர் பிரியன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் இது குறித்து விரிவாகப் பேசும்போது,

``தனித்துப் போட்டி என பாமக தலைமை எடுத்தது மிகவும் சரியான முடிவு. உள்ளாட்சித் தேர்தல்களைப் பொறுத்தவரையில், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் பொறுப்புக்கு வர நினைப்பார்கள். தனித்துப் போட்டியிட்டால், அனைத்து இடங்களிலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கும்போது, அதிமுக மற்றும் பாஜக-வுக்கு கூட்டணியில் பல இடங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், தேர்தல் நடக்கப்போகிற ஒன்பது மாவட்டங்களில், ஏழு மாவட்டங்களில் பாஜக-வுக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வும் பெரிய அளவில் இந்தப் பகுதிகளில் வெற்றிபெறவில்லை. அதனால் தனித்துப் போட்டியிடுவதுதான் சரி. ஆனால், கீழ்மட்ட அளவில் சில மாவட்டங்களில் அதிமுக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அப்படி லோக்கல் அன்டர்ஸ்டாண்டிங்கின்படி கூட்டணி அமைந்தால், அது தோல்வியில் முடிவதற்கான வாய்ப்புகளே அதிகமாக இருக்கின்றன.

ப்ரியன்
ப்ரியன்

2019 நாடாளுமன்றத் தேர்தல், கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அதைத்தான் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அதிமுக - பாமக இணைந்து போட்டியிட்டால், பட்டியல் சமூக வாக்குகள் அப்படியே திமுக-வுக்குப் போகும். திமுக-வின் வெற்றியை மேலும் அதிகப்படுத்தும். பாமக தனித்துப் போட்டியிட்டால், கட்சியை வளர்க்கலாம். கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கலாம். தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துவிட்டால் அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் தொண்டர்கள் அர்ப்பணிப்போடு வேலை செய்வார்கள். ஆனால், தலைமை கூட்டணி இல்லை என்றும் கீழ்மட்டத்தில் கூட்டணி என்பது கட்சி நிர்வாகிகளுக்கும் சரி, மக்களுக்கும் சரி குழப்பத்தையே ஏற்படுத்தும். தற்போது இருக்கின்ற வாக்குவங்கியையும் சேதப்படுத்தும்'' என்கிறார் அவர்.

இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருப்பது அதிமுக-வா, செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்.

``அதிமுக, வெட்டவெளிச்சமாக எல்லா மக்களுக்கும் தெரிகின்ற வகையில்தான் கூட்டணி அமைக்கும், செயல்படும். தேர்தல் நேரங்களில் மற்ற கட்சிகளில் இருப்பவர்களை விலைக்கு வாங்கி, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒருபோதும் செயல்பட்டது கிடையாது. அதிமுக தலைவர்களும் அது போன்ற செயல்பாடுகளில் எப்போதும் ஈடுபட்டது கிடையாது. பா.ம.க-வைச் சேர்ந்தவர்களில் ஒருசிலர், ஒருசில இடங்களில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்தால் வெற்றிபெற முடியும் என நினைத்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் அதிமுக மீது குற்றம் சுமத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தது'' என்கிறார் அவர்.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

இந்த விஷயங்கள் தொடர்பாக விளக்கம் கேட்க பா.ம.க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டோம், ``கூட்டணி குறித்து மருத்துவர் ஐயா ஏற்கெனவே தெளிவாக விளக்கம் கொடுத்துவிட்டார். அதுதான் கட்சியின் நிலைப்பாடு'' என்பதோடு முடித்துவிட்டனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு