Published:Updated:

ரயில் மீது பா.ம.க கல்லெறிந்தது வன்முறை அல்ல... அறச்சீற்றம்!

திலகபாமா
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா

- திலகபாமாவின் ‘அடேங்கப்பா’ விளக்கம்...

ரயில் மீது பா.ம.க கல்லெறிந்தது வன்முறை அல்ல... அறச்சீற்றம்!

- திலகபாமாவின் ‘அடேங்கப்பா’ விளக்கம்...

Published:Updated:
திலகபாமா
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா

‘வன்னியர்களை வன்முறையாளர்களாகச் சித்திரித்துவரும் நடிகர் சூர்யா, வன்னிய சமூக மக்களிடம் பொதுமன்னிப்புக் கேட்காத வரை, அவரது திரைப்படங்களை தியேட்டர்களில் திரையிட விட மாட்டோம்’ என்று பா.ம.க-வும், வன்னியர் சங்கமும் ஏற்கெனவே சூளுரைத்திருந்தன. சமீபத்தில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துக்கும் இதேரீதியில் தியேட்டர் தரப்புக்குக் கடிதம் கொடுத்தார்கள். ஆனால், அந்தப் படம் பா.ம.க வலுவாக உள்ள வட மாவட்டங்களிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் சூர்யாவின் பட விவகாரம் குறித்துச் சில கேள்விகளைக் கேட்டோம்...

“தமிழகம் முழுவதும் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெற்றிகரமாக ஓடிவருகிறது. பா.ம.க-விடமிருந்து எதிர்ப்பு அடங்கிவிட்டதே..?’’

“வன்னியர்களைத் தவறாக சித்திரித்து ‘ஜெய் பீம்’ என்ற படம் எடுத்ததற்காக, வன்னிய மக்களிடம் நடிகர் சூர்யா பொதுமன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஏற்கெனவே நாங்கள் கூறியிருக்கிறோம். எனவே, இந்த விஷயத்தில் பொதுமன்னிப்புக் கேட்கவேண்டியது சூர்யாவின் கடமை. அதேசமயம், ‘இந்த விவகாரத்தைத் தனிமனித வெறுப்பாகக் கொண்டுபோகத் தேவையில்லை’ என்றும் மருத்துவர் ராமதாஸ் எங்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டிருக்கிறார். ஏனெனில், ‘அரசியலில், அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்லவேண்டிய நேரத்தில், இது போன்ற தேவையற்ற வழக்குகளில், பாட்டாளிச் சொந்தங்கள் தங்களது நேரத்தையும் சக்தியையும் செலவழித்துக்கொண்டிருக்க வேண்டாம்’ என்பது எங்கள் கட்சித் தலைமையின் எண்ணம். எனவேதான் எங்கள் தொண்டர்களும் அமைதி காத்துவருகின்றனர்.’’

“ஆனால், ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தைத் திரையிட வேண்டாம் என்று கூறி தியேட்டர் அதிபர்களுக்கு பா.ம.க-வினர் கடிதம் கொடுத்தார்களே?”

“ஆமாம்... ‘படத்தைத் திரையிட வேண்டாம்’ என்று கடிதம் கொடுத்து அறவழியில் எங்கள் போராட்டத்தைத் தொடர்கிறோம். அதற்காக நாங்கள் பயந்துவிட்டோம் என்று நினைத்துவிடாதீர்கள். வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின்போது, எங்கள் தலைமையின் குரலைக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்காக சென்னையை நோக்கி வந்த எங்கள் தொண்டர்களைப் பற்றி உங்களுக்கும் தெரியும்தானே... இப்போதும் சூர்யா, பொதுமன்னிப்புக் கேட்கவில்லை. ஆனாலும்கூட எங்கள் மருத்துவர் ஐயாவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நாங்கள் அமைதியாக இருக்கிறோம்!’’

“ஆனால், ‘வன்னிய இளைஞர்களைத் தொடர்ந்து சமூக விரோதிகளாகச் சித்திரித்துவருகிற பா.ம.க-வின் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் இந்தச் சமுதாயத்தின் கேடுகள்’ என்று வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த இராம.சுகந்தன் சொல்கிறாரே..?’’

“பா.ம.க-வுக்கு எதிராகச் செய்தி போட வேண்டும் என்று நினைத்தால், எல்லா வார்த்தைகளையும் பா.ம.க-வுக்கு எதிராக ஒட்டவைத்துவிட முடியும். ‘முதலில் குடும்பத்தை கவனியுங்கள். கட்சிப் பணி அப்புறம்’ என்று சொல்லக்கூடியவர் எங்கள் தலைவர். ‘நமது மாணவர்களும் இளைஞர்களும் வழக்குகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது. அரசியல் எதிர்ப்புகளை அரசியல் வடிவத்திலேயே எதிர்கொள்வோம்’ என்று அன்புமணி ராமதாஸ் திரும்பத் திரும்பச் சொல்லிவருகிறார். ஆனால், எங்களைப் பற்றி விமர்சிப்பவர்களின் காதுகளுக்கு இவையெல்லாம் ஏன் எட்டவே இல்லை?’’

ரயில் மீது பா.ம.க கல்லெறிந்தது வன்முறை அல்ல... அறச்சீற்றம்!

“அப்படியென்றால், வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின்போது, பா.ம.க-வினர் ரயில்மீது கல்லெறிந்து தாக்கியதெல்லாம் வன்முறை இல்லை என்கிறீர்களா?’’

“வன்முறைக்கும் அறச்சீற்றத்துக்குமான வித்தியாசம் உங்களுக்குத் தெரியாதா? 40 ஆண்டுகளாக எங்களது உரிமையைக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்... நீங்கள் மறுத்துக்கொண்டே இருக்கிறீர்கள். எங்கள் சமுதாயத்துக்கும் விகிதாசார முறையில், கல்வி, வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு செய்து தர மறுப்பது அரச வன்முறை இல்லையா? பாதிக்கப்பட்டுள்ள நாங்கள் ஓர் இடத்தில் ஒன்றுகூடி எங்கள் உரிமையைப் பெறுவதற்கான போராட்டம் நடத்தத் தயாராகிறோம். ஆனால், அந்தப் போராட்ட இடத்துக்கும்கூட எங்களைச் செல்லவிடாமல், வழிமறித்து திருமண மண்டபத்துக்குள் உட்காரவைக்கிறீர்களே... நாங்கள் என்ன காதுகுத்து விழாவுக்கா வந்திருக்கிறோம்... இப்படியொரு சூழலில், எங்களுக்கு அறச்சீற்றம் எழுமா, எழாதா... இதை எப்படி வன்முறை என்று சொல்கிறீர்கள்?’’

“ஒருகாலத்தில் ரஜினிக்கு எதிராகப் படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு ஓடியது, திரையைக் கிழித்தது என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்த பா.ம.க., இப்போது அறவழியில் போராட ஆரம்பித்திருப்பது, சூர்யா மீதான பயமா அல்லது ஆளுங்கட்சி மீதான பயமா?’’

“ரஜினிக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை அவர் ஊக்கப்படுத்தும்விதமாக நடித்ததை எதிர்த்துத்தான் போராடினோம். அடுத்து, சூர்யாவைக் கண்டு நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்... அவர் அரசியலுக்கு வருகிறாரா என்ன? ஆளுங்கட்சியான தி.மு.க-வைக் கண்டே நாங்கள் பயப்படுவதில்லை.”

“அப்படியென்றால், ‘ஜெய் பீம்’ படத்துக்கு எதிராகப் போராடி, படத்தைப் பெரிய அளவில் வெற்றியடையச் செய்ததுபோல் ஆகிவிட வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வினால் அடக்கி வாசிக்கிறீர்களா?’’

“ `ஜெய் பீம்’ படத்தின் கருத்து எங்களுக்கு எதிராக இருந்தது. எனவே, அந்தப் படத்தின் கருத்தியலை எதிர்த்தோம். ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் கருத்து எங்களைக் காயப்படுத்தவில்லை. ஆனாலும்கூட, `ஜெய் பீம்’ விவகாரத்துக்காக சூர்யா இன்னும் மன்னிப்பு கேட்கவில்லை என்பது கண்டனத்துக்குரிய விஷயம். எனவே, எங்களது அறவழி எதிர்ப்பை மட்டும் பதிவு செய்திருக்கிறோம். சட்டென்று கோபம் வருவது அனைவருக்கும் இயல்புதான்... ஆனால், கோபத்தை அடக்கி வழிநடத்தவேண்டியதுதான் ஒரு தலைமைக்கு அழகு. அந்தவகையில், ‘தனி மனித வெறுப்பு வேண்டியதில்லை’ என்று தன்மையோடு பொறுப்புணர்வு புரிந்து, எங்கள் கட்சித் தலைமை முடிவெடுத்திருக்கிறது. ஆனால், நீங்களாக வேறு அர்த்தங்கள் கற்பித்துக்கொண்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism