Published:Updated:

``திமுக சிறந்த கட்சி என மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை!'' - பா.ம.க திலகபாமா பேட்டி

'' 'இந்தத் தேர்தலில், வெற்றிபெறாவிட்டால் வாழ்க்கையே இல்லை' என்ற நெருக்கடியான சூழல் தி.மு.க-வுக்கு இருந்தது. எனவே, அதிகப்படியாக பணம் செலவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்!'' என்கிறார் பா.ம.க பொருளாளரான திலகபாமா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் பிஸியாகிவருகின்றன. 'அ.தி.மு.க உடனான கூட்டணி தொடர்கிறது. ஆனாலும் உள்ளாட்சித் தேர்தலில் கால நேரமின்மையைக் கருதி தனித்துப் போட்டியிடுகிறோம்' என்ற வித்தியாசமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது பா.ம.க.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 'கூட்டணி தொடரும்' என்பது போன்ற செய்திகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், பா.ம.க பொருளாளர் திலகபாமாவிடம் பேசினேன்.

''சமூகநீதியை வலியுறுத்திப் பேசுகிற பா.ம.க., கட்சியிலும் ஆட்சி அதிகாரத்திலும் பெண்களுக்கான பிரதிநிதித்துவ உரிமை பற்றிப் பெரிதாகப் பேசுவதில்லையே ஏன்?''

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

''ஏற்கெனவே அதிகாரத்துக்கு வந்துவிட்ட கட்சிகள் மகளிருக்காகச் செய்த திட்டங்கள் உங்களுடைய கவனத்துக்கு வந்திருக்கின்றன. அதேபோல், பா.ம.க-வும் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறபோது ஏனைய கட்சிகளைவிடவும் அதிக அளவில் மகளிருக்கான உரிமைகளை உறுதி செய்வார்கள்! கட்சி அளவிலேயே எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியிலாவது 'பொருளாளர்' பதவியில் ஒரு பெண் இருக்கிறாரா... ஏன், பொருளாதாரத்தை நிர்வகிக்கக்கூடிய அளவில் திறமையான ஒரு பெண் உறுப்பினர் அவர்களது கட்சியிலேயே இல்லையா? ஆனால், பா.ம.க-வில்தான் பொருளாளராக ஒரு பெண்ணைத்தான் நியமிக்க வேண்டும் என்று 2018-ம் ஆண்டில் கட்சி விதிகளையே திருத்தம் செய்தார்கள். இதுமட்டுமல்ல, பெண்களின் நலன் மீது எங்கள் ஐயாவுக்குக் கூடுதல் அக்கறை இருப்பதால்தான் 'நாடகக் காதல்' விவகாரத்தைத் தொடர்ந்து எதிர்த்துவருகிறார்.''

''கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆத்தூரில் போட்டியிட்ட நீங்கள் படுதோல்வி அடைந்ததற்கான காரணம் என்ன?''

''ஆத்தூர் தொகுதியில், ஐ.பெரியசாமி 60 கோடி ரூபாய் செலவழித்துத்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறார். எனவே, நான் டெபாசிட் இழந்ததற்காகக் கொஞ்சம்கூட வருத்தப்படவில்லை. அதேசமயம் ஐ.பெரியசாமிதான் வெற்றிக்காகப் பணத்தை இழந்திருக்கிறார். ஏனெனில், குடகனாறு பகுதியைச் சேர்ந்த 13 கிராமங்களில் ஐ.பெரியசாமிக்கு எதிராக மக்கள் கறுப்புக்கொடி காட்டினார்கள். 25 வருட காலமாக இந்தத் தொகுதியில் அவர் அரசியல் செய்துவந்தாலும் இதுவரையிலும் ஓர் அரசுக் கல்லூரியைக்கூட அவர் கொண்டுவரவில்லை. பூ, நெசவு என எந்தத் துறையிலும் வளர்ச்சியைக் கொண்டுவரவில்லை. இத்தனையையும் மீறி அவர் வெற்றிபெறுகிறார் என்றால், அது பணநாயகம்தானே!''

திலகபாமா போராட்டம்
திலகபாமா போராட்டம்

''பா.ம.க-வுக்கு வாக்குவங்கி பலமே இல்லாத திண்டுக்கல் மாவட்டத்தில் தொகுதி ஒதுக்கப்பட்டது குறித்து கூட்டணிக்குள் அப்போதே பலத்த சர்ச்சை கிளம்பியதுதானே?''

''நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள். ஆனால், தமிழ்நாட்டின் தென்பகுதியில் ஒரு புதிய இடத்தை உருவாக்க வேண்டும் என்றுதான் பா.ம.க நினைக்கிறது. அந்தவகையில், ஆத்தூர் தொகுதியில் பா.ம.க வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார் என்று செய்தியாகும் வகையில் நாங்கள் பணியாற்றியிருக்கிறோமா இல்லையா? எந்தவொரு வெற்றியும் ஒரே இரவில் நிகழ்ந்துவிடாது!''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''பா.ம.க-வின் தலைவர்களான மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரும்கூட ஆத்தூர் தொகுதிப் பிரசாரத்துக்கு வரவில்லைதானே?''

''மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பா.ம.க போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் செய்தார்கள்தான். ஆனால், கட்சியின் பொருளாளரான என்னுடைய திறமைமீது இவர்கள் இருவருக்கும் அதிக நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையை மெய்ப்பிப்பதுபோலவே வெறும் 25 நாள்கள் மட்டுமே பிரசாரம் செய்து 34,000 வாக்குகளைப் பெற்றிருக்கிறேன்; அதுவும் தென் மாவட்டமான திண்டுக்கல்லில். எனவே, இன்னும் கொஞ்சம் கூடுதல் கால அவகாசம் எனக்குக் கிடைத்து, தொகுதிக்குள் பணப்பட்டுவாடாவும் நடைபெறாமல் இருந்திருந்தால், ஐ.பெரியசாமியைக் காணாமல் போகச்செய்திருப்பேன்.''

ஐ.பெரியசாமி
ஐ.பெரியசாமி

''ஆத்தூர் தொகுதியில் பணம் செலவழித்துத்தான் தி.மு.க வெற்றி பெற்றது என்றால், ஐந்து தொகுதிகளில் பா.ம.க-வும் வெற்றி பெற்றிருக்கிறதே... அந்த வெற்றி எப்படிக் கிட்டியது?''

''பா.ம.க செல்வாக்கு இல்லாத ஆத்தூரில் போட்டியிட்டது ஏன் என்று நீங்கள்தான் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். ஆக, தமிழகத்தின் வட பகுதியில் பா.ம.க செல்வாக்கோடுதானே இருக்கிறது... அந்த செல்வாக்கில்தான் வெற்றியும் பெற்றிருக்கிறது.''

ஆற்றில் சடலமாக ஒதுங்கிய மகன்; அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்! - புதுச்சேரி சோகம்

''அப்படியென்றால், பா.ம.க வலுவாக இருந்தது வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டும்தானா?''

''நாங்கள் போட்டியிட்ட எல்லாத் தொகுதிகளிலுமே வலுவாகத்தான் இருந்தோம். எனவேதான், வெற்றி, தோல்வி வித்தியாசம் என்பது வெறும் 200-லிருந்து 500 வாக்குகளாக மட்டுமே இருக்கிறது. 'இந்தத் தேர்தலில், வெற்றிபெறாவிட்டால் வாழ்க்கையே இல்லை' என்ற நெருக்கடியான சூழல் தி.மு.க-வுக்கு இருந்தது. எனவே, அதிகப்படியாகப் பணம் செலவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்கள்!

'தொடர்ந்து 10 வருடங்களாக அ.தி.மு.க ஆட்சி செய்துவிட்டது. எனவே தி.மு.க-வுக்கு வாக்களிப்போம்' என்றுதான் மக்கள் நினைத்திருக்கிறார்கள். மற்றபடி 'தி.மு.க-தான் சிறந்த கட்சி... எனவே, அதைத் தேர்ந்தெடுப்போம் என்றெல்லாம் மக்கள் நினைக்கவில்லை' என்பது என் தனிப்பட்ட கருத்து.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''தி.மு.க-வோடு பா.ம.க நெருக்கம் காட்டிவருகிறது என்ற பேச்சு கிளம்பியிருக்கும் சூழலில், நீங்களோ 'தி.மு.க பணநாயகத்தால் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறது' என்கிறீர்களே?''

''தி.மு.க - பா.ம.க இடையே நெருக்கம் என்பதெல்லாம் உங்களுடைய யூகம். எந்தக் கட்சித் தலைவர்களோடும் எங்களுக்குப் பகை கிடையாது. அனைவருடனும் நட்போடுதான் பழகிவருகிறோம். அதனால்தான் ஐயா வீட்டுத் திருமண நிகழ்வில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்துகொண்டனர். ஐயாவும் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றுப் பழகினார். கொள்கை சார்ந்துதான், கட்சிகளுக்கிடையே சரி, பிழை என்பது குறித்தெல்லாம் நாங்கள் பேசிவருகிறோம். அந்தவகையில், மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு பா.ம.க எப்போதும் ஆதரவு அளித்துவருகிறது. மற்றபடி கூட்டணி என்றால், செய்தியாளர்களுக்கு அறிவிக்காமலா நாங்கள் கூட்டணி வைத்துவிடப் போகிறோம்!''

இரவு 10 மணிக்குப் பூட்டிய வீடு; 11 மணிக்குக் கொள்ளை! - சுற்றுலா சென்ற பொறியாளர் வீட்டில் துணிகரம்

''உயர் சாதியினர் 10 % இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கும் 'சமூகநீதி கண்காணிப்புக் குழு உதவி செய்யும்' என்று அந்த மக்கள் நம்புகிறார்களே... இதை பா.ம.க எப்படிப் பார்க்கிறது?''

''ஒவ்வொரு சமுதாயத்துக்கும், இனக்குழுவுக்கும், பிரிவுக்கும் கோரிக்கைகள் என்பது இருந்துகொண்டேதான் இருக்கின்றன. அந்தவகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் யார், ஒடுக்கப்பட்ட மக்கள் யார் என்பதையெல்லாம் அறிவதற்காக அந்தந்தக் காலகட்டங்களில் ஒவ்வொரு ஆணையம் அமைக்கப்பட்டே வந்திருக்கிறது.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அந்தவகையில் இப்போது 'சமூகநீதி கண்காணிப்புக்குழு' என்ற ஓர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தக் குழுவின் பங்களிப்பு என்ன, ஒவ்வொரு சமுதாயத்தினரும் இந்தக் குழு முன் வைக்கக்கூடிய கோரிக்கைகள் என்னென்ன, அதன் பின்னே உள்ள நியாய, அநியாயங்கள் என்னென்ன என்பது போன்ற விவரங்களெல்லாம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

நான் நம்புகிற சமூகநீதி கண்காணிப்புக்குழுவை, எங்கள் எதிரியும் நம்புகிறார்கள் என்பதற்காக அந்தக் குழுவை நான் தவறு சொல்ல முடியாது... அல்லவா! எனவே பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு