Published:Updated:

கூட்டணி தொடர்கிறது... உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துப் போட்டி!

திலகபாமா
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா

திலகபாமாவின் விநோத விளக்கம்...

கூட்டணி தொடர்கிறது... உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துப் போட்டி!

திலகபாமாவின் விநோத விளக்கம்...

Published:Updated:
திலகபாமா
பிரீமியம் ஸ்டோரி
திலகபாமா

“உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி” என்று தேர்தல் களத்தில் பட்டாசுத்திரியைக் கிள்ளி, பற்றவைத்திருக்கிறது பா.ம.க. அப்புறமென்ன... “இது கூட்டணி தர்மம் அல்ல... விரோதம்”, “ஜென்டில்மேனாக நடந்துகொள்வது பா.ம.க-வுக்கு நல்லது”, “எங்களை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை” என்றெல்லாம் சரவெடியாக வெடித்துச் சிதறுகிறது அ.தி.மு.க முகாம். இந்தச் சூழலில்தான் பா.ம.க-வின் பொருளாளர் திலகபாமாவிடம் பேசினோம்...

“கடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றிலெல்லாம் அ.தி.மு.க கூடவே இருந்துவிட்டு, ஏன் இந்த திடீர் முடிவு?”

“உள்ளாட்சித் தேர்தல் என்பது கட்சிக்காக உழைத்துவரும் அடிப்படைத் தொண்டர்களும் அரசியல் அதிகாரம் பெறும் வாய்ப்பைக்கொண்டது. தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களில், நாங்கள் ஏழு மாவட்டங்களில் வலுவாக இருக்கிறோம். அதனால், கட்சி நிர்வாகிகள் அனைவருமே தேர்தலில் போட்டியிட ஆவலுடன் இருக்கிறார்கள். கட்சியின் வளர்ச்சிக்காகவே இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் முடிவை பா.ம.க எடுத்திருக்கிறது.’’

“ஏழு மாவட்டங்களில் பலமாக இருக்கிறோம்; அதனால், தனித்துப் போட்டியிடுவோம் என்ற முடிவை எடுத்திருப்பது கூட்டணிக்குச் செய்கிற துரோகம் என்று விமர்சிக்கப்படுகிறதே..?’’

“அப்படி இல்லை... கூட்டணிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பே முதலில் உருவாகவில்லை. செப்டம்பர் 14-ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியாகிறது... மறுநாள் 15-ம் தேதியே வேட்புமனுத் தாக்கலும் ஆரம்பித்துவிட்டது. பேச்சுவார்த்தை நடத்த ஏது அவகாசம்? தவிர, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது அந்தந்தப் பகுதி மக்களின் தனித்துவத்தைப் பொறுத்தே அமையும். சொல்லப்போனால் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்களும்கூட நிறைய பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். எங்கள் முடிவு அவர்களுக்கும் நன்மையைத்தான் அளிக்கும்.’’

“ஆனால், ‘சொந்தக் கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாதவர் எடப்பாடி பழனிசாமி. எனவே, நாம் தனித்துப் போட்டியிடுவோம்’ என்று மருத்துவர் ராமதாஸ் பேசியதாகச் செய்திகள் வெளியாகினவே?’’

“அவை செய்திகள் அல்ல... வதந்திகள். உள்ளரங்கில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஊடகத்தினர் யாரும் பங்கேற்கவில்லை. ஆனாலும்கூட மருத்துவர் ராமதாஸ், இந்த நிகழ்வில் அ.தி.மு.க-வைக் குறை கூறியதாகச் சில ஊடகங்கள் வதந்திகளைப் பரப்பின. இதை நம்பிய அ.தி.மு.க தலைவர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கோபத்தில் சில வார்த்தைகளைப் பேசிவிட்டனர். மற்றபடி அ.தி.மு.க - பா.ம.க - பா.ஜ.க கூட்டணி இப்போதும் அப்படியே தொடர்கிறது. யாரும் விலகவில்லை. ஆனாலும், இந்த உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் பா.ம.க தனித்துப் போட்டியிடுகிறது!’’

“ஏற்கெனவே அன்புமணி ராமதாஸ், ‘அ.தி.மு.க கூட்டணியில், பா.ம.க இல்லையென்றால் ஒன்றுமே இல்லை’ என்று பேசியதாகவும் சர்ச்சை எழுந்ததுதானே?’’

“பொதுவாக, தலைவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கிற வகையில், ‘ஆமாம்... நம் கட்சியால்தான் அவர்களும் ஜெயித்தார்கள்’ என்று சொல்லவேண்டியது கட்டாயமாக இருக்கிறது. அந்தவகையில் இதையெல்லாம் யாரையும் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எங்கள் தரப்பில் மட்டுமல்ல... அ.தி.மு.க தரப்பிலிருந்தும் இது போன்ற வசனங்கள் வந்தன. ‘வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததால், எங்கள் வாக்குவங்கி குறைந்துவிட்டது’ என்று அ.தி.மு.க தலைவர்களும் பேசினார்கள்தானே!’’

கூட்டணி தொடர்கிறது... உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே தனித்துப் போட்டி!

“சமீபத்தில், தமிழக அரசு கொண்டுவந்த நீட் தேர்வு விலக்கு தீர்மானத்துக்கு பா.ம.க ஆதரவு தெரிவித்திருப்பதுகூட ‘கூட்டணிக்கு முரணாக பா.ம.க செயல்படுகிறது’ என்கிற விமர்சனத்தை ஏற்படுத்தியிருக்கிறதே?”

“கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில், வெற்றியைக் கருத்தில்கொண்டு அரசியல் கட்சிகள் ஒன்று சேர்வது. அதற்காக கொள்கைரீதியாக ஒவ்வொரு கட்சி எடுக்கிற முடிவுக்கும் ஜால்ரா அடிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சரியாகச் செயல்படுபவர்கள் எதிர்க்கட்சியினராக இருந்தாலும்கூட அவர்களைப் பாராட்டுவதும், கூடவே இருக்கிறவர்கள் தவறு செய்தால்கூட தட்டிக் கேட்பதும்தான் எங்கள் மருத்துவர் அய்யாவின் பழக்கம். அப்படித்தான் எங்களையும் வளர்த்து வைத்திருக்கிறார். நீட் தேர்வு விலக்கு என்பது பா.ம.க-வின் நீண்டநாள் கோரிக்கை. எனவே, தீர்மானத்தை ஆதரித்திருக்கிறோம். இதில் என்ன தவறு?’’

“ஆனால், 2019-ம் ஆண்டு மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கூட்டணி தர்மத்துக்காகவே பா.ம.க ஆதரித்திருக்கிறதே?’’

“ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்தச் சூழல்களைப் பொறுத்து எடுக்கப்படுகிற முடிவுகளையெல்லாம், ஒரே அளவுகோல் கொண்டு பார்ப்பது எந்த அளவுக்குச் சரியாக இருக்கும்... தண்ணீரையும் சீனியையும் எப்படி ஒரே அளவுகோலில் அளக்க முடியும்?

மாறுகிற மக்களுக்குத் தேவையான அரசியலை, மாறுகிற இடத்தில் இருந்தால் மட்டுமே நாம் கொடுக்க முடியும். அந்தவகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் மக்களுக்காக, கட்சிக்காக நல்ல மாற்றங்களைக் கொடுப்பவர்தான் தலைவராகவே இருக்க முடியும். இந்த மாற்றங்கள் சுயநலமாக இருக்கக் கூடாது என்பது மட்டுமே இங்கே முக்கியம்!’’

“அப்படியென்றால் பா.ம.க சொல்லிவரும் ‘மாற்றம்... முன்னேற்றம்’ என்பது இதுதான் என்று புரிந்துகொள்ளலாமா?’’

“மாற்றம் என்பதற்கான பொருள் பொதிந்த கனமான அர்த்தத்தை நான் சொல்லி முடித்துவிட்டேன். ஆனால், அதை நீங்கள் எப்படிப் புரிந்துகொண்டீர்களோ... அது எனக்குத் தெரியாது!’’