Published:Updated:

`மக்களுக்குத் தொண்டு செய்வதே என் கடமை!'-சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றிய பாமக

ரேவதி
ரேவதி ( எம்.விஜயகுமார் )

``சேலத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி முழுமையாக நிறைவேற்றிக் கொடுப்பேன். மக்களுக்குத் தொண்டு செய்வதை என் கடமையாக நினைத்துப் பாடுபடுவேன்'' என்று சேலம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக வெற்றி பெற்ற ரேவதி கூறினார்.

சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 29 மாவட்ட கவுன்சிலர்களில் அ.தி.மு.க தனித்து 18-ம் பேரும், அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க 4 பேரும், தே.மு.தி.க ஒருவரும் என அ.தி.மு.க கூட்டணியில் மொத்தம் 23 பேர் வெற்றி பெற்றார்கள். தி.மு.கவில் 6 பேர் வெற்றி பெற்றார்கள். இவர்கள் அனைவரும் வாக்களித்து மாவட்ட ஊராட்சி குழுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ரேவதி
ரேவதி
எம். விஜயகுமார்

அதற்கான தேர்தல் இன்று காலை சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் அருகே உள்ள பழைய நாட்டாண்மை கழக கட்டடத்தில் நடைபெற்றது. இத்தேர்தல் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க கூட்டணி சார்பாக பா.ம.க-வைச் சேர்ந்த மேச்சேரி 3வது வார்டு மாவட்ட கவுன்சிலர் ரேவதியும், தி.மு.க சார்பாக ஆத்தூர் 26 வார்டு மாவட்ட கவுன்சிலர் நல்லம்மாளும் போட்டியிட்டார்கள்.

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தேர்தலில் ஓமலூரைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் அழகிரி, தாரமங்கலத்தைச் சேர்ந்த அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சின்னசாமி, கெங்கவல்லியைச் சேர்ந்த அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் ராஜா ஆகிய 3 பேரும் வராததால் இந்தத் தேர்தலில் 26 பேர் வாக்களித்தார்கள். இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணிக் கட்சியின் பா.ம.க வேட்பாளர் ரேவதி 22 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க கவுன்சிலர் நல்லம்மாள் 4 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.

ரேவதிக்கு பாராட்டு
ரேவதிக்கு பாராட்டு

மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக வெற்றி பெற்ற ரேவதிக்கு ஆட்சித்தலைவர் இராமன் வாழ்த்துகளைக் கூறினார். அதையடுத்து அ.தி.மு.கவினர்கள், பா.ம.கவினர், தே.மு.தி.கவை சேர்ந்தவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துகள் கூறினார்கள். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக வெற்றி பெற்ற ரேவதியிடம் பேசியபோது, ''என்னை வெற்றி பெறச் செய்த கவுன்சிலர்களுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், பா.ம.க நிறுவனத் தலைவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சேலத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி முழுமையாக நிறைவேற்றிக் கொடுப்பேன். மக்களுக்குத் தொண்டு செய்வதை என் கடமையாக நினைத்துச் செயல்டுவேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு