Published:Updated:

`குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கூடாது’ - போக்சோ வழக்கில் உச்ச நீதிமன்ற அதிரடியின் பின்னணி

போக்சோ வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் காரணமாக இருந்த வழக்கின் விவரமும் அது உச்ச நீதிமன்றத்துக்கு வந்த காரணத்தின் பின்னணியும் என்ன?

மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக 39 வயது நபர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் “சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளைத் துணியை அகற்றாமல் அழுத்துவது பாலியல் வன்கொடுமை அல்ல, ஏனெனில் தோலுக்கும் தோலுக்கும் தொடர்பு இல்லை, மேலும் இது பாலியல் வன்கொடுமைக்கான குறைந்தபட்ச குற்றச்சாட்டாகவே அமையும். எனவே குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்ய வேண்டும்” என மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திரா, பேலா எம்.திரிவேதி அடங்கிய அமர்வு முன் 18.11.2021 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவில் “நீதிமன்றங்கள் பாலியல் வன்கொடுமைக்கான நோக்கத்தைப் பார்க்க வேண்டுமே தவிரத் தோலுக்கும் தோலுக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லை என்பதைக் கவனிக்கக் கூடாது. பாலியல் குற்றத்தில் அதுவும் சிறுவர்கள் மீது தொடரப்படும் பாலியல் வன்கொடுமை புகார்களில் தோலும் தோலும் தொடர்பு இருக்கிறதா இல்லையா என்றளவில் குற்றத்தைச் சுருக்குவது ஒரு குறுகிய மற்றும் மோசமான விளக்கமாக மட்டுமல்லாமல் அரசியலமைப்பின்மீது நிகழ்த்தப்படும் அபத்தமாகவும் அமைந்திருக்கிறது.

போக்சோ
போக்சோ

மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவித உணர்வுமின்றி பாலியல் வன்கொடுமையைச் சட்டப்பூர்வமாக்கியுள்ளது. மேலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் சட்ட விதிகளைப் பயன்படுத்திக் குற்றவாளிகள் தப்பிக்க அனுமதிக்கும்படி இருந்துவிடக் கூடாது” எனக் கூறியதோடு குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.

நீலகிரி: 3 வயது பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை! -  போக்சோ வழக்கில் 70 வயது முதியவர் கைது

மும்பை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போக்சோ வழக்கின் விவரம்: 

2016-ம் ஆண்டு டிசம்பரில், 39 வயது நபர் ஒருவர் 12 வயது சிறுமியைப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரில் “குற்றம்சாட்டப்பட்டவர் தனது மகளை அவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளை அழுத்தியும், அவரின் பைஜாமாவை அகற்றவும் முயன்றார்” எனவும் சிறுமியின் தாய் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அந்த நபர் மீது போக்சோ-வில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போக்சோ வழக்குகள்
போக்சோ வழக்குகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பு மோசமான முன்னுதாரணமாகிவிடும்”

“பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் மும்பை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிக மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதுபோன்ற தீர்ப்புகளால் குழந்தைகள் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து வெளியில் சொல்லும் தைரியத்தை இழந்துவிடுவார்கள். எனவே அதை ரத்து செய்ய வேண்டும்” எனச் சமூக ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்ததோடு மேல்முறையீடும் செய்தனர்.

இந்திய அட்டர்னி ஜெனரல்களில் ஒருவரான கே.கே.வேணுகோபால் “மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பு மூர்க்கத்தனமானது. இந்தத் தீர்ப்பு மாற்றப்படாவிட்டால் வருங்காலங்களில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான வழக்குகளுக்கு இது ஒரு முன்னுதாரணாகிவிடும். நாளையே, ஒருவர் அறுவைச் சிகிச்சை கையுறைகளை அணிந்து, ஒரு பெண்ணின் முழு உடலையும் தொட்டுத் தடவினால், உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி அவருக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாத சூழல் உருவாகும்” எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

மும்பை உயர்நீதிமன்றம்
மும்பை உயர்நீதிமன்றம்

“பெண் குழந்தைக்கு எதிரான பாலியல் அத்துமீறல் வழக்கில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது” எனக் குழந்தைகள் உரிமைச் செயல்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

“17 நிமிடத்துக்கு ஒரு போக்சோ வழக்குப் பதிவாகிறது”

2007-இல் வெளியான ஓர் ஆய்வுப்படி ‘இந்தியாவில் மூன்று குழந்தைகளில் இருவர் உடல் ரீதியிலான வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பன்னிரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளில் 53 சதவிகிதம் பேர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை பாலியல் வன்கொடுமை/அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்’ எனத் தகவல்கள் சொல்கின்றன. 2020-ம் ஆண்டுக்கான தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் போக்சோ சட்டத்தின்கீழ் சுமார் 43 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு 12 நிமிடத்துக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் ஒன்றாவது பதிவாவதாகவும் சொல்லப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகளைச் செய்தவர்கள் உறவினர்களாக, நண்பர்களாக இருக்கும்பட்சத்தில் பல நேரங்களில் அது வழக்காகப் பதிவாவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

போக்சோ
போக்சோ
விகடன்

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இந்தத் தீர்ப்பு பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது” எனவும் வருத்தம் தெரிவித்தனர். இப்படிப் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்த அழுத்தமே உச்ச நீதிமன்றமே தலையிட்டு இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியிருக்கிறது என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு