Published:Updated:

மோடி, அமித் ஷா மீதான கடும் விமர்சனம்; பா.ஜ.க தொடர் போராட்டம்! - நெல்லை கண்ணன் கைது?

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் போலீஸார் நெல்லை கண்ணனைக் கைது செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நெல்லை கண்ணன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

`பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்' என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதேநேரம், உடல்நலக் குறைவால் நெல்லை கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

`மோடி, அமித் ஷா மீது கடுமையான விமர்சனம்!’ -நெல்லை கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு

மோடி, அமித் ஷா ஆகியோரைக் கடுமையாக விமர்சித்த நெல்லை கண்னனை உடனடியாகக் கைது செய்யக் கோரி தமிழக பா.ஜ.கவினர் போர்க்கொடி தூக்கினர். அவரை உடனடியாகக் கைது செய்யக் கோரி பா.ஜ.க சார்பில் சென்னை மெரினா காந்தி சிலை முன்பாக இன்று போராட்டமும் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜ.க போராட்டம்
பா.ஜ.க போராட்டம்
கே.ஜெரோம்

இந்தநிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் தங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த விடுதிக்கு சென்ற பெரம்பலூர் போலீஸார், நெல்லை கண்ணனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரைக் கைது செய்ய நெல்லை போலீஸார் பெரம்பலூர் விரைந்துள்ளனர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.