Published:Updated:

உத்தரப் பிரதேசத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா... போலீஸின் ஆட்சியா?!

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில், காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்டனத்துக்குள்ளாகிவருகின்றன.

உத்தரப்பிரதேசம், இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்டது மட்டுமல்லாது, இந்திய நாடாளுமன்றத்துக்கு 80 உறுப்பினர்களை அனுப்புகின்ற மாநிலமும் கூட. டெல்லியைப் பிடிக்க வேண்டுமென்றால், லக்னோ (உத்தரப்பிரதேச தலைநகரம்) வழியாகத்தான் செல்ல வேண்டும் என அரசியல் பழமொழி சொல்லப்படுவதுண்டு. மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு உத்தரப்பிரதேசம் மிகவும் முக்கியம். அதனால்தான், உத்தரப் பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறிவருகிறது.

அமித் ஷா
அமித் ஷா

சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் ஆட்சிக்குப் பிறகு, கடந்த 2017-ம் ஆண்டு, உத்தரப் பிரதேச அரியணையைப் பிடித்தது பி.ஜே.பி. 404 உறுப்பினர்களைக்கொண்ட உ.பி சட்டப்பேரவையில், 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பி.ஜே.பி வென்றது. தேர்தலின்போது யாரும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக கோரக்பூர் எம்.பி-யாக இருந்த சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத், உ.பி-யின் முதல்வராக நியமிக்கப்பட்டார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத், `எம்.பி யோகி ஆதித்யநாத்' மீது இருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார். எம்.பி-யாக இருந்த காலத்தில், யோகி ஆதித்யநாத் மீது முந்தைய அரசுகள் தொடர்ந்திருந்த கிரிமினல் வழக்குகள் பலவும் நிலுவையில் இருந்துவந்தன. அவற்றை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு திரும்பப்பெற்றுக்கொண்டது.

உ.பி-யில் போலீஸ் என்கவுன்டர்கள் நாளுக்கு நாள் அதிகமானது. இதற்கு, மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஐ.நா அமைப்பும் உ.பி-யில் நிகழ்த்தப்பட்ட காவல்துறை என்கவுன்டர் தொடர்பாகக் கவலைதெரிவித்து அறிக்கை வெளியிட்டது.

கஃபில் கான்
கஃபில் கான்
C.A.A நெருப்பு: இந்தியா தன்னுடைய நட்பு நாடுகளை இழந்து வருகிறதா?

கஃபில் கான்

கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி மருத்துவமனையில், கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையால், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறக்க நேர்ந்தது. இதற்கு, அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த கஃபில் கான்தான் காரணம் எனக்கூறி, உ.பி அரசு அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு விடுதலை பெற்றார்.

அரசின் துறை ரீதியான விசாரணையும் அவரை நிரபராதி என அறிவித்துவிட்ட பிறகும், புதிய விசாரணைக்கு உத்தரவிட்டது உ.பி அரசு. சி.ஏ.ஏ எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக கஃபில் கான் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். போராடி ஜாமின் பெற்ற பிறகு, மீண்டும் அவர்மீது பொது பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். உ.பி அரசும் காவல்துறையும் கஃபில் கானை தொடர்ந்து குறிவைத்துப் பழி வாங்கிவருவதாக அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

பி.ஜே.பி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணின் குடும்பத்தினர் தொடர்ந்து தாக்கப்பட்டனர். குல்தீப் சிங் செங்கர் ஜாமீனில் வெளியில் வந்த பிறகு, புகார் கொடுத்த பெண்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவரின் உறவினர்கள் இருவர் இறந்துவிட்டனர். புகார் கொடுத்த பெண் படுகாயம் அடைந்தார். உச்ச நீதிமன்றம் தலையிட்டு, வழக்கின் விசாரணையை டெல்லிக்கு மாற்றியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டது.

முன்னாள் பி.ஜே.பி எம்.பி சின்மயானந்த் மீது தற்போது எழுப்பப்பட்டுள்ள பாலியல் புகாரையும் உ.பி நிர்வாகம் சரியாகக் கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உ.பி போலிஸ்
உ.பி போலிஸ்

சி.ஏ.ஏ போராட்டங்கள்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சி.ஏ.ஏ) எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. மற்ற மாநிலங்களில் பெரிய அசம்பாவிதம் ஏற்படாத நிலையில், பி.ஜே.பி ஆளுகிற மாநிலங்களில்தான் போராட்டங்கள் ஒடுக்குமுறை கொண்டு அடக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 18 இளைஞர்கள் காவல்துறையால் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் மாணவர்கள் மீது காவல்துறை கொடூரமாக நடந்துகொண்ட காட்சிகள் இணையத்தில் வெளிவந்தன.

மேலும், சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களில் உருவாக்கப்பட்ட வன்முறையின்போது, பொதுச் சொத்துகள் சேதம் அடைந்தன. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று உ.பி நிர்வாகம் முஸ்லிம் அமைப்புகளிக்கு நோட்டீஸ் அனுப்பி, இழப்பீடும் வசூலித்துள்ளது. இது, சட்டத்துக்குப் புறம்பானது என நீதிமன்றம் தலையிட்டு தடைவிதித்துள்ள சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

தற்போது, மீண்டும் சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் பெயர், புகைப்படம் மற்றும் முகவரி போன்ற தகவல்களை பேனராக அடித்து ஒட்டியுள்ளது உ.பி அரசு.

சர்ச்சைக்குரிய பேனர்
சர்ச்சைக்குரிய பேனர்

அதில், அவர்கள் தரவேண்டிய இழப்பீட்டுத் தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது, அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று சர்ச்சை வெடித்தது. அதைத் தொடர்ந்து, நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களின் தகவல்களை இதுபோல் பொதுவெளியில் பேனர் அடித்து ஒட்டுவது மிகவும் அநியாயமானது எனக்கூறி, அவற்றை அகற்ற வேண்டும் என உ.பி அரசுக்கு உத்தரவிட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளாக உ.பி-யில் நடைபெற்றுவருகிற பி.ஜே.பி ஆட்சியில், காவல்துறை மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. உ.பி -யில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா... போலீஸின் ஆட்சியா என எதிர்க் கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து கேள்வியெழுப்பிவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு