Published:Updated:

`கனிம வளக் கொள்ளை குறித்து புகார் தெரிவித்ததால், என் மீதே வழக்கு போடுகிறார்கள்!' - வேலூர் கவுன்சிலர்

கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்யும் தாசில்தார் செந்தில்குமார்

தி.மு.க கவுன்சிலர் சுதாகர் மீது சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கொடுத்த புகாரின்பேரில், சத்துவாச்சாரி போலீஸார் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

`கனிம வளக் கொள்ளை குறித்து புகார் தெரிவித்ததால், என் மீதே வழக்கு போடுகிறார்கள்!' - வேலூர் கவுன்சிலர்

தி.மு.க கவுன்சிலர் சுதாகர் மீது சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கொடுத்த புகாரின்பேரில், சத்துவாச்சாரி போலீஸார் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

Published:Updated:
கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்யும் தாசில்தார் செந்தில்குமார்

வேலூர் மாநகராட்சி, 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சுதாகர் மீது சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கொடுத்த புகாரின்பேரில், சத்துவாச்சாரி போலீஸார் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக, வருவாய் ஆய்வாளர் யுவராஜ் கொடுத்திருக்கும் புகார் மனுவில், ‘‘கடந்த 10-01-2023 அன்று மதியம் 12 மணியளவில், எனது அலுவலகத்தில் நான் இருந்தபோது, கவுன்சிலர் சுதாகர் என்னைச் சந்திக்க வந்தார். அலமேலுமங்காபுரம் மதிநகர் பகுதியில் அவர் நடத்திவரும் செங்கல் சூளைக்குள் ‘அனுமதியின்றி கிராம உதவியாளர் சுபாஷ் சந்திரபோஸை உள்ளே அனுப்பி புகைப்படம் எடுக்கச் சொன்னது ஏன்?’ என ஆவேசமாகக் கேட்டார். அதற்கு நான், ‘அனுமதியில்லாமல் சூளைக்கு மண் எடுத்துச்செல்வதாகத் தொலைபேசி மூலம் எங்களுக்குப் புகார் வந்தது. அதன் காரணமாகத்தான் கிராம உதவியாளரை அனுப்பி பார்க்கச் சொன்னேன்’ என்றேன். இதனால், ஆத்திரமடைந்த சுதாகர் என்னை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார். பணி செய்யவிடாமல் தடுத்தார். அவர்மீது நடவடிக்கை எடுங்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ்
சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ்

அதன்பேரில், அரசு அலுவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாகப் பேசுதல், மிரட்டுதல் ஆகிய மூன்று பிரிவுகளின்கீழ் ஆளுங்கட்சி கவுன்சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், ‘‘வருவாய் ஆய்வாளர் யுவராஜ், இயற்கை வளங்களைச் சூறையாடும் கும்பலுடன் சேர்ந்துகொண்டு என்மீது பொய்ப் புகார் கொடுத்திருக்கிறார்’’ என்று பதிலுக்குக் கவுன்சிலர் சுதாகரும் ஆன்லைன் புகார் ஒன்றைப் பதிவுசெய்திருக்கிறார். கவுன்சிலர் சுதாகர் கொடுத்திருக்கும் மனுவில், ‘‘எனது வார்டுக்குட்பட்ட மூலக்கொல்லைப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் இருக்கின்றன. சத்துவாச்சாரி பகுதி-5ல் வசிக்கும் சி.கே.சிவாஜி மற்றும் அவர் குடும்பத்தினர் மூலக்கொல்லைப் பகுதியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், சட்டவிரோதமாக மண் அள்ளியும், கற்களை வெட்டியும், வெடிவைத்து தகர்த்தும் வருவாய்த்துறையினரின் துணையோடு விற்பனை செய்துவருகிறார்கள்.

இது குறித்து, அந்தப் பகுதி மக்கள் ‘கவுன்சிலர்’ என்ற முறையில் என்னிடம் முறையிட்டனர். அதன்பேரில், நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் 09.01.2023 அன்று புகார் மனு அளித்தேன். அந்தப் புகாரில் சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் மீதும் குற்றம்சாட்டியிருந்தேன். இதை முன்விரோதமாகக் கருதி என் செங்கல் சூளையில் கிராம உதவியாளரை அனுப்பி வருவாய் ஆய்வாளர் யுவராஜ் புகைப்படம் எடுக்கச் சொல்லியிருக்கிறார். பின்னர், வருவாய் ஆய்வாளர் அழைத்ததன்பேரில்தான் நான் அவரது அலுவலகத்துக்குச் சென்றேன். அப்போது அவர், ‘என் பெயரிலும் தாசில்தார் பெயரிலும் கலெக்டரிடம் ஏன் புகார் கொடுத்தீர்கள்? எனவே, தாங்கள் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்துவதாக தாசில்தார் வழக்கு போடச் சொல்லியிருக்கிறார்’ என்றார். அதற்கு நான், ‘மாவட்ட ஆட்சியரிடம் மண் திருடுபவர்கள் குறித்து அளித்த புகார் மனுவின்பேரில், நீங்கள் ஏன் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை’ எனக் கேட்டேன்.

சர்ச்சைக்குள்ளான மூலக்கொல்லைப் பகுதி
சர்ச்சைக்குள்ளான மூலக்கொல்லைப் பகுதி

அதோடு, ‘150 அடி ஆழத்துக்கு மண் அள்ளியும், கற்களை வெட்டி எடுத்தும் விற்பனை செய்த கும்பலுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்களா?’ என்றும் கேள்வி எழுப்பியதால், வருவாய் ஆய்வாளர்தான் என்னை ஒருமையில் தகாத வார்த்தைகளில் பேசினார். இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதைப் பொது நலன்கருதி தடுக்கச்சொன்ன என்மீதே பொய் வழக்கு புனைந்து, உயிருக்கும் உடமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே, கவுன்சிலர் சுதாகரின் செங்கல் சூளைக்குள் சென்று வேலூர் தாசில்தார் செந்தில்குமார் வாக்குவாதம் செய்வதைப்போன்ற வீடியோ காட்சி வெளியாகி, பரபரப்பைக் கூட்டியிருக்கின்றது.

அந்தக் காட்சியில், தாசில்தார் செந்தில்குமார் சூளைக்குள் வரும்போது, சுதாகரின் உதவியாளர் செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். அவரைப் பார்த்து, ‘‘போனை கீழே வை. வீடியோ ஆஃப் பண்ணு. எதுக்கு வீடியோ எடுக்கிற’’ என்று சத்தம் போடுகிறார். அதற்கு கவுன்சிலர் சுதாகர், ‘‘என் மேல என்ன தப்பு இருக்கு. கனிமவளக் கொள்ளைத் தொடர்பாக சிவாஜி மீது கலெக்டரிடம் புகார் கொடுத்தேன். அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த என்கிட்ட வந்திருக்கீங்க. நான் மண் கடத்துவதாகச் சொல்லி போட்டோ எடுக்கிறீங்க. அப்புறம் என் மேலயே புகார் கொடுப்பீங்க...’’ என்கிறார்.

கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்யும் தாசில்தார் செந்தில்குமார்
கவுன்சிலரிடம் வாக்குவாதம் செய்யும் தாசில்தார் செந்தில்குமார்

இதையடுத்து, அந்த இடத்தைவிட்டு தாசில்தார் கிளம்புவதோடு காட்சிகள் முடிகின்றன. மூலக்கொல்லைப் பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளைக்கு எதிராக டிசம்பர் மாதமே மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் வேறொரு நபர் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனு மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. ‘‘எது எப்படியோ, கனிமவளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதில் ஒவ்வொருவருக்கும் கடமையும், பொறுப்பும் இருக்க வேண்டும். அதைச் சுரண்டி சூறையாடும் நபர்கள் மீதும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுக்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.