Published:Updated:

`நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்!'- முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் காவல்நிலையத்தில் புகார்

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதாக சேலம் காவல்நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது.

கட் -அவுட்
கட் -அவுட் ( எம்.விஜயகுமார் )

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஶ்ரீ மரணமடைந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்நிலையில் சேலத்திலும் முதல்வருக்கு வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பலர் மீது வழக்கு தொடுக்க சேலம் பள்ளப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள் சேலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

கட் அவுட்
கட் அவுட்

இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பிரவின், ``சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏவும், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியுமான வெங்கடாசலம் தன் மகன் ஜனார்த்தனன் திருமணத்தைக் கடந்த 11ம் தேதி சேலம் மூன்று ரோடு அருகே உள்ள வரலட்சுமி திருமண மண்டபத்தில் நடத்தினார்.

இத்திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செல்லூர் ராஜு, அன்பழகன், உதயகுமார் துரைக்கண்ணு, செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி, சி.வி.சண்முகம், கருப்பண்ணன் வெள்ளமண்டி நடராஜன் உள்ளிட பலரும் கலந்து கொண்டார்கள். அவர்களை வரவேற்பதற்காகத் திருமணம் மண்டபம் உள்ள மூன்று ரோட்டிலிருந்து வெங்கடாசலம் எம்.எல்.ஏ., வீடு உள்ள புதுரோடு வரை நீதிமன்ற உத்தரவுகளை மீறி முதல்வரின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ வெங்கடாசலம்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ வெங்கடாசலம்

கடந்த 11ம் தேதி வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள் பிரிக்கப்படாமல் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது. இது போக்குவரத்துக்குப் பெரும் இடையூறாக இருக்கிறது. ஹெல்மெட் போடாமல் வருபவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கும் காவல்துறையினருக்கு இந்த கட் அவுட்கள் கண்ணில்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஏழைகளுக்கு ஒரு நியாயம், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு நியாயமாக இருக்கிறது.

கட் அவுட் கலாசாரம் என்பது சமூக விரோதச் செயல். நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளும் இதற்குத் துணைபோவது வேடிக்கையாக இருக்கிறது. அராஜகமாக கட் அவுட் வைத்த சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ வெங்கடாசலம் , கட் அவுட் வைக்கக் காரணமாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். புகார் மீது சி.எஸ்.ஆர் நகல் கேட்டதற்கு சட்ட ஆலோசனை செய்து மாலை சி.எஸ்.ஆர் நகல் தருவதாகக் கூறி இருக்கிறார்கள்'' என்றார்.

கட் அவுட்
கட் அவுட்

இதுபற்றி சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏவும், சேலம் மாநகர் மாவட்டச் செயலாளருமான வெங்கடாசலத்திடம் கேட்டதற்கு, ''நல்ல காரியம் என்பதால் கட் அவுட் வைத்து விட்டோம். இரவோடு இரவாக கட் அவுட்கள் பிரித்து விட்டோம். அண்ணன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, `இனி கட் அவுட்கள் வைக்கக் கூடாது' என்று கடுமையாக உத்தரவிட்டிருப்பதால் இனி சேலம் அ.தி.மு.கவினர் யாரும் கட் அவுட்கள் வைக்க மாட்டோம்'' என்றார்.