Published:Updated:

`எடப்பாடி மீது வழக்கு பதிந்த காவல்துறை, கே.என்.நேரு மீது பதியாதது ஏன்?’ - கொதிக்கும் அதிமுக

கே.என் நேரு

கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம், அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கே.என்.நேருவுக்கு இதில் தொடர்பே இல்லாததுபோல இந்த விவகாரத்தை அரசு கையாள்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

Published:Updated:

`எடப்பாடி மீது வழக்கு பதிந்த காவல்துறை, கே.என்.நேரு மீது பதியாதது ஏன்?’ - கொதிக்கும் அதிமுக

கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி காவல் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம், அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கே.என்.நேருவுக்கு இதில் தொடர்பே இல்லாததுபோல இந்த விவகாரத்தை அரசு கையாள்கிறது என்ற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

கே.என் நேரு

திருச்சி ஸ்டேட் பாங்க் ஆபீஸர்ஸ் காலனியில் புதிதாகக் கட்டப்பட்ட இறகுப் பந்து மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார். அந்த மைதானம் திருச்சி சிவாவின் வீட்டுக்கு அருகிலேயே இருந்தும், அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அங்கு வைக்கப்பட்ட கல்வெட்டில்கூட திருச்சி சிவாவின் பெயர் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த அவரின் ஆதரவாளர்கள், மைதானத்தைத் திறந்துவைக்கச் சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்துக் கறுப்புக்கொடி காட்டினர்.

இரு தரப்புக்கும் உள்ளூர பல ஆண்டுகளாகப் போட்டி இருந்துவந்தாலும், சொந்தக் கட்சி அமைச்சருக்கே வெளிப்படையாக கறுப்புக்கொடி காட்டி அவமதித்தது இதுவே முதல்முறை. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் சிலர், திருச்சி சிவாவின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கார், இரு சக்கர வாகனம், நாற்காலிகளை அடித்து நொறுக்கினர்.

`எடப்பாடி மீது வழக்கு பதிந்த காவல்துறை, கே.என்.நேரு மீது பதியாதது ஏன்?’ - கொதிக்கும் அதிமுக

இந்த நிலையில், கறுப்புக்கொடி காட்டியது தொடர்பாக திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் ஒன்பது பேரை போலீஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். காவல் நிலையம் என்றுகூட பார்க்காமல் அங்கும் உள்ளே நுழைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவா ஆதரவாளர்களை சரமாரியாகத் தாக்கினர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இந்த நிலையில், “திருச்சி மத்திய மாவட்டத்தைச்‌ சேர்ந்த தலைமைச்‌ செயற்குழு உறுப்பினர்‌ காஜாமலை விஜய்‌, மாவட்ட துணைச்‌ செயலாளர்‌ தி.முத்துசெல்வம்‌, மாவட்டப்‌ பொருளாளர்‌ எஸ்‌.துரைராஜ்‌, 55-வது வட்டச்‌ செயலாளர்‌ வெ.ராமதாஸ்‌” ஆகியோர் தி.மு.க-விலிருந்து நீக்கப்படுவதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டார். நேருவின் ஆதரவாளர்கள் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா அல்லது ஜார்ஜ் மன்னன் ஆட்சியா என்றே தெரியவில்லை. சொந்தக் கட்சிக்காரர்களையும் அமைச்சர்களையும் கட்டுப்படுத்த முடியாத கையறு நிலையில் இருக்கும் ஓர் முதலமைச்சரை தமிழகம் இப்போதுதான் பார்க்கிறது. காவல் நிலையத்தைத் தாக்கியவர்களை அடக்கி, ஒடுக்காமல் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் மட்டும் செய்திருப்பது கண் துடைப்பு நடவடிக்கை” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சசிரேகா, “காவல்துறையை முதல்வர்தான் வைத்திருக்கிறார். எனவே, தொண்டர்கள் ஸ்டாலினை தி.மு.க தலைவராகவும் மதிக்கவில்லை, கட்சித் தலைவராகவும் மதிக்கவில்லை என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது. திமுக-வினர் சட்டத்தைக் கையிலெடுத்துக்கொள்வது என்பது அதிசயம் அல்ல. அவர்கள் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கிறது. மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக முழக்கம் எழுப்பியவரை பாதுகாவலர் பிடித்து கொடுத்ததற்கே, எதிர்க்கட்சித் தலைவர்மீது வழக்கு பதிந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் காட்டியது தி.மு.க அரசு. ஆனால், காவல் நிலையத்தைச் சூறையாடி, காவலர்களைத் தாக்கிய வழக்கில் அமைச்சர் கே.என்.நேரு-வை ஏ-1 குற்றவாளியாக ஏன் சேர்க்கவில்லை... தி.மு.க-விலிருந்து கே.என்.நேருவை நீக்காததது ஏன்?” என்கிறார்.

சசிரேகா, எடப்பாடி பழனிசாமி
சசிரேகா, எடப்பாடி பழனிசாமி

இந்தச் சம்பவத்தால் தலைமை மிகுந்த அப்செட்டில் இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க சீனியர் நிர்வாகிகள். இது தொடர்பாக அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது, “ஏற்கெனவே சில அமைச்சர்கள் பொதுவெளியில் பேசும் பேச்சுக்களே அரசுக்கு வீண் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அதுவே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு திருச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அமைச்சர் கே.என்.நேருவைப் பொறுத்தவரையில் தனது களப்பணியால், தலைமையோடு மிக நெருக்கமாக இருந்து வருபவர். ஆனால், அன்பில் மகேஸ் என்ட்ரீயால் கே.என்.நேருவின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. அதேபோல, மாணவர் பருவத்திலிருந்தே தி.மு.க-வின் கொள்கைகளில் ஊறித் திளைத்தவர் திருச்சி சிவா. ஆனாலும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியதால் கொஞ்சம் விலகியே நிற்கிறார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆரம்பத்திலிருந்தே இவர்கள் இருவருக்குள்ளும் மோதல் போக்கு இருந்தாலும், இப்படி ஒருவரையொருவர் நேரடியாகத் தாக்கிக்கொள்ளும் அளவுக்கு எல்லை மீறிச் சென்றிருப்பது இதுதான் முதல்முறை. முதல்வருக்குத்தான் இதனால் வீண் அப்செட். 2011-ல் ஆட்சியை இழந்ததற்கே கட்சி நிர்வாகிகள்தான் முதன்மைக் காரணமாக இருந்தார்கள். 2026 தேர்தலிலும் தொடர்ச்சியாக 2-வது முறை தி.மு.க-வை ஆட்சிக்கட்டிலில் அமர்த்த வேண்டுமென்பதில் முதல்வர் மிகுந்த கவனமாக இருக்கிறார். ஆனால், மூத்த நிர்வாகிகளே அதற்கு பாதகமாக இருந்துவிடுவார்களோ என்ற அச்சம் தலைமைக்கு வந்துவிட்டது” என்கிறார்கள்.

இரு தரப்புக்குமே தலைமையிடமிருந்து காட்டமான ரியாக்ஷன் கொடுக்கப்பட்டிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த நிலையில்தான் பஹ்ரைனிலிருந்து வந்த திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் அடிப்படையில் அழுத்தமான, முழுமையாகக் கட்சிக்காரன். என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தினால்தான் பலவற்றை பெரிதுபடுத்தியது இல்லை. யாரிடமும் புகார் சொன்னதும் இல்லை. தனி மனிதனைவிட கட்சி பெரியது என்ற தத்துவத்தின்படி வளர்ந்தவன். தற்போது நடந்த சம்பவம் மன வேதனையைத் தருகிறது” எனக் கூறியிருக்கிறார். ஆனால், “அவர்கள்தான் எங்களை முதலில் சீண்டினார்கள். அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து கறுப்புக்கொடி காட்டினால் சும்மா விட்டுவிடுவோமா?” என சீறுகிறார்கள் கே.என்.நேரு ஆதரவாளர்கள்.

திருச்சி சிவா
திருச்சி சிவா

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “காவல் நிலையத்துக்குள் இப்படி வன்முறையில் ஈடுபட்டால் அது செய்தியாகும், அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படும் என்பதெல்லாம் கே.என்.நேருவுக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் தெரியாதா... அதையும் தாண்டி அவர்கள் துணிச்சலோடு செய்கிறார்கள் என்றால், தங்களது பலத்தைக் காட்டவே இதைச் செய்திருக்கிறார்கள். இப்படி நடந்துவிட்டது என்பதற்காக கே.என்.நேருவின் பதவியைப் பறிக்கப் போகிறார்களா என்ன... அப்படி எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அதனால்தான் துணிச்சலாக இறங்கிச் செய்கிறார்கள். அமைச்சர்களின் தடாலடி பேச்சுக்கள், பெண் காவலருக்குப் பாலியல் சீண்டல் கொடுத்தது போன்ற நிர்வாகிகளின் அத்துமீறல்கள் என இரண்டு ஆண்டுகளில் பல சம்பவங்களில் தி.மு.க தலைமை காட்டமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்தப் போக்குதான் அவர்களுக்கு தைரியத்தைக் கொடுக்கிறது” என்கிறார்கள்.