Published:Updated:

ஐ.ஜி. முருகன் - பெண் எஸ்.பி விவகாரம்..! -`திடீர்' திருப்பம்

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பாலியல் புகாரை விசாரிக்கும் பொறுப்பை தெலங்கானா டி.ஜி.பி-யிடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைப்பதாகத் தீர்ப்பு வெளியானது.

ஐ.ஜி. முருகன்
ஐ.ஜி. முருகன்

ஒரு வருடம் முன்பு, லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐ.ஜி-யாக இருந்த முருகன் மீது அதே துறையில் பணியாற்றி வந்த பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை எழுப்பினார். முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அப்போதைய டி.ஜி.பி-யான டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தார். இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி, விசாகா கமிட்டி... என விசாரணைகள் நீண்டன. தமிழக போலீஸுடன் வெவ்வேறு பிரிவுகள் விசாரணை நடத்துவதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி, அந்தப் பெண் அதிகாரி சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போனார். இந்தச் சூழ்நிலையில், லஞ்ச ஒழிப்புப்பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த முருகனையும் அந்தப் பெண் அதிகாரியையும் அங்கிருந்து இடம் மாற்றினார்கள்.

Police Emblem
Police Emblem

பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட முருகன், கடந்த சில மாதங்களாகப் புதுப்பணியில் போய்ச் சேரவில்லை. ஏதோ டெக்னிக்கலான காரணங்களைச் சொல்லி, லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே தொடர்ந்து இருந்துவந்தார். ஆனால், அந்தப் பெண் அதிகாரி புது இடத்தில் போய் அமர்ந்தார். தற்போது பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிரான போலீஸ் பிரிவில் பணிபுரிகிறார். அந்தவகையில், சென்னை மாநகர போலீஸில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் செயல்பாட்டை அவர்தான் கவனித்துவருகிறார். `பெண்களுக்கு நடக்கும் குற்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள பெண் அதிகாரிக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லையே? ' என்று பெண் போலீஸார் முணுமுணுக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, பாலியல் புகாரை விசாரிக்கும் பொறுப்பை தெலங்கானா டி.ஜி.பி-யிடம் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்படைப்பதாகத் தீர்ப்பு வெளியானது. சீனியர் பெண் அதிகாரி ஒருவரை ஸ்பெஷல் ஆபீஸராக நியமித்து 6 மாத காலக்கெடுவில் விசாரித்து அறிக்கை தரும்படியும் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு வெற்றிபெறுவேன்
- பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறையில் அதுவரை நகராமல் இருந்த முருகன், அங்கிருந்து மாறி, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி-யாகப் பணியில் அமர்ந்தார். வைஜந்தி ஐ.பி.எஸ் பட நாயகி விஜயசாந்தி சாயலில் தெலங்கானாவிலிருந்து பெண் அதிகாரி ஒருவர் சென்னை கிளம்பி வர இருந்தார். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் முருகன் தரப்பு மேல்முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அந்த மனு சில நாள்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பாலியல் புகார் குறித்த விவரங்களை அளிக்குமாறு பெண் எஸ்.பி-க்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டப்படி நியாயத்தைப் பெறுவேன் என்று சொல்லிவருகிறாராம் பெண் எஸ்.பி. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- நமது நிருபர்