Published:Updated:

காவல் நிலையத்துக்கு தீ வைப்பு, வீடுகள் தரைமட்டம்... என்ன நடக்கிறது அஸ்ஸாமில்?

அஸ்ஸாம்

``உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து இப்போது அஸ்ஸாமிலும் பாஜக புல்டோசர் அரசியல் தொடங்கியிருக்கிறதா?” என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

காவல் நிலையத்துக்கு தீ வைப்பு, வீடுகள் தரைமட்டம்... என்ன நடக்கிறது அஸ்ஸாமில்?

``உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து இப்போது அஸ்ஸாமிலும் பாஜக புல்டோசர் அரசியல் தொடங்கியிருக்கிறதா?” என்கிற கேள்வியை முன்வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Published:Updated:
அஸ்ஸாம்

பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலம், நகோவான் பகுதியிலுள்ள பதாத்ரபா காவல் நிலையத்தை அப்பகுதி மக்கள் சிலர் தீ வைத்து கொளுத்தியிருக்கின்றனர். அந்தக் காவல் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சஃபிகுல் இஸ்லாம் என்ற மீன் வியாபாரி கைதுசெய்யப்பட்டார். அந்த நபர் காவல் விசாரணையின்போது உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தீ வைத்துள்ளனர். இந்தச் செயலில் ஈடுபட்ட ஐந்து குடும்பங்களின் வீடுகளை நகோவான் மாவட்ட நிர்வாகம், `சரியான ஆதாரம் இல்லாமல் போலியான ஆவணங்களைவைத்து சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கிறார்கள்’ என்ற காரணத்தைக் காட்டி புல்டோசரால் இடித்திருக்கிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தின் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 20 பேரை காவல்துறை கைதுசெய்திருக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து அஸ்ஸாம் டிஜிபி, ``உள்ளூர்வாசிகள் சட்டத்தைத் தங்கள் கையிலெடுத்து இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் அடக்கம். இந்தத் தாக்குதல், உணர்ச்சிப்பெருக்கில் திடீரென நடைபெற்றது எனக் கருத்தில்கொள்ள முடியாது. திட்டமிடப்பட்டு நடைபெற்ற தாக்குதல் இது. இந்தத் தாக்குதல் குறித்த முழு ஆதாரத்தையும் திரட்டிவருகிறோம். குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. அதேவேளை, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அலட்சியப்போக்கில் ஈடுபட்ட காவலர்கள் யாரும் தப்ப முடியாது” என அவர் கூறியுள்ளார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “ஒரு காவல் நிலையம் எரிக்கப்பட்டிருக்கிறது. எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும்வரை இது போன்ற குற்றங்களை நாங்கள் மன்னிக்க மாட்டோம். அந்தப் பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு அதிகம் இருக்கிறது. அதை அடையாளம் காண மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அஸ்ஸாமின் அமைதியைச் சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சட்டத்தின் மூலம் தீர்வு காண்போம்” என்று கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பார்பிதா (Barbhitha) தொகுதி காங்கிரஸ் எம்.பி அப்துல் காலிக், (Abdul Khaleque), “காவல் நிலையம் மீதான தாக்குதலை நாங்கள் ஒருபோதும் ஆதாரிக்கவில்லை. ஆனால், தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகளை போலீஸார் புல்டோசரால் இடித்தது மனித உரிமைகளை நேரடியாக மீறுவதாகும்” என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரைத் தொடர்ந்து இப்போது அஸ்ஸாமிலும் பாஜக புல்டோசர் பிரசாரம் தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கடந்த 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ``மாஃபியாக்கள், குற்றவாளிகளுக்குச் சொந்தமான இடங்களில் நமது புல்டோசர்கள் நடவடிக்கை எடுக்கும்” என்று அதிரடியாகப் பேசினார். அப்போது தொடங்கியது புல்டோசர் பிரசாரம். 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் அது எதிரொலித்தது.

புல்டோசர் பாலிடிக்ஸ்
புல்டோசர் பாலிடிக்ஸ்

உத்தரப்பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் வீட்டின் முன்பாக புல்டோசர்களை நிறுத்திவைத்தது காவல்துறை. ``குற்றவாளிகளுக்குக் காலக்கெடு விதித்திருக்கிறோம். அதற்குள் சரணடையாவிட்டால், அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளை இடித்துத் தள்ளிவிடுவோம்’’ என்று அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த 50-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சரணடைந்தார்கள். அதன் பிறகும் சரணடைய மறுப்பவர்களின் சொத்துகள் தரைமட்டமாக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

இதேபோல் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மத்தியப் பிரதேசத்திலும் புல்டோசர் பிரசாரத்தைப் பின்பற்றத் தொடங்கியிருக்கிறது பா.ஜ.க. மத்தியப் பிரதேசத்தின் பா.ஜ.க முதல்வரான சிவ்ராஜ் சிங் செளகான், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட சிலரின் சொத்துகளை புல்டோசர் மூலம் இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து சிவ்ராஜ் சிங்கின் ஆதரவாளர்கள், அவரை `புல்டோசர் மாமா’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism