Published:Updated:

வேங்கைவயல்: ``முதல்வரின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட அவமானமில்லையா?" - சீமான் காட்டம்

சீமான் - ஸ்டாலின்

``தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமைபுரிந்த குற்றவாளிகளைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா?” எனச் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

வேங்கைவயல்: ``முதல்வரின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட அவமானமில்லையா?" - சீமான் காட்டம்

``தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமைபுரிந்த குற்றவாளிகளைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா?” எனச் சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Published:Updated:
சீமான் - ஸ்டாலின்

வேங்கைவயல் பகுதியில் குடிநீரில் மலம் கலந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டுமென தொடர்ந்து அரசியல் கட்சிகள் குரலெழுப்பி வந்தனர். அதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்துவந்தது. இந்த நிலையில், வழக்கை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
ட்விட்டர்

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் ஆதித்தமிழ்க்குடிகள் மீதான தீண்டாமைக்கொடுமை வழக்கை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி, வழக்கை காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டத்துக்குரியது. தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் தீண்டாமைக் கொடுமைபுரிந்த குற்றவாளிகளைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தமிழ்நாட்டு காவல்துறை திறனற்றதாகிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.

துப்பறிய கடினமான அரிதான கொடுங்குற்ற வழக்குகளை மட்டும், விரைந்து விசாரணை நடைபெற வேண்டி குற்றப்புலனாய்வு விசாரணைக்கு மாற்றிய நிலைமாறி, தி.மு.க ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு, மக்களின் மனக்கொந்தளிப்பை அடக்கும் வகையில் உணர்வுபூர்வமான வழக்குகள் அனைத்தையும் குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி கிடப்பில் போடுவதென்பது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதிவேண்டி மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கியவுடன், போராட்ட எழுச்சியை மட்டுப்படுத்துவதற்காக வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழ்நாடு அரசு.

மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி
மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி

ஆனால், இன்றுவரை மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு கிடைத்த நீதியென்ன... வழக்கின் நிலையென்ன... விசாரணையில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன... எதுவுமில்லை. அதைப்போலவே தற்போது வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கையும், கிடப்பில் போட்டு குற்றவாளிகளைத் தப்புவிக்க செய்யும் முயற்சியே வழக்கை குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு மாற்றும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாகும்.

தங்களால் கண்டறிய முடியவில்லை என்று ஒப்புக்கொள்ளும் வகையில், காவல்துறை ஆணையரே வழக்கை குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றுவதாகக் கூறுவது, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற முதல்வர் அவர்களின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட அவமானமில்லையா... தலைகுனிவில்லையா... முதலமைச்சர் ஸ்டாலின் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்.

எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் தி.மு.க அரசு அமைத்த சமூகநீதி கண்காணிப்புக் குழு வேங்கைவயல் கிராமத்தில் செய்த விசாரணை என்ன... நடத்திய ஆய்வு என்ன... கொடுத்த அறிக்கை என்ன... அதன்பெயரில் எடுத்த நடவடிக்கை என்ன... இதுதான் 60 ஆண்டுக்காலமாக திராவிடம் தமிழர் மண்ணில் கட்டிக்காத்த சமூகநீதியா?

சீமான்
சீமான்

ஆதித்தமிழ் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டியில் மலத்தைக் கலந்து தீண்டாமை வன்கொடுமை புரிந்த சமூகவிரோதிகளைக்கூட கைதுசெய்ய முடியாத திறனற்ற தி.மு.க அரசுக்குப் பெயர் திராவிட மாடல் அரசல்ல; தீண்டாமைக்கொடுமை அரசு என்றுதான் இனி அழைக்க வேண்டும். ஆகவே, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை என்ற பெயரில் வேங்கைவயல் தீண்டாமைக்கொடுமை வழக்கை தமிழ்நாடு அரசு மேலும், மேலும் காலம்தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.