Published:Updated:

`மனநலம் பாதித்துவிட்டது எனக் கடிதம் எழுது!' -அமித் ஷா கூட்டத்தில் கோஷமிட்ட மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி

மாணவர் ஹரிஜித் சிங்
மாணவர் ஹரிஜித் சிங்

``அவரை விட்டு விடுங்கள். பாதுகாப்பு வீரர்களே, பத்திரமாக அவரை அழைத்துச் செல்லுங்கள்" என்றார் அமித் ஷா.

டெல்லியில் வருகிற பிப்ரவரி 8-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால், பிரசாரங்களும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக, டெல்லியிலுள்ள பாபர்பூர் பகுதியில் பா.ஜ.க-வினர் பொதுக்கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினர். இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார்.

அமித் ஷா
அமித் ஷா

பொதுக்கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அமித் ஷா பேசும்போது, கூட்டத்திலிருந்த மாணவர் ஒருவர் இந்தச் சட்டத்துக்கு எதிராகக் குரல் எழுப்பினார். கூட்டத்திலிருந்த பா.ஜ.க ஆதரவாளர்கள் அந்த மாணவரை தரையில் தள்ளி நாற்காலிகளை தூக்கி அடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த அமித் ஷா, ``அவரை விட்டு விடுங்கள். பாதுகாப்பு வீரர்களே, பத்திரமாக அவரை அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

நீண்ட கால கட்சிப் பணி... மோடி அமித் ஷாவுடன் நெருக்கம்... யார் இந்த ஜே.பி.நட்டா?

டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ இரண்டாமாண்டு படித்து வரும் ஹரிஜித் சிங்தான் அந்த மாணவர். இந்தச் சம்பவத்துக்குப் பின் இவர் டெல்லி காவல்துறை அதிகாரிகளால் தான் கைது செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``என்னை எதற்காகக் கைது செய்தார்கள் என்ற காரணத்தைக்கூட காவல்துறையினர் கூறவில்லை. நான் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றும் நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்கு தெரியாது என்றும் கடிதம் எழுதும்படி அதிகாரிகள் என்னை வற்புறுத்தினர். இதை எழுதவில்லை என்றால் இங்கிருந்து செல்ல முடியாது என மிரட்டினர்" எனக் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து மேலும் அவர் பேசுகையில், ``சீலம்பூரில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள சென்று கொண்டிருந்தேன். பாபர்பூரில், காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இதுதொடர்பாகக் காவல்துறையினரிடம் கேட்கும்போது அமித் ஷா வருவதாகக் கூறினர். என்னுடைய போராட்டத்தைப் பதிவு செய்ய இதுதான் சரியான இடம் என்று நினைத்தேன்" என்றார்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

டெல்லி காவல்துறை இணை ஆணையாளர் வெட் பிரகாஷ் சூர்யா, மாணவரின் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசிய அவர், ``கூட்டத்திலிருந்து அவரை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பெரிய காயங்கள் எதுவும் அவருக்கு ஏற்படவில்லை. எந்தவிதமான அடையாள அட்டைகளும் அவரிடம் இல்லாததால், பெற்றோரை வரவழைத்து அவரை ஒப்படைத்தோம். எழுத்துபூர்வமாக எதையும் நாங்கள் வாங்கவில்லை" என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க தலைவர் ஒருவர், ``நான் மேடையில் இருந்தேன். அமித் ஷா, காவல்துறையினரிடம் அந்த மாணவரைக் காப்பாற்றுங்கள் என்று கூறினார். அதிகமானவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எனவே, என்ன நடந்தது என்பதைச் சரியாகக் கூற முடியவில்லை" என்றார்.

“மோடியையும் அமித் ஷாவையும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை!’’
பின் செல்ல