Published:Updated:

போலீஸ் வலையில் ராஜேந்திர பாலாஜி... உறுதுணையாக நிற்குமா அதிமுக?!

ராஜேந்திர பாலாஜி
News
ராஜேந்திர பாலாஜி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம், ராஜேந்திர பாலாஜி குறித்துக் கேள்வி எழுப்பியபோது, ``ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து நான் எந்தவிதக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மூன்று கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் ஆதரவாளர்கள் நான்கு பேர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் ஆறு தனிப்படை அமைத்து ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்யத் தீவிரம் காட்டிவருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி, வேலுமணி
ராஜேந்திர பாலாஜி, வேலுமணி

விருதுநகரில் நடந்த தமிழ்நாடு அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ராஜேந்திர பாலாஜி இந்தத் தகவலை அறிந்து ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தபோதே அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும், கைது நடவடிக்கையைத் தவிர்க்க பெங்களூருவில் தஞ்சமடைந்திருப்பதாகவும் சொல்கிறார்கள் சிலர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்ய காவல்துறை தீவிரம் காட்டிவரும் இந்தச் சூழலில் அவருக்கு அ.தி.மு.க துணை நிற்குமா என்பதை அறிந்துகொள்ள அந்தக் கட்சியின் வழக்கறிஞர் அணியைச் சார்ந்த முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரையிடம் பேசினோம். ``முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைக் கைதுசெய்கிறோம் என்கிற பெயரில் அவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு காவல்துறை நெருக்கடிகளைக் கொடுத்திருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ராஜேந்திர பாலாஜியின் வீட்டுக்குச் சென்ற மாவட்ட எஸ்.பி., அங்கிருந்தவர்களிடம் ராஜேந்திர பாலாஜி குறித்து விசாரணை நடத்தியதோடு அவரின் மருமகன்கள் வசந்தகுமார், ரமணா ஆகியோரையும், அவரின் ஓட்டுநர் ராஜ்குமாரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

வழக்கில் இவர்கள் யாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதபோது எதனடிப்படையில் அவர்களை அழைத்துச் சென்றார்கள் என்பதை தமிழ்நாடு காவல்துறை விளக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் விவகாரத்திலும் தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் நடந்துகொண்டது. ராஜேந்திர பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களைக் கைதுசெய்யாமலிருக்க `Not to Arrest’ என்ற மனுவை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்து தடை உத்தரவு பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அ.தி.மு.க தலைமை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை
முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை

ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு உண்மையா, பொய்யா என்ற வாதத்துக்குள் இப்போது நாங்கள் செல்ல விரும்பவில்லை. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகத்தான் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது காவல்துறை எடுத்துள்ள கைது நடவடிக்கையும் இந்த வழக்கை ஒட்டித்தான்” என்றவர்...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து, ``தி.மு.க அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் இதே வழக்கு, அதுவும் தி.மு.க தொடர்ந்த வழக்கு ஒன்று நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. அவரை தமிழ்நாடு அரசு இதுவரை விசாரணைகூடச் செய்யவில்லை. ஆனால், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினைச் சட்டமன்றம் தொடங்கி பொது மேடைகள் வரை ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சிக்கிறார் என்பதற்காக அவரை ஏதாவது காரணம் சொல்லிக் கைதுசெய்ய வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கான வாய்ப்பு தற்போது உருவாகியிருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள். பிரதமர் மோடியை ஸ்டாலின் விமர்சித்ததைவிட அ.தி.மு.க தலைவர்கள் யாரும் ஸ்டாலினை விமர்சித்துவிடவில்லை. மோடி, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதைக் கடந்து செல்கிறார். அந்த அரசியல் பக்குவம் இல்லாததால் ஸ்டாலின் அ.தி.மு.க தலைவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை, கைது நடவடிக்கை எனக் கீழே இறங்கி அரசியல் செய்கிறார். இவற்றையெல்லாம் முறியடித்து அ.தி.மு.க விரைவில் மீண்டு வரும்.

ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர்
ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர்

ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமல்ல... அ.தி.மு.க-வின் தொண்டர்கள் அனைவருக்கும் எல்லா காலத்திலும் ஆதரவாக இருப்போம்” என அ.தி.மு.க-வின் நிலைப்பாட்டை விளக்கினார்.

இதற்கிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம், ராஜேந்திர பாலாஜி குறித்துக் கேள்வி எழுப்பியபோது, ``ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து நான் எந்தவிதக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என்பதோடு முடித்துக்கொண்டார்.