Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட்காம்

- `வட்டம்’ பாலா

கரை வேட்டிக்குத் தடா! - ஐபேக் அடாவடி

டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அவ்வப்போது விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டங்களையும் நடத்தினார். இந்தக் கூட்டங்களை ஐபேக் ஊழியர்கள்தான் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கட்சி சார்பற்ற விவசாயிகள் மட்டுமே கூடுவதாக மீடியாக்களுக்குக் காட்டுவதற்காக, ‘கட்சிக் கரைவேட்டி கட்டிக்கொண்டு கூட்டத்துக்கு வரக் கூடாது’ என்று அவர்கள் கட்டளைபோட்டிருக்கிறார்கள். கட்டளையையும் மீறி, கட்சிக் கரைவேட்டியுடன் கூட்டத்துக்கு வந்தவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டதாம் ஐபேக். ‘கரைவேட்டி கட்டித்தான் இந்தக் கட்சியையே இந்த அளவுக்கு வளர்த்தெடுத்தோம். அப்படிப்பட்ட கட்சி வேட்டிக்கு மரியாதை இல்லாமப் போச்சு. இது நல்லதுக்கா, கெட்டதுக்கா..?’ என்று புலம்பியபடி கலைந்து சென்றிருக்கிறது தி.மு.க விவசாயிகள் அணி.

கரைவேட்டி டாட்காம்

‘இளைய தெற்கு மாவட்டமே!’ - வாரிசைக் களமிறக்கும் அனிதா ராதாகிருஷ்ணன்

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மூன்று மகன்கள். அவர்களில் இரண்டு மகன்கள் மதுரையில் பிசினஸ் செய்துவருகிறார்கள். மூன்றாவது மகன் ஆனந்த மகேஸ்வரன், தூத்துக்குடியில் குவாரி பிசினஸை கவனித்துவருகிறார். உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, தெற்கு மாவட்ட தி.மு.க மற்றும் இளைஞரணி சார்பில் வட்டார அளவிலான வாலிபால் போட்டி, வெள்ளாளன்விளையிலுள்ள ஒரு பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை அனிதா ராதாகிருஷ்ணனின் மகன் ஆனந்த மகேஸ்வரன் தொடங்கிவைத்தார். ‘இளைய தெற்கு மாவட்டமே...’, ‘இளைய அண்ணாச்சியே...’ என்றெல்லாம் பத்திரிகைகளில் விளம்பரம், வரவேற்பு பேனர்கள் என அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அளிக்கப்படும் வரவேற்பை மிஞ்சும் வகையில் பலமான வரவேற்பு இவருக்கு அளிக்கப்பட்டது. அனிதா ராதாகிருஷ்ணனின் 30 ஆண்டுக்கால அரசியல் வாழ்வில், இதுவரை குடும்ப உறுப்பினர்களை அரசியலில் நுழைக்காத நிலையில், தற்போது தன் வாரிசை முதன்முறையாகக் களமிறக்கியிருக்கிறார். தன் மகனுக்கு இளைஞரணியில் பதவி பெற்றுக் கொடுத்து, அரசியல் பாடம் சொல்லிக்கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறாராம். ‘அப்பா மாவட்டம், மகன் இளைஞரணி. எங்களுக்கு..?’ என இப்போதே புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கரைவேட்டி டாட்காம்

‘பதவியிலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்!’ - கட்டம்கட்டும் கே.என்.நேரு?

திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தி.மு.க ஒன்றியச் செயலாளர் சௌந்தரபாண்டியன். ‘தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, திருச்சி மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி இருவரும் சௌந்தரபாண்டியனை மதிப்பதில்லை’ என்கிற குற்றச்சாட்டு நீண்டநாள்களாக இருந்துவருகிறது. இந்தநிலையில், ‘சுயமரியாதை நிறைந்த கட்சியில், மரியாதை இழந்து அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. நான் வகிக்கும் ஒன்றியச் செயலாளர் பதவியிலிருந்து என்னை நீக்கிவிடுங்கள்’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் சௌந்தரபாண்டியன். இந்தக் கடிதம் குறித்துப் பேசும் அவரின் ஆதரவாளர்கள், ``மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருக்கிறார் எங்கள் அண்ணன். இந்தமுறையும் சீட்டு வாங்கி வெற்றிபெற்றுவிட்டால், கண்டிப்பாக அமைச்சர் பதவி கிடைத்துவிடும். தன்னை மீறிக் கட்சியில் வளர்ந்துவிடுவார் என்ற பயத்திலேயே அண்ணனைத் திட்டமிட்டு ஒதுக்குகிறார் கே.என்.நேரு’’ என்று கொந்தளிக்கிறார்கள்.

கரைவேட்டி டாட்காம்

பங்கு போடுறதுல பிரச்னை! - மொட்டை போஸ்டருக்குத் தொண்டனின் பெயர்

சிறுமியைச் சிறார் வதை செய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சிறையிலிருக்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த நாகர்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன். அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பே அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க தோவாளை ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணகுமாரின் ‘சர்ச்சைக்குரிய’ நிர்வாண வீடியோ ஒன்று வெளியானது. ஆனாலும், அவர் கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை. இந்தநிலையில், கிருஷ்ணகுமாருக்கு எதிராகச் சிலர் மொட்டை போஸ்டர் ஒன்றை நாகர்கோவிலில் ஒட்டியிருக்கிறார்கள். அதில், ‘கட்சி நிகழ்ச்சிக்கு வரும் பெண்களைக் காமவலையில் சிக்கவைத்து, நிர்வாணமாக வீடியோ கால் மூலம் பாலியல் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு, அ.தி.மு.க பெயரைக் கெடுக்கும் தோவாளை ஒன்றியச் செயலாளரைக் கட்சியைவிட்டு நீக்காதது ஏன்... நாஞ்சில் முருகேசனுக்கு ஒரு நியாயம்... கிருஷ்ணகுமாருக்கு ஒரு நியாயமா? - மனக்குமுறலில் அ.தி.மு.க உண்மைத் தொண்டர்கள், குமரி மாவட்டம்’ என அச்சிடப்பட்டிருந்தது. ‘``நிர்வாகிகளுக்கு இடையில கமிஷன் பணத்தைப் பங்குபோடுறதுல பிரச்னை ஏற்பட்டதால, தொண்டர்கள்னு பேர் போட்டு, அவங்களே போஸ்டர் அடிச்சு ஒட்டிக்கிறாங்க. `தொண்டர்களின் நலனைப் பற்றி கவலைப்படாம, மேல்மட்ட நிர்வாகிகள் போட்டி போட்டு சம்பாதிச்ச பணத்தைப் பத்தி கட்சித் தலைமை விசாரிக்கணும்’னு உண்மையான தொண்டர்கள் ஒருநாள் நெஜமா போஸ்டர் அடிச்சு ஒட்டத்தான் போறாங்க’’ என்கிறது குமரி அ.தி.மு.க வட்டாரம்.