Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

‘‘அந்த ஐயாயிரம்தான் இது!’’

‘‘ஒவ்வொரு டோக்கனுக்கும் ஐயாயிரம் ரூபாய்!’’ என்ற வாக்குறுதியோடு, செந்தில் பாலாஜி போட்டியிட்ட கரூர் தொகுதியில் அவரின் ஆதரவாளர்கள் மஞ்சள் கலர் டோக்கனை விநியோகம் செய்தார்கள். தேர்தலில் ஜெயித்து, செந்தில் பாலாஜி அமைச்சராகவும் ஆகிவிட்ட நிலையில், தற்போது கரூர் மாவட்ட தி.மு.க சார்பில் குடும்ப அட்டைக்கு நான்கு கிலோ அரிசி வழங்கப்பட்டுவருகிறது. ‘‘அரிசி மட்டும்தானா... டோக்கனுக்கான பணம் எங்கே?’’ என்று கேட்ட மக்களிடம், ரேஷன் கடைக்கு வருமாறு தி.மு.க-வினர் கூறியிருக்கிறார்கள். மஞ்சள் டோக்கனை எடுத்துக்கொண்டு உற்சாகமாக ரேஷன் கடைக்கு வருபவர்களுக்கு, தனியிடத்தில் வைத்து, ஆயிரம் ரூபாய் பணத்தை கவரில் போட்டுக் கொடுக்கிறார்கள். ‘‘ஐயாயிரம் தர்றதா சொல்லிட்டு, ஆயிரம் மட்டும் தர்றீங்களே?’’ என்று மக்கள் கேட்டால், ‘‘ரேஷன் கடைகள் மூலம் அரசு ரெண்டு தவணைகளா வழங்கிய நாலாயிரம் ரூபா நிவாரணத் தொகையோட, செந்தில் பாலாஜி கொடுக்கும் இந்த ஆயிரத்தையும் சேர்த்தா ஐயாயிரம் வருதுல்ல?’’ என்று கேட்டு அவரின் ஆதரவாளர்கள் சமாளிக்கிறார்களாம். ‘கரகாட்டக்காரன்’ வாழைப்பழ காமெடிதான் நினைவுக்கு வருகிறது!

‘‘ரஜினியை நம்பியது வரலாற்றுப் பிழை!’’

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ஆர்.எஸ்.ராஜன். ரஜினி ரசிகர். தமிழக காங்கிரஸ் விவசாய அணி மாநிலச் செயலாளராக இருந்தவர், 2017-ல் ரஜினி கட்சித் தொடங்குவதாக கூறியதைத் தொடர்ந்து தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் குமரி மாவட்ட துணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். ‘கட்சி தொடங்கப்போவதில்லை’ என ரஜினி அறிவித்தவுடன் கொந்தளித்தவர், ‘‘நான் கட்சித் தொடங்கப்போகிறேன். ரஜினி அதில் இணையட்டும்’’ எனக் கூறியதால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டார். இப்போது வேறு வழியில்லாமல், ‘‘ரஜினியை நம்பிப் போய் வரலாற்றுப் பிழை செய்துவிட்டேன். என்னை மீண்டும் கட்சியில் சேருங்கள்” என காங்கிரஸ் தலைமைக்குத் தூதுவிட்டு வருகிறாராம்.

கரைவேட்டி டாட் காம்

தி.மு.க-வுடன் மோதும் காங்கிரஸ்!

தென்காசி மாவட்டத்தில் கூட்டணிக் கட்சியான தி.மு.க-வுடன் காங்கிரஸார் மோதலில் ஈடுபட்டுவருவதுதான் ஹாட் டாபிக். தென்காசி தொகுதியைப் பெரிதும் எதிர்பார்த்து அதற்கான பணிகளைச் செய்துவந்தவர், தி.மு.க மாவட்டச் செயலாளரான சிவபத்மநாபன். இந்தநிலையில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டு, பழனி நாடார் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகவும் ஆகிவிட்டார். தேர்தல் பிரசார சமயத்தில் தனக்குத் தொகுதி கிடைக்காத விரக்தியில் சிவபத்மநாபன் காங்கிரஸாரையும் பழனி நாடாரையும் ரொம்பவே உதாசீனப்படுத்தியதாகப் புகார் எழுந்தது. தற்போது, காங்கிரஸ் கட்சியினரை உதாசீனப்படுத்தி தி.மு.க நிர்வாகிகள் பேசிய வீடியோ மற்றும் ஆடியோக்கள் தென்காசிப் பகுதி வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்பட்டுவருகின்றன. இதற்கெல்லாம் பின்புலத்தில் இருப்பது பழனி நாடார்தான் என்று தி.மு.க தரப்பு கொந்தளிக்கிறது. இது தொடர்பாக, இரு தரப்பினருமே தங்கள் கட்சி மேலிடத்தில் புகார் செய்துவருகிறார்கள்.