Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்

பா.ஜ.க-வின் லெட்டர் பேடு எம்.எல்.ஏ!

புதுச்சேரி பா.ஜ.க தலைவரான சாமிநாதன், தொடர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைத் தழுவிவருபவர். ஆனாலும், அவருக்கு இரண்டு முறை நியமன எம்.எல்.ஏ வாய்ப்பை வழங்கியது அந்தக் கட்சித் தலைமை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பிரசாரத்தில் ஈடுபட்டும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. அவரின் நியமன எம்.எல்.ஏ பதவிக்காலம் முடிவடைந்துவிட்ட நிலையிலும், லெட்டர் பேடு, சமூக வலைதளக் கணக்குகள் என அனைத்திலும் `எம்.எல்.ஏ’ என்றே குறிப்பிட்டு வலம்வருகிறார். பலர் அதைச் சுட்டிக்காட்டியும், அந்த வார்த்தையை எடுக்க மனம்வரவில்லையாம் அவருக்கு.

கரைவேட்டி டாட் காம்

குமரி அ.தி.மு.க தொண்டர்களின் கொதிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் தி.மு.க-வில் இணைந்திருக்கிறார்கள். அனைவரும் அரசுப் பதவி, கட்சிப் பதவி என அனுபவித்தவர்கள். தி.மு.க-வில் எம்.எல்.ஏ-வாக இருந்து, மீண்டும் சீட் கிடைக்கவில்லை என அ.தி.மு.க-வுக்குப் போனவர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜன். அவருக்கு மாவட்ட துணைச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு மார்க்கெட்டிங் ஃபெடரேஷன் தலைவர் எனப் பதவிகளை வாரிக்கொடுத்தார்கள். இப்போது அ.தி.மு.க-வில் சீட் கிடைக்கவில்லை என மீண்டும் தி.மு.க-வுக்குப் போய்விட்டார். ‘‘உண்மையான ஒரு தொண்டனுக்குப் பதவி கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?’’ என்று கொதிக்கிறார்கள் கன்னியாகுமரி அ.தி.மு.க தொண்டர்கள்.

கரைவேட்டி டாட் காம்

டெண்டருக்காக மல்லுக்கட்டு!

பழம்பெரும் தி.மு.க தலைவரின் பெயரைக்கொண்ட டெல்டா பகுதி மக்கள் பிரதிநிதி ஒருவர், தனது சகலையின் பெயரில் அரசு ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யத் தொடங்கியிருக்கிறாராம். ஒப்பந்தப் பணியை எடுப்பதற்காகத் தன் சகலைக்கு மூன்றே நாளில் லைசென்ஸ் பெற்றுத் தந்திருக்கிறாராம். அதையடுத்து, ‘டெண்டர் விஷயத்தில் நிர்வாகிகளை ஆலோசிக்காமல் அவர் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்’ என்று குமுறல்கள் எழுந்துள்ளன. கட்சியின் நகரப் பொறுப்பாளரான காமெடி நடிகர் பெயர்கொண்டவருக்கும், மக்கள் பிரதிநிதிக்கும் இடையே முட்டல்மோதல் எழுந்திருக்கிறதாம். அதனால், நகராட்சிப் பகுதியில் டெண்டருக்கு வந்த மூன்று பணிகள் கேன்சலாகிவிட்டனவாம். ஒப்பந்தம் எடுப்பதில் இருவருக்கும் பனிப்போர் நிலவுவதால், தொகுதிக்குப் புதிதாக வரவிருந்த திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக தி.மு.க தொண்டர்கள் புலம்பிவருகிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

இடம் மாறிய அடைமொழி... கடுப்பில் ரங்கசாமி!

காங்கிரஸ் கட்சியில் முதல்வராக இருந்த ரங்கசாமி, அப்போது தன்னிச்சையாகச் செயல்பட்டதால் பதவியிலிருந்து இறக்கப்பட்டார். அதன் பிறகு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய அவரை ‘மக்கள் முதல்வர்’, ‘நிரந்தர முதல்வர்’ என்று குறிப்பிடும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலின்போது ‘முதல்வர் பதவி’ என்ற வாக்குறுதியுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து அழைத்துவரப்பட்ட நமச்சிவாயத்துக்குத் துணை முதல்வர் பதவியைக்கூட பா.ஜ.க-வால் கொடுக்க முடியவில்லை. அவருக்கு உள்துறை அமைச்சர் பதவிதான் கிடைத்தது. இருப்பினும் நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் அவரை, ‘மக்கள் முதல்வர்’, ‘நாளைய முதல்வர்’, ‘நிரந்தர முதல்வர்’ என்று குறிப்பிட்டு விளம்பரப்படுத்திவருவதால், கடுப்பிலிருக்கிறாராம் முதல்வர் ரங்கசாமி.

கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்
கரைவேட்டி டாட் காம்

‘‘என்ன பிரயோஜனம் மாவட்டச் செயலாளரே?’’

டாக்டர் மகேந்திரனின் வருகை, கோவை தி.மு.க-வுக்குள் கடும் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இணைப்பு விழாவின்போது மகேந்திரன் குறித்து மு.க.ஸ்டாலின் பெருமையாகப் பேசியதிலேயே பல உடன்பிறப்புகள் கடுப்பாகிவிட்டார்கள். தி.முக-வில் இணைந்த பிறகு, சேலம் தொடங்கி கோவை வரை கிட்டத்தட்ட 25,000 போஸ்டர்களை அடித்துக் குவித்துவிட்டார் மகேந்திரன். அவற்றில் கோவையைச் சேர்ந்த எந்த நிர்வாகியின் படமும் இல்லை. அதேபோல, ‘போஸ்டர் பத்திரிகை’களிலும் மகேந்திரன்தான் தலைப்புச் செய்தி. இதனால், கோவை சிட்டியில் திரும்பிய பக்கமெல்லாம் மகேந்திரனின் முகங்களே தென்பட்டன. தேர்தல் தோல்வியால் ஏற்கெனவே மகேந்திரனைக் கடுமையாக விமர்சித்திருந்த தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக், இதில் ஏகத்துக்கும் சூடாகிவிட்டார். மகேந்திரனுக்கு போஸ்டர் அடித்த அதே பத்திரிகையில், ‘கொங்கு மண்டலம் தி.மு.க கோட்டையாக மாறும்’ என்று பேட்டியளித்து, அதை சிட்டி முழுவதும் ஒட்டவைத்திருக்கிறார். சில இடங்களில் மகேந்திரனின் போஸ்டருக்கு மேலேயே, கார்த்திக்கின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. ``தேர்தல் நேரத்துல வேலை செய்யாம, இப்போ கோட்டையாக மாறும்னு பேட்டி கொடுக்கறதுல என்ன பிரயோஜனம் மாவட்டச் செயலாளரே?’’ என்று உடன்பிறப்புகள் கேள்வியெழுப்புகிறார்கள்.