அலசல்
Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

இருதலைக்கொள்ளி நிர்வாகிகள்!

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க-விலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் தி.மு.க-வுக்குத் தாவினார்கள். அவர்களில், அ.தி.மு.க மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் நாஞ்சில் டொமினிக் உள்ளிட்டவர்கள், கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சுரேஷ்ராஜன் முன்னிலையில் ஸ்டாலினைச் சந்தித்து கட்சியில் இணைந்திருக்கிறார்கள். அதனால், மேற்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் இவர்களைக் கண்டுகொள்வது இல்லையாம். ‘‘நாங்க அ.தி.மு.க-வுலருந்து முன்னாள் எம்.எல்.ஏ ராஜன் தலைமையில சென்னைக்குப் போனோம். ராஜன் கிழக்கு மாவட்டம்கிறதால, அவர் கிழக்கு மாவட்டச் செயலாளர் முன்னிலையில் கட்சியில சேர்ந்தார். அதுக்காக எங்களை ஒதுக்கலாமா?’’ என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள் அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சென்ற நிர்வாகிகள்.

தகிக்கவைத்த நம்பிக்கையில்லா தீர்மானம்!

தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜான்சி வாஞ்சிநாதன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை அடுத்து, ‘‘கட்சி ஒருங்கிணைப்பாளரின் சொந்த மாவட்டத்தில், மாவட்டச் செயலாளரின் சொந்த ஊரில், அ.தி.மு.க-வின் யூனியன் தலைவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அவமானம்’’ என்று ரத்தத்தின் ரத்தங்கள் குமுறுகிறார்கள். ஒன்றியக் குழுவில் அ.தி.மு.க கவுன்சிலர்கள்தான் பெரும்பான்மை. ‘ஜான்சி வாஞ்சிநாதன் தன்னிச்சையாகச் செயல்படுகிறார். எங்கள் பேச்சைக் கேட்பதில்லை’’ என்று மாவட்டச் செயலாளர் சையதுகானிடம் புகார் தெரிவித்திருந்தார்கள். ஆனால், மாவட்டச் செயலாளர் எதுவும் செய்யவில்லை. இதைப் பயன்படுத்திக்கொண்ட தி.மு.க-வினர், அ.தி.மு.க கவுன்சிலர்களின் ஒத்துழைப்போடு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதையடுத்து பிரச்னை வெடிக்க, தீர்மானத்துக்கு ஒத்துழைத்த அ.தி.மு.க கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள். அவர்கள் ஓ.பி.எஸ் வீட்டுக்கு நேரடியாகச் சென்று தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுக்க... மாவட்டச் செயலாளரையும் அழைத்து விளக்கம் பெற்றிருக்கிறார் ஓ.பி.எஸ். ‘‘மாவட்டச் செயலாளர், ஒன்றியத் தலைவர்... இவர்களில் யார்மீது நடவடிக்கை பாயும்?’’ என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

“நான்தான் ஆல் இன் ஆல்!’’ ஆட்டம் போடும் நேருவின் வலதுகரம்

ஏரியா பெயருடன் சேர்த்து அழைக்கப்படும் தி.மு.க பகுதிச் செயலாளர் ஒருவர், அமைச்சர் கே.என்.நேருவின் வலதுகரம் என்பதால், திருச்சி மாவட்டத்தில் அவரின் ஆட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறதாம். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போதே மாநகராட்சியில் டெண்டர் எடுப்பதையும், போலீஸாருக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொடுப்பதையும் முக்கிய வேலையாகச் செய்துவந்தார். பெண் போலீஸாரிடம் தவறாக நடந்துகொண்ட விவகாரம், போலீஸ் உயரதிகாரியைத் தாக்கிய விவகாரம், நில அபகரிப்புப் புகாரில் குண்டர் சட்டத்தில் சிறை சென்றது உள்ளிட்ட பல புகார்கள் இவர்மீது உலாவரும் நிலையில், மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்ததும், திருச்சி மாநகராட்சி டெண்டர்களைத் தனக்கே கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டிக்கொண்டிருக்கிறாராம். அத்துடன் நேரு தரப்பில் டெண்டர் விவகாரங்களைக் கவனித்துக்கொண்டிருக்கும் கீர்த்தியான பிரமுகர் ஒருவருடன் சில தினங்களுக்கு முன்பு கைகலப்பில் ஈடுபட்டதுடன், ‘‘டெண்டர் விவகாரத்தில் இனி நீ தலையிடக் கூடாது. நானே பார்த்துக்கொள்கிறேன்’’ என்று மிரட்டியிருக்கிறாராம். ‘‘ஐந்து ஆண்டுகளுக்குள் இன்னும் என்னென்ன ஆட்டம் போடப்போகிறாரோ?’’ என்று உடன்பிறப்புகளே அரண்டுகிடக்கிறார்கள்

கரைவேட்டி டாட் காம்

கவிழ்த்துவிட்ட உடன்பிறப்புகள்... நொந்துபோன அக்கா!

‘‘சட்டமன்றத் தேர்தலில் உடன்பிறப்புகளே ஒன்று சேர்ந்து கவிழ்த்துவிட்டார்கள். சபாநாயகர், ராஜ்ய சபா எம்.பி எனக் கண்ட கனவுகளில் எதுவும் கைகூடவில்லையே’’ என்று வேதனையில் இருக்கிறாராம் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன். ‘‘அக்கா... அக்கா...’’ என சுப்புலட்சுமியின் தீவிர ஆதரவாளர்களாக வலம்வந்த கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோரும் அமைச்சர் முத்துசாமி முகாமில் ஐக்கியமாகிவிட்டதால் நொந்துபோன சுப்புலட்சுமி ஜெகதீசன், கட்சி நிகழ்ச்சிகளில்கூட கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறாராம். இதற்கிடையே, ‘சட்டமன்றத் தேர்தலில் சீட் வாங்கிக் கொடுக்கிறேன் எனக் கடைசிவரை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்’ என்று உடன்பிறப்புகள் சிலரும் சுப்புலட்சுமிக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்களாம்!

கோஷ்டியை வளர்க்கும் காங்கிரஸ் தலைமை!

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவியாக தாரகை கத்பர்ட் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகியும் புதிய நிர்வாகிகளை நியமிக்க முடியாமல் தவிக்கிறாராம். மாவட்டத்திலுள்ள 11 வட்டாரங்களில் புதிய தலைவர்களை நியமிக்கத் தலைமை ஒத்துழைக்காததால், ஒன்பது வட்டாரங்களில் பொறுப்பாளர்களை நியமித்து கட்சி வேலை செய்கிறார். அதனால், ஒன்பது வட்டாரங்களின் தலைவர்களும் ஒன்று சேர்ந்து தாரகை கத்பர்ட்டுக்கு எதிராக இயங்குகிறார்களாம். ‘கட்சி வளர்ச்சிப் பணி செய்வதா... கோஷ்டியைச் சமாளிப்பதா?’ எனத் தெரியாமல் நொந்துபோயிருக்கிறாராம் தாரகை. ‘‘மாநிலத் தலைமையே கோஷ்டியை ஊக்குவிக்கிறது’’ என்று குமுறுகிறார்கள் தாரகை கத்பர்ட்டின் ஆதரவாளர்கள்.