பிரீமியம் ஸ்டோரி

கோவையில் வரிசைகட்டும் புகார்கள்... நொந்துகொள்ளும் செந்தில் பாலாஜி!

கோவை மாவட்ட வளர்ச்சிப் பணிகளைக் கவனிப்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலினால் அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டிருக்கிறார். மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றம், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் கோவை உடன்பிறப்பு களிடையே கடும் போட்டி நிலவுகிறது. செந்தில் பாலாஜி நியமனத்துக்குப் பிறகு, பல உடன்பிறப்புகள் சென்னையிலுள்ள அவர் வீட்டுக்கே சென்றுவிட்டார்கள். இதுபோக, அக்டோபர் 23-ம் தேதி அவர் கோவை வந்தபோது, விமான நிலையத்திலிருந்து அரசு விருந்தினர் மாளிகை வரை உடன்பிறப்புகள் குவிந்துவிட்டார்கள். ஆனால், அனைத்து இடங்களிலுமே, வழக்கம்போல உடன்பிறப்புகள் ஒவ்வொரு நிர்வாகிமீதும் ‘கட்சி காலியாக இவங்கதான் காரணம்’ புகார்களை வாசித்திருக்கிறார்கள். அதையெல்லாம் கேட்டு, ‘‘நாம ஒரு கணக்கு போட்டு வந்தா, இவங்களையெல்லாம் வெச்சுக்கிட்டு பஞ்சாயத்து பேசவே நேரம் போயிடும்போலயே’’ என செந்தில் பாலாஜி நொந்துகொள்கிறாராம்.

சுரேஷ்ராஜன் Vs செந்தில் முருகன் - கன்னியாகுமரி மல்லுக்கட்டு...

கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க-வில், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்தவர் செந்தில் முருகன். அந்தச் சமயத்தில் நடைபெற்ற தி.மு.க உட்கட்சித் தேர்தலில், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்காக சுரேஷ்ராஜனிடம் நேரடியாக மோதினார். அதன் பின்னர் அ.தி.மு.க., பா.ஜ.க என்று கட்சிகள் மாறிச் சென்றவர், கடைசியாக அ.ம.மு.க குமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்து, இப்போது மீண்டும் தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டார். வந்த வேகத்தில் சுரேஷ்ராஜனுக்கு எதிராக அணி சேர்த்துக்கொண்டு குடைச்சல் கொடுக்கத் தொடங்கிவிட்டாராம். ‘‘ஏற்கெனவே இவர் கட்சியில இருந்தப்ப மனோ தங்கராஜ் ஆதரவாளரா இருந்து, சுரேஷ்ராஜனுக்கு எதிரா செயல்பட்டார். அதே பாணியைத் திரும்பவும் கையில எடுத்திருப்பவர், சுரேஷ்ராஜனுக்கு எதிரான கோஷ்டியை ஒருங்கிணைக்கிறார். வரப்போற நாள்கள்ல என்னென்ன கூத்துகள் நடக்கப்போகுதோ?’’ என்று புலம்புகிறார்கள் தி.மு.க தொண்டர்கள்.

‘‘இது அ.ம.மு.க-வுக்கே பின்னடைவுதான்!’’ - சோகத்தில் சசிகலா விசுவாசிகள்...

சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துப் பேசியது, சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து, திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் பகுதியிலுள்ள அ.ம.மு.க-வினர் சிலர், எடப்பாடியின் கொடும் பாவியை எரித்து போராட்டம் நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் போராட்டங்கள் வெடிக்கும் என சசிகலாவுக்கு நெருக்கமான குடும்ப உறவுகள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்தந்தப் பகுதிகளிலுள்ள அ.ம.மு.க நிர்வாகிகளிடம் பேசி போராட்டம் நடத்த அவர்கள் முயன்றார்களாம். ஆனால், அ.ம.மு.க தலைமை சில ரகசிய உத்தரவுகளைப் பிறப்பித்து, போராட்டத்துக்குத் தடைவிதித்துவிட்டதாம். இது குறித்து ஆதங்கத்துடன் பேசும் அ.ம.மு.க-விலுள்ள சசிகலாவின் விசுவாசிகள், ‘‘எலெக்‌ஷனுக்குப் பிறகு, அ.ம.மு.க-னு ஒரு கட்சி இருக்குறதே மக்களுக்கு ஞாபகம் இல்லை. சின்னம்மாவுக்காகச் செய்யலைன்னாலும்கூட, கட்சித் தொண்டர்களை உயிர்ப்போடு வெச்சுக்குறதுக்காகவாவது எடப்பாடி கொடும்பாவி எரிப்பு போராட்டத்தை தமிழ்நாடு முழுக்க நடத்தியிருக்கணும். டெல்டா மாவட்டங்கள்லயாவது அனல்பறக்கும் போராட்டங்களை நடத்தியிருக்கணும். அமைதியா இருந்தது சின்னமாவுக்கு மட்டுமில்லை, அ.ம.மு.க-வுக்கும் பெரிய பின்னடைவுதான்’’ என்று நொந்துகொள்கிறார்கள்.

கரைவேட்டி டாட் காம்

காய்நகர்த்தும் பேங்க் சுப்பிரமணி... அப்செட்டில் ஜோதிமணி!

கரூர் மாவட்ட அரசியலில் ஆக்டிவ்வாக இருந்த எம்.பி ஜோதிமணியை, அவரது கட்சியினரே ஒதுக்கும்விதமாக சமீபகாலமாகச் செயல்படுவது, அவரின் ஆதரவாளர்களைக் குமுறவைத்திருக்கிறது. கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரான பேங்க் சுப்பிரமணி தரப்பு, ஜோதிமணிக்கு எதிராகச் செயல்பட்டுவருகிறது. இவர் வகித்துவந்த மாவட்டத் தலைவர் பதவியைப் பறித்துத்தான், தன் ஆதரவாளரான சின்னசாமிக்கு வழங்கவைத்தார் ஜோதிமணி. அதனால், ஜோதிமணியையும், மாவட்டத் தலைவர் சின்னசாமியையும் மதிக்காத பேங்க் சுப்பிரமணி, தனி ஆவர்த்தனம் செய்துவருகிறார். ஜோதிமணி நேரடியாக ராகுல் காந்தியிடம் அறிமுகம் உள்ளவர் என்பதால், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளராக மாறியிருக்கிறார் பேங்க் சுப்பிரமணி. அக்டோபர் 22-ம் தேதி கரூர் வந்த கே.எஸ்.அழகிரியின் பிறந்தநாளுக்கு, மாவட்டம் முழுவதும் வாழ்த்து போஸ்டர் அடித்து ஒட்டிய பேங்க் சுப்பிரமணி தரப்பு, அதில் ஜோதிமணி, சின்னசாமி பெயர்களையும் போட்டோக்களையும் தவிர்த்தது. அதோடு, அழகிரி மூலம் மீண்டும் மாவட்டத் தலைவர் பதவியைக் கைப்பற்றவும் காய்நகர்த்திவருகிறாராம் பேங்க் சுப்பிரமணி. இதனால், ஜோதிமணி தரப்பு, படு அப்செட்டில் இருக்கிறது.

‘‘புது டிசைன் போராட்டமா இருக்கே!’’ - மக்கள் பிரதிநிதியின் கட்டிங் கலாட்டா

பனியன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் டாஸ்மாக் கடை ஒன்றை அகற்ற வேண்டும் எனப் பொதுமக்கள் சமீபத்தில் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் இறங்கினார்கள். மக்களோடு சேர்ந்து மக்கள் பிரநிதிநி ஒருவரும் டாஸ்மாக் கடை முன்பு சேர் போட்டு அமர்ந்து கடையை மூடச் சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டார். ‘‘அடேங்கப்பா..! மக்கள் பிரச்னையிலதான் மக்கள் பிரதிநிதிக்கு எவ்ளோ அக்கறை?’’ என்று பொதுமக்கள் பலரும் அவரைப் பாராட்டித் தள்ளினார்கள். விஷயம் என்னவென்று விசாரித்தால், ‘‘சம்பந்தப்பட்ட அந்த டாஸ்மாக் கடையில் இரண்டெழுத்து பிரமுகர் பார் நடத்திவருவதோடு, மாநகரில் மேலும் மூன்று பார்களையும் நடத்திவருகிறார். நான்கு பார்களுக்கும் மாதா மாதம் கொடுக்கவேண்டிய கட்டிங்கை மக்கள் பிரதிநிதி தரப்புக்கு அந்த பிரமுகர் கொடுக்க மறுத்திருக்கிறார். அதனால்தான் மக்கள் பிரதிநிதியே நேரடியாகப் போராட்டம் என்ற பெயரில் களமிறங்கி மிரட்டியிருக்கிறார். போராட்டம் காரணமாக அந்த டாஸ்மாக் கடையை அதிகாரிகள் மூட, பயந்துபோன பார் பிரமுகர் பணத்தை செட்டில் செய்து மீதமிருந்த மூன்று பார்களையும் காப்பாற்றியிருக்கிறார்’’ என்கிறார்கள். மக்கள் பிரநிதிநியின் இந்தப் போராட்டத்தைப் பார்த்து மாவட்டத்தில் பார்களை நடத்திவருபவர்கள் அரண்டுபோய்க் கிடக்கிறார்களாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு