Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

‘‘ஆட்டையப் போட முடியலையே!’’ அப்செட்டில் தி.மு.க நிர்வாகிகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோவை விசிட்டில், அவரை வரவேற்க ஒரு லட்சம் பேரைக் குவிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி இலக்கு நிர்ணயித்திருந்தார். மாநகரப் பகுதிகளில் பூத்துக்கு ஒரு வாகனமும், புறநகர்ப் பகுதிகளில் வார்டுக்கு ஒரு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘ஒரு பேருந்துக்கு குறைந்தபட்சம் 60 பேரை அழைத்துவர வேண்டும். பேருந்தில் வருபவர்களின் பெயர், செல்போன் நம்பருடன், அவர்களின் கையெழுத்தும் வாங்க வேண்டும்’ என்று கறாராக இருந்த செந்தில் பாலாஜியின் ஆட்கள், அனைத்தையும் சரிபார்த்துத்தான் காசு கொடுத்தார்களாம். ஒரு நபருக்கு ரூ.200, பிரியாணிக்கு ரூ.100 என்று மொத்தம் ரூ.300 கொடுக்கப்பட்டதாம். ஆனால், லோக்கல் தி.மு.க நிர்வாகிகள் சிலரோ ஆட்களைக் கூட்டாமல் 60 பேரின் விவரங்களை எழுதி கணக்கு காண்பித்து ஏமாற்றப் பார்க்க, செந்தில் பாலாஜி டீம் பேருந்துகளில் ஆய்வுசெய்து, ‘நீங்க கொடுத்த லிஸ்ட்டை ஏத்துக்க முடியாது. தலையை எண்ணித்தான் காசு கொடுக்க முடியும்’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டதாம். ‘இவ்வளவு பேர்தான் வந்திருக்காங்க... இவ்ளோதான் கொடுக்க முடியும்...’ என்று ஸ்ட்ரிக்டாகக் கூறிவிட்டதாம். ஆட்டையப் போட முடியாத நிர்வாகிகள் ஏகத்துக்கும் அப்செட் ஆகிப்போயிருக்கிறார்கள்!

ஓவர் அலர்ட் மோடில் ஆ.ராசாவின் அட்மின்!

‘நீலகிரி எம்‌.பி-யும், தி.மு.க துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா, சமீபகாலமாகக் கட்சி நடவடிக்கைகளிலிருந்து மெல்ல ஓரங்கட்டப்படுகிறார்’ என்றொரு செய்தி கட்சி வட்டாரங்களில் பரவியது. அது ஆ.ராசாவின் கவனத்துக்கும் சென்று சேர உஷாரானவர், தான் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஒன்றையும் விட்டுவைக்காமல் சமீபகாலமாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவருகிறார். ‘ஆய்வு செய்தோம்’, ‘பார்வையிட்டோம்’, ‘சந்தித்தோம்’, ‘வாழ்த்து பெற்றோம்’ என்று ஆர்வமிகுதியில் ஒரே நாளில் பத்து இருபது போஸ்ட்டுகள் வரை அவரின் அட்மின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுவருகிறார். ‘நாடோடிகள்’ திரைப்பட அரசியல்வாதி பாணியில், ஓவர் அலர்ட் மோடில் இருக்கும் ராசாவை, ‘‘இப்போதானே பாத்தோம்... அதுக்குள்ள கட்அவுட்டே வெச்சுட்டீங்களா?’’ என்று உடன்பிறப்புகளே கலாய்த்துவருகிறார்கள்!

கரைவேட்டி டாட் காம்

‘‘எந்த ஆபீஸுக்குப் போறதுன்னே தெரியலை!’’

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க அலுவலகம் நாகர்கோவில் ஒழுகினசேரி அருகே அமைந்துள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜின் அமைச்சர் தொடர்பு அலுவலகம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் அமைந்துள்ளது. இதையடுத்து, ‘‘அமைச்சர் ஆபீஸுக்குப் போனா மா.செ சுரேஷ் ராஜனுக்கு தெரிஞ்சிடும். மா.செ ஆபீஸுக்குப் போனா அமைச்சருக்கு தெரிஞ்சிடும். அதனால, எந்த ஆபீஸுக்குப் போறதுன்னு ஒரே கன்ஃபியூஸா இருக்கு’’ என்று தலையைப் பிய்த்துக்கொள்கிறார்கள் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க தொண்டர்கள்!

அதிகாரிகளைத் தூக்கி அடித்த புள்ளி!

திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி ஒருவர் ரௌடியிசத்தாலும் கட்டப்பஞ்சாயத்துகளாலும் கட்சியில் மிகப் பிரபலமானவர். அமைச்சர் அன்பில் மகேஷின் ஆதரவாளர்களைத் திட்டமிட்டு ஒதுக்குவதாக அவர்மீது புகார்களும் வட்டமடிக்கின்றன. இந்நிலையில், வணிக வளாகம் ஒன்றை அளக்கும் விஷயத்தில், தனது பேச்சைக் கேட்காத பில் கலெக்டர் வெங்கடேசனை நாகை மாவட்டத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்திருப்பதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. இன்னும் மூன்று அதிகாரிகள் இவரின் அதிகாரத்தில் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால், அரசு அதிகாரிகளும் போலீஸாரும் இவரை மீறி நடக்க அஞ்சுவதாகச் சொல்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்!

டம்மியாக்கப்பட்ட மூத்த நிர்வாகி!

புதிதாக உருவான மாவட்டங்களில் ஒன்றைச் சேர்ந்த அமைச்சரின் வாரிசின் ஆட்டம் கட்சியில் அதிகமாகியிருக்கிறதாம். கட்சிக்காரர்களால் ‘புகழ’ப்படும் ‘பேட்டை’யூரைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகி, உண்மைகளை உடைத்துப் பேசிவிடுவதால், அவரை வாரிசுக்குப் பிடிக்கவில்லையாம். வயதில் மூத்தவராக, கட்சியில் சீனியராக இருந்தாலும் அவரைச் செயல்படவே விடுவதில்லையாம் வாரிசு. சமீபத்தில், கட்சிப் பதவியை ராஜினாமா செய்யக் கோரி அவர் மிரட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. விரைவில், அந்தப் பதவியில் தன் ஆதரவாளர் ஒருவரை உட்காரவைத்து அழகுபார்க்கத் திட்டமிட்டிருக்கிறாராம் வாரிசு. ‘கழகமே கோயில்... கலைஞரே தெய்வம்’ என்று வாழ்ந்தால் இதுதான் கதியா?’ என்று புலம்புகிறார் அந்த நிர்வாகி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism