பிரீமியம் ஸ்டோரி

“ஆத்தா!” - வெலவெலத்த கு.க.செல்வம்

சென்னை, ஆயிரம் விளக்கு தொகுதியில், சமீபத்தில் பிரதமரின் இலவச மருத்துவச் செலவுகளுக்கான ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ஜ.க பக்கம் பாதை மாறிய ஆயிரம் விளக்கு தி.மு.க எம்.எல்.ஏ கு.க.செல்வத்துடன், பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர். அட்டையைப் பெறுவதற்காக கைத்தடியை ஊன்றியபடி வந்த மூதாட்டி ஒருவர், “நீ கவலைப்படாத செல்வம்... இந்த முறையும் தி.மு.க-வுக்குத்தான்ப்பா என் ஓட்டு” என்று சொல்ல, செல்வம் வெலவெலத்து விட்டார். சுதாரித்துக்கொண்டவர், “ஆத்தா... அதில்ல, நான் மோடி கட்சிக்கு வந்துட்டேன்...” என்று சத்தமாகச் சொல்ல... “ஆங்... காதெல்லாம் நல்லாத்தான் கேட்குது... கலைஞருக்குத்தானே ஓட்டு போடச் சொல்லுறே... கண்டிப்பா போட்டுடுறேன். நீ தைரியமா இரு செல்வம்...” என்றபடி பாட்டி திரும்பிச் செல்ல... செல்வமும் அங்கிருந்த பா.ஜ.க நிர்வாகிகளும் பேயறைந்ததுபோல நின்றார்கள். ``கரைவேட்டியை மாத்தினாலும் மூஞ்சியை மாத்த முடியாதே!” என்று தலையிலடித்துக்கொண்டே சென்றார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்!

ராமநாதபுரம் சென்டிமென்ட்! - கண்டுகொள்ளாத தி.மு.க

`ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் வெல்லும் கட்சியோ, அதன் கூட்டணிக் கட்சியோதான் கோட்டையில் ஆட்சியைப் பிடிக்கும்’ என்பது அந்த மாவட்ட மக்களின் சென்டிமென்ட். ஆனால், அங்கு கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க நேரடியாகப் போட்டியிட வில்லை. இதற்குக் காரணம் சுப.தங்கவேலன் என்கிறார்கள். ஓராண்டுக்கு முன்புவரை அங்கு மாவட்டச் செயலாளராக இருந்த சுப.தங்கவேலன், கட்சியில் தனக்குப் போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்துவந்தார். இதனால் 2006-லிருந்து இந்தத் தொகுதி, தி.மு.க போட்டியிடாத வகையில் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கப்பட்டது. கடந்த 2001 தேர்தலில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்ட மறைந்த ரகுமான்கான், 9,112 வாக்குகள் வித்தியாசத்தில் அன்வர் ராஜாவிடம் தோற்றார். அதன் பிறகு நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியே போட்டியிட்ட நிலையில், ஒரு முறை மட்டுமே வெற்றி கிடைத்தது. இதனால், அந்த மாவட்டத்தின் தி.மு.க-வினர் விரக்தியில் இருக்கி றார்கள். “பொதுவா ‘தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்’னு ராமநாதபுரத்தை மனசுலவெச்சுத்தான் சொல்வாங்க... கட்சித் தலைமையும் நம்ம மாவட்டத்தை அப்படி நினைச்சிடுச்சோ!” என்பதே தி.மு.க கரைவேட்டிகளின் புலம்பலாக இருக்கிறது.

கரைவேட்டி டாட்காம்

“சிலை மாதிரிப் போறாரே மனுஷன்!”

கொங்கு மண்டலத்தை, `அ.தி.மு.க-வின் கோட்டை’ என்பார்கள் அந்தக் கட்சியினர். ஆனால், எடப்பாடியின் சமீபத்திய கொங்கு விசிட், கோட்டையைத் தரைமட்டமாக்கிவிடும் போலிருக்கிறது. சமீபத்தில் கொரோனா தடுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்தார் முதல்வர் பழனிசாமி. `கொரோனா தடுப்பு’ என்று ஊருக்குத்தான் உபதேசம்போல... நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்த கட்சியின் கரைவேட்டியினர், விமான நிலையத்தை அல்லோல கல்லோலப்படுத்திவிட்டனர். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், தீபாவளியில் மூழ்கிய தி.நகர் ரங்கநாதன் தெருக்கணக்காகக் கூட்ட நெரிசலில் திணறியது விமான நிலையம். பயணிகள் பலரும் முகம் சுளித்து ஒதுங்கிப்போனார்கள். அவிநாசி சாலையும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சின்னாபின்னமானது. பல ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் மாட்டிக்கொண்டு சிக்கித் தவித்தார்கள். காளப்பட்டி சாலையில் முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த மெகா மின்விளக்கு ஒன்று சாலையில் விழுந்து சில்லுச் சில்லாகச் சிதறி, மின்சாரம் வாண வேடிக்கை நடத்தியது. அங்கிருந்த மக்கள் பதறிச் சிதறி ஓடினார்கள். நல்லவேளையாக அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

கோவையில் இப்படியென்றால், வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைப்பதற்காக அடுத்து சென்ற நீலகிரியில் நடந்த கதையே வேறு! ஜெயலலிதா எப்போது நீலகிரிக்கு வந்தாலும், கொடநாடு சாலையின் தொடக்கத்தில் டானிங்டன் பகுதியிலிருக்கும் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டுத்தான் பயணத்தைத் தொடர்வார். நீலகிரி மாவட்டம் சார்ந்த கட்சியின் சில முக்கிய அறிவிப்புகளையும் இங்கிருந்து அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த முறை ஊட்டிக்கு வந்த எடப்பாடி, அதே சாலையில் சென்றும் சிலைப் பக்கம் மறந்தும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இத்தனைக்கும்

‘எம்.ஜி.ஆர் சிலைக்கு எடப்பாடி மாலை அணிவிப்பார்... அவரிடம் நாலு வார்த்தை பேசிவிடலாம்’ என்று நீண்டநாள்களாகப் பெட்டியில் மடித்துவைத்திருந்த கட்சியின் கரைவேட்டியை வெளுத்து, அயர்ன் செய்தெல்லாம் அணிந்துகொண்டு ஏராளமான கட்சித் தொண்டர்கள் சிலை அருகே காத்துக்கிடந்தார்கள். ஆனால், கண்ணாடியைக்கூட இறக்காமல் கடந்து சென்றது எடப்பாடியின் கார். ``கட்சிக்கு ஆதாரமான எம்.ஜி.ஆர் சிலைக்குக்கூட மரியாதை செய்யாம மனுஷன் சிலை மாதிரிப் போயிட்டாரே!” என்று வெளுத்த வேட்டியை மடித்துக் கட்டியபடியே சென்றார்கள் தொண்டர்கள்!

கரைவேட்டி டாட்காம்

கழகங்களுடன் போட்டி போடும் பா.ஜ.க!

தூத்துக்குடி பா.ஜ.க-வில் வேஷ்டி கிழியாத குறையாக கோஷ்டிப் பூசல் தலைவிரித்தாடுகிறது. தூத்துக்குடி பா.ஜ.க வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மூன்று மண்டலத் தலைவர்களை திடீரென அந்தப் பொறுப்புகளிலிருந்து நீக்கிவிட்டு, அங்கெல்லாம் தன் ஆதரவாளர்களுக்குப் பதவிகளை வழங்கியிருக்கிறார் வடக்கு மாவட்டத் தலைவரான ராமமூர்த்தி. “எங்களை நீக்கியதற்குக் காரணம் என்ன?” என மாவட்டத் தலைவரிடம் பலமுறை கேட்டும் பதில் இல்லாததால், தலைமைக்குப் புகார் அனுப்பினார்கள் பதவி இழந்த வர்கள். அங்கும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. இதனால், நீக்கப்பட்ட பொறுப் பாளர்களும், அவரின் ஆதரவாளர்களும் ராமமூர்த்தியின் வீட்டைக் கட்சிக்கொடி யுடன் முற்றுகையிட்டு தர்ணா செய்தார்கள். இதில் சட்டை கிழியாத குறையாக தள்ளுமுள்ளாகி, அந்த இடமே களேபரமானது. கடைசியில் போலீஸார் வந்து அடித்துக்கொண்டவர் களை விலக்கி வைத்து சமாதானம் செய்துவைத்தார்கள். “கழகங்களுக்குப் போட்டியா கட்சியை வளர்க்கச் சொன்னா... கலகங்களுக்கு போட்டி போட்டு வேட்டியைக் கிழிக்கிறாங்களே...” என்றபடியே கிளம்பிச் சென்றார்கள் தாமரைத் தொண்டர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு