பிரீமியம் ஸ்டோரி

‘‘காங்கிரஸ் வேண்டாம்!’’ - கலங்கும் தொண்டர்கள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடித் தொகுதியைச் சேர்ந்த தி.மு.க தொண்டர்களிடம் கூட்டணிப் புலம்பல்கள் அதிகம் கேட்கின்றன. “காங்கிரஸ் கட்சியைவிட அதிக வாக்குவங்கியுள்ள கட்சிகள் தமிழகத்தில் அதிகமாகிவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வது தேவையற்றது. காரைக்குடி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ராமசாமி, தி.மு.க தொண்டர்களை மதிப்பதே இல்லை. காரைக்குடியில் அடிப்படை வசதிகளைக்கூட முறையாகச் செய்வதில்லை. சாக்கடைத் திட்டங்களும், முறையான சாலை வசதிகளும் இல்லாமல் பொதுமக்கள் அவஸ்தைக்கு ஆளாகின்றனர். ஒட்டுமொத்தமாகவே காங்கிரஸ் தி.மு.க-வுக்குத் தேவையில்லை. மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் தோல்விதான் மிஞ்சும்” என்று புலம்புகிறார்கள்.

விருதுநகர் அ.தி.மு.க-வினரை ஆட்டுவிக்கும் நியூமராலஜி!

பால்வளத்துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜி, பல வருடங்களுக்கு முன்னர் ராஜேந்திரன் என்ற தன் பெயரை `ராஜேந்திர பாலாஜி’ என மாற்றினார். பெயர் மாற்றம் செய்த பிறகே எம்.எல்.ஏ., மாவட்டச் செயலாளர், அமைச்சர் என உச்சத்துக்குச் சென்றார். அவரைத் தொடர்ந்து, துரைப்பாண்டி என்ற பெயரை `ராஜவர்மன்’ என மாற்றிக்கொண்டார் சாத்தூர் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்குமார், சமீபத்தில் தன் பெயரை `ரவீந்திரநாத்’ என மாற்றிக்கொண்டார். இவர்களைப்போலவே, ராஜபாளையம் அ.தி.மு.க நகரச் செயலாளர் பாஸ்கரன், `ராணா பாஸ்கரராஜ்’ எனவும், ராஜபாளையம் நகர ‘ஜெ பேரவை’ செயலாளர் முருகேசன், `துரை முருகேசன்’ எனவும் பெயர் மாற்றம் செய்துள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும் இதே பாணியில் நியூமராலஜி நிபுணர்களை நாடியிருக்கிறார்கள். ‘‘மக்களுக்கு நல்லது செஞ்சு தேர்தல்ல ஜெயிக்கப் பார்க்கிறதை விட்டுட்டு, பேரை மாத்திவெச்சு இப்படி கூத்தடிக்கிறாங்களே...’’ என நொந்துகொள்கிறார்கள் தொகுதியிலுள்ள ரத்தத்தின் ரத்தங்கள்!

கரை வேட்டி டாட் காம்

பட்டியல் இன்னும் வரல!

தமிழக காங்கிரஸ் கட்சியில், சில மாவட்டங்களுக்குப் புதிய மாவட்டத் தலைவர்கள் மற்றும் புதிய மாநில நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த முக்கியத் தொண்டர்கள் பலரும் பொறுமையிழந்து அ.தி.மு.க., ரஜினி அல்லது கமல் கட்சியில் இணைய ஆரம்பித்துவிட்டார்கள். எல்லா மாநிலங்களிலும் நிர்வாகிகளை நியமனம் செய்து தினமும் அறிவித்துக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் எந்த அறிவிப்பும் வரவில்லை. `இவர்கள் நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கும்போது, அதில் பாதிப் பேர் அவர்கள் ஆதரவாளர்களுடன் வேறு கட்சிகளில் இருப்பார்கள்’ என்ற புலம்பல் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பலமாக உலாவருகிறது.

“இப்பல்லாம் கொள்கைகள் தேவையில்லை!?”

பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போட்டுக்கொள்வது மிகவும் பிற்போக்கானது என்கிற பார்வை, தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் ஆழமாகப் போட்ட விதை. ஆனால், கோவை தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர், தன்னை சாதிப் பெயருடன்தான் அடையாளப்படுத்திக்கொள்கிறார். கோவை மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரின் இயற்பெயர் கிருஷ்ணன். ஆனால், அவரை அனைவரும் `பையா கவுண்டர்’ என்றுதான் அழைக்கிறார்கள். தி.மு.க தலைமை வெளியிடும் அறிவிப்புகளில், அவரின் சாதிப் பெயரைத் தவிர்த்துவிட்டு, `பையா என்கிற கிருஷ்ணன்’ என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால், கிருஷ்ணனோ தன் சாதிப்பாசத்தை விடாமல் தக்கவைத்துக்கொள்ளும் வகையில், முகநூல் முதல் கட்சி போஸ்டர் வரை அனைத்திலும் சாதிப் பெயரையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார். ‘‘கட்சியில் இப்போது பொறுப்புகளைக் கைப்பற்ற கட்சியின் கொள்கைகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. ‘செல்வாக்கு’ இருந்தாலே எல்லாப் பொறுப்பும் கிடைக்கும்’’ என்று சீனியர் உடன்பிறப்புகள் புலம்புகிறார்கள்.

கண்டுக்கலை... கட்சி மாறுறோம்!

டெல்டா மாவட்ட தி.மு.க-வினர் அவ்வளவு எளிதில் மாற்றுக் கட்சிக்குச் செல்ல மாட்டார்கள். இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. இது பற்றி ஆதங்கத்துடன் பேசும் தி.மு.க அபிமானிகள், “கோ.சி.மணி, பழனிமாணிக்கம் ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக இருக்கும்போது, ஒரு வட்டச் செயலாளர் மனவருத்தத்தில் இருந்தால்கூட, நேரில் அழைத்துப் பேசி, சமாதானப்படுத்துவார்கள். இப்போது பொறுப்பிலிருக்கும் துரை.சந்திரசேகர், ஏனாதி பாலசுப்ரமணியன், பூண்டி கலைவாணன் போன்றவர்கள் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதனால் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலிருந்து கொத்துக் கொத்தாகத் தி.மு.க-வினர் பலரும் பா.ஜ.க பக்கம் தாவிக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தகவல் மேலிடத்துக்குத் தெரியாமல் இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போதுதான் தி.மு.க தலைமை விழித்துக்கொள்ளும் போலிருக்கு’’ என்று ஆதங்கப்படுகிறார்கள், உண்மையான தி.மு.க விசுவாசிகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு