Published:Updated:

கரைவேட்டி டாட் காம்

கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரைவேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரைவேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரைவேட்டி டாட் காம்

தஞ்சாவூர் சீக்ரெட் டீலிங்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ‘ரமேஷ்... சுரேஷ்...’ சாக்லேட் விளம்பரம் கணக்காக நெருக்கமோ நெருக்கம் காட்டுகிறார்கள்! ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் நெருக்கமாக இருப்பதில் ஆச்சர்யமில்லைதான்... ஆனால், இருவரும் அதே மாவட்டத்தின் அ.தி.மு.க புள்ளியுடன் சீக்ரெட் டீலிங் செய்துகொண்டு, ஏகத்துக்கும் கமிஷன் அடிப்பதுதான் பிரச்னையாகியிருக்கிறது. “எங்களைவிட இவங்களுக்குத்தான் அண்ணன் ரொம்ப செல்லம் குடுக்குறாரு” என்று அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களே கண்ணைக் கசக்குகிறார்கள். இதனால், ஆளுங்கட்சிக்கு எதிராகச் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவொரு போராட்டத்தையும் இவர்கள் நடத்துவது இல்லை. இவர்களுக்குப் பாலமாக இருப்பது ம.தி.மு.க பிரமுகர் ஒருவர்தானாம். கேட்பாரற்று ‘நீல’வானில் ‘துரை’ கணக்காக சிறகடித்துப் பறக்கும் இவர்களுக்குக் கட்சித் தலைவர் ஸ்டாலின் ‘வைத்தியம்’ பார்க்க மாட்டாரா என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள்!

கன்னியாகுமரி கலகம்!

நாகர்கோவில் அ.தி.மு.க மாநகரச் செயலாளராக இருக்கும் சந்துருவுக்கும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் அசோகனுக்கும் மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது. “சந்துரு அ.தி.மு.க அலுவலகத்துக்கே வருவதில்லை; மா.செ நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. தனி ஆவர்த்தனம் நடத்துகிறார்” என்று குற்றம்சாட்டும் அசோகன் தரப்பு, சந்துருவை டம்மி ஆக்குவதற்காக மாநகரத்தை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என நான்காகப் பிரித்து நான்கு செயலாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. இதனால், கடுப்பான சந்துரு தரப்பினர், அசோகன் சீட் வாங்குவதற்காகப் போடும் ரூட்களிலெல்லாம் முட்டுக்கட்டை போடுகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கோஷ்டிப்பூசல் உச்சத்திலிருப்பதால் கட்சிக்குத்தான் பின்னடைவு என்று புலம்புகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!

கரைவேட்டி டாட் காம்

ராணிப்பேட்டை ரவுசு!

ராணிப்பேட்டை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளராகவும், கூட்டுறவுப் பண்டகச் சாலைத் தலைவராகவும் இருப்பவர் ‘சுமைதாங்கி’ ஏழுமலை. 2016 சட்டமன்றத் தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு மண்ணைக் கவ்விய இவர், மீண்டும் சீட்டுக்காகத் துண்டு போட்டுள்ளார். சுமைதாங்கியே சரிந்துவிழும் அளவுக்கு இவருக்குக் கடன் சுமை அதிகமாம். அதுமட்டுமல்ல... கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டால், ``அண்ணன் எம்.எல்.ஏ ஆவப்போறேன்... இப்பப் போய் காசெல்லாம் கேட்டுக்கிட்டு...” என்று தட்டிக்கழிப்பவர், தொழிற்சாலை தரப்புகளிடம் டீல் பேசி கல்லா கட்டுகிறாராம். ``இவரெல்லாம் கட்சிக்கே சுமை” என்று தலைமைக்குப் புகார் தட்டிவிட்டிருக்கிறார்கள் ராணிப்பேட்டை கட்சி நிர்வாகிகள்!

மதுரை மல்லுக்கட்டு!

பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் எத்தனையோ முறை மதுரைக்கு வந்து சென்றிருக்கிறார். அப்போதெல்லாம் அவரைக் கண்டுகொள்ளாத அமைச்சர் செல்லூர் ராஜூ, பிப்ரவரி 16-ம் தேதி மதுரைக்கு வந்திருந்த முருகனைச் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செய்தார். இதை முன்வைத்துப் பேசும் பா.ஜ.க நிர்வாகிகள், “தனது மதுரை மேற்கு தொகுதியில் வெற்றிவாய்ப்பு இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட செல்லூர் ராஜூ, தெற்கு தொகுதிக்கு மாற நினைக்கிறார். ஆனால், அந்தத் தொகுதியை பா.ஜ.க எதிர்பார்க்கிறது. அதை விட்டுத்தரும்படி முருகனிடம் பவ்யமாக கேட்டுக்கொண்டிருக்கிறார் அமைச்சர். முருகன் எதுவும் பதில் சொல்லவில்லை என்றாலும் செளராஷ்டிரா சமூக மக்கள் அதிகமிருக்கும் தொகுதியை விட்டுத்தர நாங்கள் சம்மதிக்க மாட்டோம். மீறி விட்டுக்கொடுத்தால் போராட்டம் நடத்துவோம்” என்று மல்லுக்கட்டுகிறார்கள்!

கரைவேட்டி டாட் காம்

கோவை டார்ச்சர்!

தொண்டர்களுக்கு குவார்ட்டர், மட்டன் பிரியாணி என்று செலவு செய்யும் கட்சி நிர்வாகிகளுக்கு மத்தியில், தொண்டர்களிடமே ‘கட்டிங்’ போடுகிறார் என்று கோவை மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ஒருவர் பற்றிப் புலம்பித் தீர்க்கிறார்கள் உடன்பிறப்புகள். சமூக வலைதளங்களில் ‘சிங்கார’மாக வலம்வரும் அந்த நிர்வாகி, எதிர்ப்படுபவர்களிடம் எல்லாம் ``அண்ணே சில்லறை இல்லை... போனுக்கு கொஞ்சம் ரீசார்ஜ் பண்ணிட்டு போங்களேன்” என்று ‘ரெண்டு இட்லி... கொஞ்சம் கெட்டிச் சட்னி’ ரேஞ்சுக்கு டார்ச்சர் செய்கிறாராம். இதனால், இவரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடுகிறார்கள் உடன்பிறப்புகள்!

ஊட்டியில் நடந்த போட்டி!

சமீபத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஊட்டிக்கு வந்திருந்தார். இரவில் வருகை தந்த‌ அமைச்சரை வரவேற்க, வாட்டும் உறைபனியிலும் வாடாமல் காத்து நின்றார்கள் கட்சி நிர்வாகிகள். அமைச்சர் வந்தவுடன், நிர்வாகிகள் சிலர் மலர்க்கொத்து கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அமைச்சரின் காலில் டாமாரென விழுந்தார் மாவட்டச் செயலாளர் வினோத். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சீனியரும், முன்னாள் எம்.பி-யுமான அர்ஜூனன் வேறு வழியின்றி மடேரென அமைச்சரின் காலில் விழுந்தார். தொடர்ந்து குன்னூர் எம்.எல்.ஏ சாந்தி ராமுவும் அமைச்சர் காலில் விழ... கூடவே முன்னாள் மாவட்டச் செயலாளர் பாலநந்தகுமாரும் காலில் விழுந்தார். “மாவட்டத்துல ஒரேயொரு மானஸ்தன் நான்தான்!” என்கிற ரேஞ்சுக்கு குன்னூர் நகரச் செயலாளர் சரவணன் மட்டும் காலில் விழாமல் பூங்கொத்தை அமைச்சரின் கையில் கொடுத்துவிட்டு நின்றார். இந்த வீடியோவை வைரலாக்கிக் கிண்டல் செய்துவருகிறார்கள் எதிர்க்கட்சியினர்!