Published:Updated:

கரை வேட்டி டாட் காம்

கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

கரை வேட்டி டாட் காம்

- ‘வட்டம்’ பாலா

Published:Updated:
கரை வேட்டி டாட் காம்
பிரீமியம் ஸ்டோரி
கரை வேட்டி டாட் காம்

திருந்திய நிர்வாகி... திருந்தாத தலைமை !

கோவை மாநகர மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரின் இயற்பெயர் கிருஷ்ணன். அவரைப் பலரும் ‘பையா கவுண்டர்’ என்றே அழைத்துவந்தார்கள். ‘பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்வது பிற்போக்கானது என்பது தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் போட்ட விதை. ஆனால், திராவிட இயக்கத்திலேயே மாவட்டப் பொறுப்பிலிருப்பவர் தன்னை சாதிப் பெயருடன் அடையாளப்படுத்திக்கொள்கிறார்’ என்று ‘கரைவேட்டி டாட் காம்’ பகுதியில் எழுதியிருந்தோம். இதையடுத்து பலரும், ‘தி.மு.க தலைமையிடம் புகார் தெரிவிப்போம்’ என்று பொங்கினார்கள். அதனால், தனது சமூக வலைதளப் பக்கங்களில் சாதிப்பெயரை நீக்கிவிட்ட பையா, தனது அறிக்கைகளிலும் ‘பையா என்கிற கிருஷ்ணன்’ என்றே குறிப்பிடுகிறார். ஆனால், சமீபத்தில் கோவை வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் மேடையில் பேசும்போது ‘பையா கவுண்டர்’ என்றே குறிப்பிட்டுப் பேசினார். இதனால், ‘ஊருக்குத்தான் உபதேசம்’ என்று அலுத்துக்கொள்கிறார்கள் திராவிட இயக்கத்தினர்!

‘‘காவித்துண்டு வாங்கவே காசில்லை...”

திருவாரூர் மாவட்டம் - மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், தஞ்சை மாவட்டம் - திருவையாறு, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய பகுதிகளில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட உட்கட்சி அதிருப்தியின் காரணமாக தி.மு.க பிரமுகர்கள் பலரும் பா.ஜ.க-வுக்குத் தாவினார்கள். ‘ஜி’-யாக மாறிய அவர்கள் இப்போது, ‘‘மத்தியில ஆட்சி செய்யுற கட்சிங்கிறதால வெயிட்டா கவனிப்பாங்க; எங்களுக்குச் செலவு எதுவும் இருக்காதுனு நினைச்சுதான் கட்சி தாவினோம். ஆனா, கட்சியில இணைப்புவிழா நடத்துனதுல தொடங்கி இப்ப வரைக்கும் கட்சி நிகழ்ச்சிகளுக்கு நாங்கதான் கைக்காசைச் செலவு செய்ய வேண்டியிருக்கு. கட்சியை வளர்க்க மாநிலத் தலைமையிலிருந்து நிறைய பணம் வர்றதா சொல்றாங்க. அதெல்லாம் எங்க போகுது... யாரு சுருட்டுறாங்கனு தெரியலை. புலி வாலைப் புடிச்ச கதையா இருக்கு... வர வர காவித்துண்டு வாங்கவே கையில காசில்லை” என்று அழாத குறையாக நொந்துகொள்கிறார்கள்.

கரை வேட்டி டாட் காம்

‘‘சீட் கிடைக்கலைன்னா, சுயேச்சைதான்!’’

புதுக்கோட்டம் மாவட்டம், கறம்பக்குடி ஒன்றிய கவுன்சிலராக தற்போது இருக்கும் சொக்கலிங்கத்துக்கு, கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க வாய்ப்பு தரவில்லை. இதனால், சுயேச்சையாகக் களமிறங்கி 23,000 வாக்குகளைப் பெற்று, அ.தி.மு.க-வின் வெற்றி வாய்ப்பையும் தகர்த்தார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இவரைப்போல பலரும் புதுக்கோட்டை மாவட்டத் தொகுதிகளில் சுயேச்சையாகக் களமிறங்கக் காத்திருக்கிறார்களாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் முத்தரையர் சமூகத்துக்கு கணிசமான வாக்குவங்கி இருப்பதால், வெற்றி தோல்வியில் அது முக்கியப் பங்குவகிக்கிறது.

வழக்கறிஞரணி மாவட்டத் துணைத் தலைவராக இருக்கும் நெவளிநாதன், விஜயபாஸ்கரின் விராலிமலையிலும், ஆலங்குடி தொகுதியிலும் போட்டியிட விருப்ப மனு வாங்கியிருக்கிறார். திருமயத்தில் அழகு சுப்பையாவும், புதுக்கோட்டையில் சொக்கலிங்கமும் சீட் கேட்கிறார்கள். இவர்கள் மூவருமே முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், விஜயபாஸ்கர் தனது சமூகத்தைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கிக் கொடுப்பதில் தீவிரம் காட்டிவருகிறாராம். ஒருவேளை இவர்களுக்கு சீட் கிடைக்காதபட்சத்தில் முத்தரையர் சமூக வேட்பாளர்கள் சுயேச்சையாகக் களம் காணவும் காத்திருக்கிறார்களாம். ஏற்கெனவே அ.ம.மு.க பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க-வுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக் காத்திருக்கும் நிலையில், இவர்களும் குடைச்சலைக் கொடுப்பதால், அனைவரையும் சரிக்கட்டும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் விஜயபாஸ்கர்.

‘‘சன்மானம் வீடு தேடி வரும்!’’ - மேடையில் முழங்கிய ஆளுங்கட்சி நிர்வாகி

ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை நீலகிரி மாவட்டம், குன்னூரில் ஆளுங்கட்சியினர் விமர்சையாகக் கொண்டாடினர். மாவட்டச் செயலாளர் வினோத் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பேசிய சிறுபான்மையினர் பிரிவு மாவட்டச் செயலாளர் சத்தார், ‘‘வரும் தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் குன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைவருக்கும் சன்மானம் வழங்கப்படும். ஒரு வீடுகூட தவறாமல் அந்த சன்மானத்தைக் கொண்டுவந்து சேர்ப்போம். அனைவரும் அ.தி.மு.க-வுக்கே வாக்களியுங்கள்’’ என்று பகிரங்கமாக மேடையிலேயே முழங்கினார். ஓட்டுக்கு சன்மானம் தருவதை மேடையிலேயே பேசிய வீடியோ பதிவைக் கைப்பற்றி, தேர்தல் கமிஷனில் புகார் அளிக்க எதிர்க்கட்சியினர் தயாராகிவருகிறார்கள்.