பிரீமியம் ஸ்டோரி

கிராமசபைக் கூட்டத்துக்கு டோக்கன்!

‘அ.தி.மு.க-வை நிராகரிப்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் ‘மக்கள் கிராமசபைக் கூட்டம்’ நடத்தப்பட்டுவருகிறது. கூடலூரில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பி-யுமான ஆ.ராசா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிகமாகப் பெண்களைத் திரட்டி, கட்சிக்குள் மாஸ் காட்ட திட்டமிட்ட கூடலூர் தி.மு.க நகரச் செயலாளரான ராஜேந்திரன், டோக்கன் சிஸ்டத்தைக் கையிலெடுத்தார். 1,100 டோக்கன்களைத் தயார்செய்து ஒவ்வொரு டோக்கனுக்கும் 500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து, பெண்களைத் திரட்டிக் காட்டினார். ஆனால், சொன்னபடி பணத்தைக் கொடுக்காமல், ஆளுக்கொரு புடவையைக் கையில் கொடுத்து ஏமாற்றிவிட்டதாக அந்தப் பகுதிப் பெண்கள் கோபத்துடன் புலம்பிவருகிறார்கள்.

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு நன்றி!

விருதுநகர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 20 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவற்றைத் தொடங்கிவைத்தார். அப்படித்தான், அருப்புக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட குல்லூர்சந்தை பகுதியிலும் மினி கிளினிக் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், ‘குல்லூர்சந்தை கிராமத்துக்கு மினி கிளினிக் பெற்றுத்தந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு நன்றி’ என தங்கள் கட்சி எம்.எல்.ஏ-வுக்கு நன்றி தெரிவித்து ஊர் முழுவதும் தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். இதைப் பார்த்து கடுப்பான அ.தி.மு.க-வினர், “திட்டத்தைக் கொண்டுவந்தது நாங்கள். பெயரைத் தட்டிச் செல்வது அவர்களா?” என்று தி.மு.க-வினருடன் மல்லுக்கட்டி வருகிறார்கள்.

கரைவேட்டி டாட்காம்

முருகன் விழா மேடையில் சர்ச்சைப் பிரமுகர்!

தென் கடலோர மாவட்டத்தில் நடந்த ‘நம்ம ஊரு பொங்கல் விழா’ மற்றும் கட்சி நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்துகொண்டார். அவர் பங்கேற்ற விழா மேடையில், பாலியல் புகாரில் சிக்கிய நபர் ஒருவர் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட சம்பவம் கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்பு, மாவட்ட கட்சி அலுவலகம் அருகே வசித்துவந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக, அந்தக் கட்சியின் அலுவலக நிர்வாகியாக பணியாற்றிய அந்த நபர்மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும், கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரின் ஆதரவு தொடர்ந்து இருந்ததால், சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்ததுடன், மாநிலத் தலைவருக்குத் துண்டு அணிவிக்கவும் அனுமதிக்கப்பட்டார். மாவட்ட நிர்வாகிக்கு எதிரானவர்கள், இது தொடர்பாக கட்சித் தலைமைக்குப் புகாரைத் தட்டியிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு