Published:Updated:

கரைவேட்டி டாட்காம்

கரைவேட்டி டாட்காம்
பிரீமியம் ஸ்டோரி
News
கரைவேட்டி டாட்காம்

- ‘வட்டம்’ பாலா

‘‘எல்லா கரைவேட்டியையும் கட்டிடுவாருபோலருக்கே...’’

அ.தி.மு.க-வின் வேலூர் மாவட்ட மாணவரணிச் செயலாளராக இருந்த ஆர்.பி.ரமேஷ், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அ.ம.மு.க-வுக்குச் சென்றார். கட்சியில் எடப்பாடியின் கை ஓங்கியதைப் பார்த்து மீண்டும் தாய்க் கட்சிக்கே ஓடி வந்தார். இம்முறை அவருக்குக் கட்சியில் பெரிய மரியாதை இல்லை. இருப்பினும், அமைச்சர் வீரமணி நிழலில் ஒதுங்கிக்கொண்டு மாநகராட்சி ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்துவந்தார். இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரிடம் ஒன்றரைக் கோடி ரூபாய் மோசடி செய்ததாக இவர்மீது புகார் கிளம்பவே, அமைச்சர் தரப்பும் இவரைக் கைகழுவிவிட்டதாம். இதனால், தி.மு.க தரப்பு பக்கம் ஒதுங்கலாமா என்ற எண்ணத்தில் இருக்கிறாராம். ‘‘போற போக்கைப் பார்த்தா எல்லாக் கட்சி கரைவேட்டியையும் கட்டிடுவாருபோலருக்கே...’’ என்ற கிண்டல் குரல்கள் எழுந்துள்ளன.

‘‘இவருக்கு எப்படிப் பதவி கிடைச்சுது?’’

டெல்டா தி.மு.க-வில் முக்கியப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒருவரைப் பற்றி, கழகக் கண்மணிகளிடம் ஏகப்பட்ட ஆதங்கம் அலைமோதுகிறது. ``பல வருஷமா கட்சிச் செயல்பாடுகள்லருந்து ஒதுங்கியிருந்தவருக்கு, தி.மு.க தலைமை ஏன் இவ்வளவு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கு?’’ என்று பொருமித்தள்ளும் உடன்பிறப்புகள், ‘‘இவர் ஏற்கெனவே எம்.எல்.ஏ-வா இருந்தப்பவே, கட்சிக்காரங்க வீட்ல ஏதாவது துக்க நிகழ்ச்சின்னாக்கூட வர மாட்டார். அதோட எப்பவும் போதை மயக்கத்துலேயே வேற இருப்பார். டி.ஆர்.பாலு, பழனிமாணிக்கம்னு கட்சி சீனியர்களோடும் நல்ல உறவு கிடையாது. சட்டமன்றத் தேர்தல் நெருங்குற நேரத்துலயா இப்படியொரு முடிவை எடுக்கணும்?’’ என்று புலம்பித் தவிக்கிறார்கள்.

கரைவேட்டி டாட்காம்

‘‘ஒத்தச் சீட்டைக் கொடுத்திருந்தா...’’

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியத்தில் கவுன்சிலராக இருப்பவர் ஜெயக்குமார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர் உள்ளாட்சித் தேர்தலின்போது, ‘‘எனக்கொரு கவுன்சிலர் சீட்டு கொடுங்கண்ணே!’’ என எம்.எல்.ஏ தோப்பு வெங்கடாசலத்தை அணுக, அவர் மறுத்துவிட்டாராம். அதையடுத்து, சுயேச்சையாகக் களமிறங்கியவர், கூடவே தன் ஆதரவாளர்களையும் களமிறக்கியிருக்கிறார். மொத்தம் ஒன்பது வார்டுகளில் போட்டியிட்டு நான்கில் வெற்றிபெற்று தோப்பையே திகைக்கவைத்திருக்கிறார். இப்போது, பெருந்துறையைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் தீபாவளிப் பரிசை வாரி வழங்கியிருக்கிறாராம் ஜெயக்குமார். “இதெல்லாம் எம்.எல்.ஏ சீட்டுக்கான அச்சாரம்தான்!” என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இப்போதே ஒரு கூட்டம் ஜெயக்குமார் பின்னால் அணிவகுத்தும்வருகிறது. ‘ஒத்தச் சீட்டைக் கொடுத்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காதே!’ என்று தோப்பு ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள்.

‘‘தூங்கிட்டு இருக்கேன்!’’

கோவையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதும், அதைக் கிழித்து தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் கைதாவதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இந்த விஷயத்தில் சீனியர்கள் ஆக்கபூர்வமாக எதிர்வினையாற்றவில்லை என்ற வருத்தம் இளைஞரணியினருக்கு இருக்கிறது. இந்தநிலையில், தற்போது மீண்டும் ஸ்டாலினை விமர்சித்து நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை நாம் போட்டோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே, தி.மு.க தொண்டர் ஒருவர் போஸ்டரைக் கிழித்துக்கொண்டே நிர்வாகி யாருக்கோ போன் செய்து ஸ்பீக்கரில் போட்டார். இவர் போஸ்டர் விஷயத்தைச் சொல்ல, எதிர்முனையில் பேசியவர், ‘‘தூங்கிட்டு இருக்கேன். அரை மணி நேரம் கழிச்சு நானே கூப்பிடுறேன்’’ என்று கட் செய்துவிட்டார். ‘‘இப்படி இருந்தா எப்படித் தலைவா இங்க ஜெயிக்க முடியும்?” என்று புலம்பியவாறே அடுத்த போஸ்டரைக் கிழிக்கச் சென்றார் அந்த உடன்பிறப்பு!