Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

தலையாய பதவியை அவ்வளவு சீக்கிரம் மாற்ற மாட்டார்கள் என்றுதான் நினைத்தாராம் நெற்றிப்பொட்டு அதிகாரி. டெல்லியின் ஆசி இருப்பதால் அசைக்க முடியாது என எண்ணியவரை, பதவியேற்பு முடிந்த கையோடு முதன்மையானவர் தூக்கி அடிக்க, டெல்லியே மிரண்டுபோனதாம். #ஆட்சி மாறிடுச்சு பாஸ்…

பவரான துறையை ஏற்கெனவே கவனித்த ஜெயமான அதிகாரியைத் தொடர்ந்து அதே பதவியில் வைத்திருக்க நினைத்தார்களாம் குடும்ப உறவுகள். ‘ஆட்சியில் இல்லாதப்ப அவர்தானே விசுவாசமா இருந்தார்’ என மலர் அதிகாரியைக் கொண்டுவர இன்னும் சில உறவினர்கள் போர்க்குரல் எழுப்பினார்களாம். உறவுகளுக்குள் நடந்த முட்டல் மோதலின் முடிவில், ஒருவழியாக மலர் அதிகாரிக்கு பவர் கைமாறியதாம்! #சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்காம இருந்தா சரி…

கிசுகிசு

ஜெயித்தால் மினிஸ்டர் என்கிற உத்தரவாதத்தோடு மலர்ப் பெண்மணி நிற்க, ‘சாதிரீதியான வாக்குகள் எனக்குத்தான்’ என எதிர்த்து நின்றார் நடமாடும் நகைக்கடைக்காரர். ‘முடிந்தால் டெபாசிட் வாங்கிக் காட்டுங்க’ எனச் சவால்விட்டது அம்மணி தரப்பு. தேர்தல் முடிவு நடமாடும் நகைக்கடைக்காரருக்குச் சாதகமாக அமைய, “டெபாசிட் வாங்கிட்டோம். அம்மணியையும் வீழ்த்திட்டோம்” என பிரஸ் மீட் வைத்துப் பீற்றிக்கொள்ளத் திட்டமிட்டாராம். அந்த நேரம் பார்த்து மோசடி வழக்கு ஒன்றில் பக்கத்து மாநிலத்து போலீஸ் அவரைக் கைதுசெய்ய, பிரஸ் மீட் கேன்சல்! #டெபாசிட் வாங்கியாச்சு… ஜாமீன் வாங்கியாச்சா?

வில்லன் நடிகரின் பெயர்கொண்ட மினிஸ்டரிடம் அடிக்கடி போனில் பேசுகிறார் முதன்மையானவர். முதல் கையெழுத்திட்ட கோப்புகளில் முக்கியமானது இவர் துறை என்பதால்தான் இந்த அக்கறையாம். கடந்த காலங்களில் துறைரீதியாக நடந்திருக்கும் குளறுபடிகளைச் சொன்ன மினிஸ்டர், துறையை கவனித்த மஞ்சள் புள்ளி மீது வழக்கு போடுகிற அளவுக்கு மோசடிகளைப் பட்டியல் போட்டாராம். #துறையையே ‘பாலா’க்கிட்டாரோ…

கப்பல் தலைவரின் மகனும் மச்சானும் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து சொன்னதில் முதன்மையானவருக்கு ரொம்பவே நிறைவாம். கப்பல் தலைவரின் நலன் குறித்து கேட்ட முதன்மையானவர், ‘விரைவில் நானே அவரை நேரில் வந்து சந்திக்கிறேன்’ எனச் சொல்லி அனுப்பினாராம். #அந்த வானத்தைப்போல…

அனுசரணையான கோரிக்கைகளோடு யார் வந்தாலும், ‘தயவுபண்ணி என்கிட்ட கேட்காதீங்க. துறைரீதியான அதிகாரிகளைப் போய்ப் பாருங்க. நிச்சயம் செய்வாங்க’ எனச் சொல்லிக் கையெடுத்துக் கும்பிடுகிறாராம் ‘பொது’வான வேல் கடவுள் புள்ளி. . ‘நீங்களே ஒரு வார்த்தை சொன்னா நல்லா இருக்கும்’ என வம்படியாக இழுப்பவர்களிடம், ‘நான் சொல்லி நடக்கும்னா, எனக்கே நல்ல துறையை வாங்கியிருக்க மாட்டேனா… போங்கய்யா’ என்கிறாராம் வெறுத்துப்போய். #துறை… குறை…

கிசுகிசு

இனிஷியல் தலைவர், இவ்வளவு மோசமான வாக்குகளைப் பெறுவோம் எனக் கனவிலும் நினைக்கவில்லையாம். ஆனாலும், கடனில் தத்தளிக்கும் நிர்வாகிகளிடம் கம்பீரம் குறையாமல் பேசுகிறாராம். ‘வேற கட்சிகளுக்குப் போறதா இருந்தா போங்க. ஆனா, அப்புறம் காலத்துக்கும் வருத்தப்படுவீங்க’ என்கிறாராம் பீடிகையோடு. போவதா, புலம்புவதா எனத் தெரியாமல் திண்டாடுகிறார்கள் தோற்ற நிர்வாகிகள். #மக்கர் பண்ணுதே வாழ்க்கை…

நடுநிலைக் கட்சியின் தலைவர் தேர்தல் செலவுகளுக்கான கணக்கு விவரங்களைக் கேட்டிருக்கிறாராம். திரட்டிய நிதிக்கும், செலவான தொகைக்கும் இடையே நிறைய வித்தியாசமாம். கணக்கு விவரங்களைத் துருவினால் இன்னும் சிலரும் கட்சியைவிட்டு வெளியேற வேண்டிய நிலை வரும் என்கிறார்கள். #நீதி கேட்கலாம்… மீதி கேட்கலாமா?

சீனியர் புள்ளிகளுக்கு முக்கியத்துவம் இல்லாத பொறுப்புகளைக் கொடுத்ததைச் சிலர் குறைசொல்ல, ‘அதிகாரத்தை ஒரே இடத்தில் குவிச்சுட்டா அப்புறம் அவங்களைக் கையிலேயே பிடிக்க முடியாது’ என்றாராம் கட்சியின் ‘பொருள்’ புள்ளி. அதேநேரம், ‘சீக்கிரமே எல்லாம் சரியாகும். பொறுமையாக இருங்க’ என சீனியர் புள்ளிகளுக்கு அவரே போன் போட்டு ஆறுதல் சொல்கிறாராம். #வெளுத்ததெல்லாம் ‘பால்’!

கிசுகிசு

எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்க நடந்த கூட்டத்தில் பணிவானவருக்கு ஆதரவாகப் பேசிய பலரையும் பார்த்து இணையானவர் திடுக்கிட்டுப்போனாராம். காரணம், இதே ஆட்கள்தான் பணிவானருக்கு எதிராகப் பல விஷயங்களை இணையானவரிடம் போட்டுக்கொடுத்து காரியங்களைச் சாதித்துக்கொண்டார்களாம். ‘முதுகு வளைய நின்னவங்க இப்போ மூஞ்சிக்கு நேரா பேசுறாங்களே…’ என நொந்துபோனாராம் இணை. #தவழ்ந்துபோன நீங்களே தடாலடியா மாறலையா… அந்த மாதிரிதான்!