Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

Published:Updated:
கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
கிசுகிசு

சின்ன தலைவியின் பயணத்திட்டம் தள்ளிக்கொண்டே போகிறது. கடந்த வாரமே கிளம்பியிருக்க வேண்டியவர் இலைக் கட்சியின் மூத்த நிர்வாகி இறந்ததால், அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொள்ள அமைதிகாக்கிறாராம். ‘விரைவில் நல்லது நடக்கும்’ என ஜோதிடர்கள்போல இலைக் கட்சியின் நிர்வாகிகள் சிலர் அள்ளிவிடும் தகவல்களை சின்ன தலைவி இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறாராம். அதற்குள் மொத்தக் கட்சியும் கரைந்துவிடுமே எனக் கலங்குகிறார்கள் குக்கர் கட்சியினர். #சரி... போரடிக்குது... ஒரு புது ஆடியோ இறக்கிவிடுங்க!

குட்கா மாஜியிடம் உதவியாளராக இருந்த முருகப்பெருமான் பெயர்கொண்டவர்தான் அணில் அமைச்சருக்கு இப்போது ஆல் இன் ஆல். ‘குட்கா மாஜி மீது குற்றச்சாட்டுகள் குவியக் காரணமாக இருந்தவரை கூடவே வைத்துக்கொள்வது நியாயமா... அவரை அனுப்பிடுங்க’ என அணில் அமைச்சருக்குச் சிலர் ஆலோசனை சொன்னார்களாம். அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுத்தாராம் அணில் அமைச்சர். ஆம், ஆலோசனை சொன்னவர்களை, ‘இனி என் பக்கமே வரக் கூடாது’ எனச் சொல்லிவிட்டாராம். பசைக் கணக்குகளைப் பார்ப்பதில் பலே கில்லாடியான முனிவர் பெயர்கொண்டவரையும் இப்போது கூடுதலாகத் தனக்கு அருகில் வைத்துக்கொள்கிறாராம் அணில் அமைச்சர். #சக்க போடு போடு ராஜா... உன் காட்டுல மழை பெய்யுது!

டெல்லி பொறுப்பில் நியமிக்கப்பட்ட ‘வில்லுக்கு’ பேர்போனவர், அங்கு நடக்கும் அனைத்து அரசியல் மூவ்களையும் அப்படியே முதன்மையானவரிடம் ஒப்பிக்கிறாராம். ஆளுங்கட்சி எம்.பி-க்களின் செயல்பாடுகளையும் அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொள்கிறாராம் முதன்மையானவர். இதனால், காவிக் கட்சி நிர்வாகிகளோடு காட்டிய நெருக்கத்தைக் குறைத்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள் ஆளுங்கட்சி எம்.பி-க்கள். #இவ்விடம் நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்!

முதன்மையானவருக்குத் துணையாக இருக்கும் நான்கு செயலாளர்களில் ஒருவரின் செயல்பாடுகள் படுமோசமாக இருக்கின்றனவாம். ‘எந்நேரமும் கான்ட்ராக்ட் கமிஷன், தில்லுமுல்லு என்றே சிந்திக்கிற ஒருவரை எப்படி இவ்வளவு உயரிய பொறுப்பில் அமர்த்தினார்கள்?’ என அதிகாரிகள் வட்டாரமே அதிர்ந்துபோய் பேசுகிறது. மருமகன் ரூட்டில் குட் சர்டிஃபிகேட் வாங்கிவைத்திருப்பதால், இப்போதைக்கு அவரை யாராலும் அசைக்க முடியாது என்றும் பேச்சு அடிபடுகிறது. #இவருக்கு யாராவது ட்ரீட்மென்ட் கொடுங்கப்பா…

கிசுகிசு

கட்சியின் கஜானா என்கிற அளவுக்கு வசதியும், அள்ளிக்கொடுக்கும் மனமுமாக இருந்தவர் கரூர் மாவட்டத்தின் சீனியர் புள்ளி. கட்சியின் முக்கியஸ்தர்கள் பட்டியலில் இருந்தவர். பிசினஸில் நொடித்ததால், கட்சியிலும் இறங்குமுகமாகிவிட்டது. முதன்மையானவரைச் சந்தித்து நிலைமையைச் சொல்ல நினைக்கிறாராம் அந்த சீனியர். தன்மானம் தடுக்க, ‘நாமே சமாளிப்போம்’ என வங்கிகளிடம் பேசிவருகிறாராம். #பழநி மலை சாமிக்கே பஞ்சாமிர்தம் இல்லாம போயிடுச்சே!

போலி போலீஸ் அதிகாரியாக ஆட்டம் போட்டவரின் கதை நாளுக்கு நாள் பெரிதாக, பக்கத்து மாநில முதல்வர் அலுவலகத்திலிருந்து என்கொயரி வந்ததாம். அந்த முதல்வரிடம் போனில் பேசுகிற அளவுக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார் போலி அதிகாரி. தன் பெயரைவைத்து தகிடுதத்தம் ஏதாவது நடந்ததா என விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் அந்த முதல்வர். #ஸ்ஸ்ஸ்ஸ்போலி!

‘ஆளுங்கட்சித் தரப்பில் பக்கா டீலிங் முடிந்தது!’ என நெருங்கிய உறவினர்களிடம் சொல்லியிருக்கிறார் குட்கா மாஜி. ‘அப்போ ரெய்டு வராதா?’ என உறவினர்கள், பினாமிகள் உற்சாகமாக, ‘ரெய்டு வரும்… அதற்கு முன்னரே நமக்கு ரெய்டு குறித்த தகவல் வரும். நடவடிக்கையும் பெயரளவுக்குத்தான் இருக்கும்’ என்றாராம் குட்கா மாஜி. அமாவாசை அரசியலையே விஞ்சி விளையாடும் மாஜியைக் கண்டு திகைத்துக்கிடக்கிறார்கள் இலைக் கட்சியின் நிர்வாகிகள். #இன்னும் எத்தனை காலம்தான்...!?