பிரீமியம் ஸ்டோரி

சூப்பர் நடிகரும், மதுரைப் புகழ் துட்டுக்காரரும் இப்போது அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறார்களாம். படம் குறித்துப் பேசுகிறார்களா இல்லை வேறு அரசியல் நிலவரமா எனத் தெரியாமல் இரு தரப்பு நெருக்கப் புள்ளிகளும் மண்டைகாய்கிறார்களாம். இதற்கிடையில், அடுத்த படத்துக்கான கதை கேட்கும் பணிகளைத் தீவிரமாக்கியிருக்கும் சூப்பர் நடிகர், ‘வருடம் ஒரு படம்’ என அடுத்த மூன்று வருடங்களைத் திட்டமிடுகிறாராம். அதனால், மதுரைப் புகழ் துட்டுக்காரருடன் படம் குறித்த பேச்சுவார்த்தையைத்தான் நடத்துகிறார் என அனுமானிக்கிறார்கள் விவரப்புள்ளிகள். #அன்பு செழித்தால் சரி!

‘என் எண்ணப்படி நடந்துகொள்வது ரெண்டே அமைச்சர்கள்தான்’ எனச் சொல்லி ஆன்மிகப் புள்ளியையும், சாலைப்புள்ளியையும் சுட்டிக்காட்டினாராம் முதன்மையானவர். மற்ற துறைகளை கவனிக்கும் ஒவ்வொருவர் மீதும் ஏதோவொருவிதத்தில் முதன்மையானவருக்கு மனக்குறை இருக்கிறதாம். “மனம் குளிரவைக்கும்விதமாகப் பேசுபவர்களைத்தான் மதிக்கிறார்…” எனப் புலம்புகிறார்கள் பிற துறைகளை கவனிக்கும் சீனியர்கள். #அப்படி என்னதான் செய்றீங்க கோப்பால்ஸ்?

கிசுகிசு

அண்ணன் கட்சிக்கு, நன்கு முகம் தெரிந்த ஆட்கள் இரண்டாம் கட்டத் தலைவர்களாகத் தேவைப்படுகிறார்களாம். அதற்காக சினிமாக்காரர்கள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தாராம் அண்ணன் தலைவர். தாடிக்கார இயக்குநர் தொடங்கி இரண்டெழுத்து ஹீரோ வரை பலரும் கையெடுத்துக் கும்பிடாத குறையாகக் கழன்று கொண்டார்களாம். அடுத்தகட்டமாக மண்வாசம்கொண்ட சீனியர் இயக்குநருக்கு அண்ணன் தலைவர் வலைவிரிக்க, ‘உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்டா’ எனச் சொல்லி நெகிழ வைத்தாராம். #ஒரு கிராமத்துக் குயில், அ.கா 47 அவதாரமெடுக்கிறது!

அடுத்த வருடம் சீறும் தலைவருக்குச் சிறப்பான வருடம். அதை இந்திய அளவில் பெரிதாகக் கொண்டாடவும், வடக்கத்திய தலைவர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இப்போதே கவனிக்கவும் சீறும் தலைவரைச் சிலர் அணுகினார்களாம். ‘எந்த ஆடம்பரமும் வேண்டாம்; ஏற்பாடுகளும் வேண்டாம். போய் வேலையைப் பாருங்க…’ எனச் சொல்லி ஆர்வத்தோடு வந்தவர்களுக்கு அணைகட்டி அனுப்பிவிட்டாராம். “அகில இந்திய அளவில் தலைவர்களை அழைத்து, இங்கே இருக்கும் தலைவர்களின் எரிச்சலைச் சம்பாதித்துக்கொள்ள விரும்பாததுதான் காரணம்” எனக் காதைக் கடிக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். #நல்ல சொக்கா போட்டதுக்கே நாலு நாளா விசாரிச்சாய்ங்க... இதுல அகில இந்திய வேற!

மாநகரக் காவல்துறையை மூன்றாகப் பிரிக்கும் பணி முடிவடைவதற்குள், போதும் போதும் என்றாகிவிட்டதாம். ‘அந்த ஏரியா எனக்கு’, ‘இந்த ஏரியா உனக்கு’ என்கிற அளவுக்கு அரசியல்ரீதியான தலையீடுகளும் இருந்தனவாம். புதிதாகப் பொறுப்பேற்ற அதிகாரிகளுக்கும் தங்கள் சரகம் பரந்துபட்ட பரப்பாக இருக்க வேண்டும் என்கிற எண்ணமாம். கிட்டத்தட்ட தனி மாநிலம் பிரிப்பதுபோல் பல பிரச்னைகளைக் கடந்து, ஒருவழியாக மூன்று ஆணையரக எல்லைகளைப் பிரித்து முடித்தார்களாம். #காக்கி நாடா உன்னுது... பாவாட நாடா என்னுது!

கிசுகிசு

பக்கத்து மாநில முதல்வரிடம் நீட் குறித்த கடிதத்தைக் கொடுக்க, சீனியர் எம்.பி ஒருவரைச் சமீபத்தில் அனுப்பிவைத்தார் முதன்மையானவர். தங்கைத் தலைவியை அனுப்பத்தான் முதலில் நினைத்தாராம். ‘பக்கத்து மாநில முதல்வருக்குத் தங்கைத் தலைவி நன்கு அறிமுகமானவர். பேசுவதற்கும் சரியாக இருக்கும்’ என முதன்மையானவரின் கருத்தை ஆதரிக்கும்விதமாகச் சிலர் கருத்து சொல்ல, அதன் பிறகுதான் தங்கைத் தலைவிக்கு மாற்றாக சீனியர் எம்.பி-யை அனுப்பினாராம். #வாயைவெச்சுக்கிட்டு சும்மா இருங்களேன்யா…

பொன்விழா நாளில், சின்ன தலைவி எத்தகைய சிரமத்தைக் கொடுக்கப்போகிறாரோ எனத் துணிவானவரும் பணிவானவரும் விழிபிதுங்கிக் கிடக்கிறார்கள். ‘கட்சி அலுவலகத்துக்கே கிளம்பி வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என்றெல்லாம் சில நிர்வாகிகள் சொல்ல, இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குச் சொல்லிவைத்திருக்கிறார்களாம். முன்கூட்டியே காவல்துறையில் சின்ன தலைவி குறித்துப் புகார் கொடுக்கலாமா என்றும் யோசனைகள் நடக்கின்றனவாம். #பாவம்... அவங்களுக்கும் கண்ணுல வந்துபோமால்லியா?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு