அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

வருடா வருடம் வழங்கப்படும் சினிமாத்துறைக்கான விருது, பல வருடங்களாக வழங்கப்படாமல் இருக்கிறது. ‘நிதி நெருக்கடியான நேரத்தில் விருது கொடுக்காததுதான் குறைச்சலா?’ என்கிறார்கள் துறைரீதியான அதிகாரிகள். ஆனால் விருதுக்கான பட்டியல் தேர்வுசெய்யப்பட்டு, அதற்கான தங்கமும் ஏற்கெனவே வாங்கி பத்திரமாக வைக்கப்பட்டிருக்கிறதாம். ‘வாங்கிய தங்கத்தைக் கொடுக்க வலிக்குதாக்கும்’ என்கிறார்கள் சினிமாக்காரர்கள். #இதெல்லாம் நெஞ்சுக்கு நீதியா இருக்கா?

முதன்மையானவரைச் சந்திக்க முறையான அனுமதி பெற்று வருபவர்களிடம்கூட, பாதுகாப்பு என்கிற பெயரில் கடுமையான கெடுபிடி காட்டப்படுகிறதாம். “முதன்மையானவரிடம் நிறைய நேரம் பேச முடியாது. அதனால் மனுவாகக் கொடுக்கிறோம்” என்பவர்களிடம்கூட “மனு கொடுக்க அனுமதி இல்லை” எனச் சொல்லித் தடுக்கிறார்களாம் பாதுகாப்பு அதிகாரிகள். முதன்மையானவருக்கு வலதுகரமாக இருக்கும் தலையாய அதிகாரி தலையிட்டால்தான் இந்தப் பிரச்னை சரியாகும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். #தேர்தலுக்கு முன்னாடி வாலன்டியரா வந்து மனு கேட்டாரே?!

கிசுகிசு

கொரோனா தளர்வுகளுக்கான அறிவிப்பில், தியேட்டர்களில் 100 சதவிகித அனுமதி கிடைக்காததில் பிரகாச சேனல் நிறுவனத்துக்குக் கடுமையான அதிர்ச்சியாம். சூப்பர் நடிகரின் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் நிலையில், லாபம் குறையுமே என முதன்மையானவர் தரப்பில் வருத்தப்பட்டார்களாம். ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்றாராம் முதன்மையானவர். மறு அறிவிப்பு வரும் எனப் பார்த்தால், முதன்மையானவரின் வாரிசு நிறுவனத்துக்குப் படத்தின் விநியோக உரிமையைக் கைமாற்றச் சொன்னார்களாம். சேனல் தரப்புக்கும் திருப்தி... முதன்மையானவர் தரப்புக்கும் லாபம். #பட், இந்த டீலிங் நல்லாருக்கு... நடத்துங்க!

அதிருப்தி அமைச்சர்களைக் கண்காணிக்கவும், அவர்களின் கான்ட்ராக்ட், கமிஷன் உள்ளிட்ட விஷயங்களை வேவு பார்க்கவும் உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம். இதே பணி, தனியார் புலனாய்வு நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டுக்குமிடையில் ஒற்றுமை இருக்கிறதா எனப் பார்க்கத்தான் இந்த ஏற்பாடாம். # தீயா வேலை செய்யணும் குமாரு!

கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவரை எதிர்த்து தோற்ற கோல்டு பிரமுகருக்கு, ஏதாவது அரசுப் பொறுப்பு வழங்க வேண்டுமென இதுவரை மூன்று முறை முதன்மையானவர் முயன்றாராம். ஆனால், அதிகாரிகள் தரப்பு தொடங்கி உள்ளடி ஆட்கள் வரை ஏதாவது ஒரு காரணம் சொல்லி, தடுத்துவிடுகிறார்களாம். “என்னோட நேர காலம் ஒத்துவரலை... அவ்வளவுதான்” என நொந்துபோகிறாராம் கோல்டு பிரமுகர். #உன் குத்தமா... என் குத்தமா... யார நானும் குத்தம் சொல்ல...

‘ஏதோவொன்று பேசப்போய் அது வேறுவிதமாக மாறி வில்லங்கத்தை உருவாக்கிவிடுகிறது. எனவே, சில காலம் பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்துவிட்டு, அறிக்கை, பொதுக்கூட்டம் என்று மட்டும் இருக்கப்போகிறேன்’ என முடிவெடுத்திருக்கிறாராம் அண்ணன் தலைவர். பத்திரிகையாளர் சந்திப்பில் திட்டமிட்டு வில்லங்கமான கேள்விகளைக் கேட்கச் சொல்லி, ஆளும் தரப்பு ஆட்களை ரெடி செய்வதாக வந்த தகவலும் இதற்குக் காரணமாம். #தல, இந்த தடவை அடி கொஞ்சம் ஓவரோ?