பிரீமியம் ஸ்டோரி

கடல் சம்பந்தப்பட்ட பதவியில், சமீபத்தில் நியமிக்கப்பட்ட கடைக்கோடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி, பவர் சென்டராக விளங்கும் மருமகனைச் சந்தித்து பொன்னாடை போர்த்தி, அந்தப் புகைப்படத்தைத் தனக்கு நெருக்கமான அத்தனை பேருக்கும் அனுப்பிவைத்தாராம். “எனக்குப் பதவி கிடைக்கக் காரணம் மருமகன்தான். அவர் ஆசி என்றைக்கும் எனக்கு உண்டு” என்பதைச் சொல்லவே அந்தப் புகைப்படத்தை வாட்ஸ்அப் வைரலாக மாற்றினாராம். #ஒரு போட்டோ... ஓஹோன்னு வாழ்க்கை!

மொத்த சென்னையும் மழைநீரில் மிதந்த நிலையில், அதிகாரிகளோடு களத்தில் குதித்த முதன்மையானவர், எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லி திரும்பத் திரும்ப வலியுறுத்தினாராம். செம்பரம்பாக்கம் அணை திறப்பு தொடங்கி, நிவாரணப் பணிகள் வரை தன் கவனத்துக்குச் சொல்லச் சொல்லி தொடர்ந்து போன் தொடர்பிலேயே இருந்தாராம். வெள்ள பாதிப்பில் அரசுக்குக் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதால் அவ்வளவு கவனமாம். #இந்த வேகம் அப்படியே அத்தனை விஷயங்களிலும் தொடரட்டும்!

இனிப்பு மாஜியை இடது கரமாகவும், ‘தெர்மாக்கோல்’ மாஜியை வலது கரமாகவும் வைத்துக்கொண்டு, தன் சதுரங்க ஆட்டத்தைத் தீவிரமாக்கத் தொடங்கியிருக்கிறார் இலைக் கட்சியின் பணிவானவர். கட்சிக்குள் ஒலிக்கும் கலகக்குரல் பெரிதாக வேண்டும்; ஒற்றுமையை வலியுறுத்தி துணிவானவரிடமே சொல்ல வேண்டும் என இந்த இருவருக்கும் அசைன்மென்ட் கொடுத்திருக்கிறாராம் பணிவானவர். #இடது கரம்... வலது கரம்... குட் காம்பினேஷன்!

இந்த வருட தீபாவளி நேரத்தில், வெடி விபத்துகள் பெரிதாக நடக்காததற்குத் தலையாய அதிகாரி காட்டிய தீவிர அக்கறையே காரணமாம். பேரியம் பயன்படுத்தப்பட்ட வெடிகளைப் பயன்படுத்தக் கூடாது என்பது தொடங்கி, வெடி தொடர்பான பல கெடுபிடிகளைப் பிறப்பித்தாராம். இதற்காகவே மூன்று முறை ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினாராம். பெரிய அளவில் விபத்துகள் இல்லாமல் தீபாவளி முடிய, அதன் பின்னர்தான் தலையாய அதிகாரி காட்டிய அக்கறையின் பின்னணி கோட்டை வட்டாரத்துக்குப் புரிந்ததாம். #அன்பான அதிகாரிக்கு சபாஷ்!

கிசுகிசு

தமிழகம் முழுக்க இருக்கும் சிறு சிறு சாதிக்கட்சிகளை ஒன்றாகத் திரட்டி, வலிமையான அணியாக மாற்றுகிற திட்டத்தில் தீவிரமாக இருக்கிறாராம் ரெய்டு புகழ் மாஜி தலைமை அதிகாரி. பதவியில் இருந்தபோதுகூட இவ்வளவு பிஸியாக சாரைப் பார்த்திருக்க முடியாதாம். எந்நேரமும் போனும் கையுமாக சாதிக்கட்சி நிர்வாகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியபடியே இருக்கிறாராம். “அக்கட மாநில நடிகர் கட்சிக்கு அட்வைஸராகப் போனவர், தமிழ்நாட்டில் ஏன் சாதிக்கட்சிகளை ஒன்று திரட்டுகிறார்?” என விசாரிக்கிறது உளவுத்துறை. #அட்வைஸர் வேலையை மட்டும் பார்க்கச் சொல்லி அட்வைஸ் பண்ணுங்க சார்!

வெள்ள நிவாரணப் பணிகளில், முதன்மையானவரிடம் நல்ல பெயர் வாங்கிவிட வேண்டும் என மாநகர அதிகாரி போராடுகிறாராம். முதன்மையானவருக்குச் சில விஷயங்களைச் சுட்டிக்காட்டுவது, அமைச்சர்களோடு பேசுவது என மீடியா வெளிச்சத்துக்கான விஷயங்களையும் தெளிவாகச் செய்கிறாராம். “இதெல்லாம் சரிதான்… மொத்த சென்னையும் மூழ்கும் என்கிற அபாயத்தைச் சில மாதங்களுக்கு முன்னரே சார் ஏன் உணரலை?” என ஆதங்கப்படுகிறார்கள் அவர் துறையிலேயே பணியாற்றும் அதிகாரிகள். #கோட்டைவிட்டதால... போட்டை விடவேண்டியதாப் போச்சு!

கிசுகிசு

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மிக நெருக்கமாக இருந்த சீனியர் அதிகாரி, தற்போதைய ஆட்சியில் டம்மி பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டதில் பலருக்கும் அதிர்ச்சி. ஆனால், அந்த அதிகாரி வருத்தப்படாமல் அமைதி காத்தார். கடந்த வாரம் தன் மகள் திருமணத்துக்காக முதன்மையானவர் வீட்டுக்கு அழைப்பிதழ் கொடுக்கப் போனார். அப்போதும் தன் மனவருத்தத்தை அவர் காட்டிக்கொள்ளவே இல்லையாம். இதில் நெகிழ்ந்துபோன முதன்மையானவர், அடுத்த நாளே பவர்ஃபுல்லான பொதுவான துறைக்கு அவரை மாற்றச் சொன்னாராம். வருத்தத்தைக் காட்டிக்கொள்ளாமல் அமைதி காத்ததற்குத்தான் இந்த ஆச்சர்யப் பரிசாம். # ‘பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்’ என்கிறான் வள்ளுவன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு