
- கணியன் பூங்குன்றன்
இலைக் கட்சியின் எழுத்தாகவும் எண்ணமாகவும் முழங்கும் கவிஞர், சமீபகாலமாகச் சர்வ அமைதி காத்துவருவது சீனியர் நிர்வாகிகளைச் சந்தேகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘ஆளும் கட்சிக்குத் தாவப்போகிறார்’, ‘காவிக் கட்சியில் சேரப்போகிறார்’ என்றெல்லாம் அனுமானம் கிளம்ப, “அரசியலைவிட்டே ஒதுங்குவேனே தவிர, காவிக் கட்சிப் பக்கம் போகிற எண்ணமெல்லாம் கிடையாது” என நெருக்கமானவர்களிடம் நெஞ்சை உயர்த்தியிருக்கிறார் கவிஞர். இந்நிலையில், ஆளும் தரப்பு அழைப்புகளுக்கும் அமைதியையே பதிலாகத் தருகிறாராம். #ஏதாவது சொல்லுங்க பாஸு... அமைதியாவே இருந்தா பதற்றமா இருக்குல்லா!

டெல்லியில் கதர்க் கட்சியின் சீனியர் தலைவரோடு சேர்ந்து, பெண் எம்.பி-க்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டதும், ட்விட்டர் பதிவாக அது சர்ச்சையானதும் முதன்மையானவர் கவனத்துக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘நம் கட்சியினர் இத்தகைய சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது’ என மில்க் புள்ளி மூலமாகக் கறார்காட்டச் சொன்னாராம் முதன்மையானவர். ‘தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தினாலும், கட்சித் தலைமைக்குத் தெரியப்படுத்த வேண்டும்’ என எக்ஸ்ட்ராவாகச் சில பாயின்ட்டுகளைச் சேர்த்துப் பேசுகிறாராம் மில்க் புள்ளி. #இல்லாத பாயின்ட்டையெல்லாம் சேர்த்துப் பேசுறதுதானே அரசியலே!
இந்தித் திணிப்புக்கு எதிராக மாநிலங்களவையில் பேசிய தமிழகத்தின் புயல் தலைவரை, அவையை வழிநடத்திய துணையானவரின் பேச்சு ரொம்பவே காயப்படுத்திவிட்டதாம். ‘பார்லிமென்ட் டைகர் எனப் பெயர் வாங்கிய எனக்கே பேசக் கற்றுக்கொடுக்கிறார்களா?’ எனக் கொந்தளித்துவிட்டாராம். துணையானவரின் தரப்பில், சிலர் பேசி விளக்கம் கொடுத்த பிறகுதான் அமைதியானாராம். #டைகரையே டார்ச்சர் பண்ணிட்டாங்க மொமன்ட்!
ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் வீடுகளுக்கு, தாதாயிச நெட்வொர்க் கொண்டவர்கள் வந்துபோவதாக உளவுத்துறை `நோட்’ வைத்திருக்கிறது. ‘ஏன் இந்தத் தொடர்பு?’ எனத் தீவிரமாக விசாரிக்கச் சொல்லியிருக்கிறாராம் முதன்மையானவர். ‘சாதிரீதியான நெருக்கம்தான்…’ என முதற்கட்ட விசாரணை விவரத்தைத் தாக்கல் செய்திருக்கிறது உளவுத்துறை. #சர்தான்... சைத்தான் சைக்கிள்ல வருது...
‘நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் கொண்டுவர, ஸ்வீட் பாக்ஸ் கொடுக்கலாமா?’ எனச் சின்ன தலைவியிடம் கேட்டாராம் டோக்கன் தலைவர். “இதுவரை கொடுத்த ஸ்வீட் பாக்ஸுகளுக்கே இன்னும் கணக்கு வரலையே…” என இழுத்தாராம் சின்ன தலைவி. பட்டுவாடா விஷயங்களுக்கு வேறு ஆட்களைக் களமிறக்கத் தயாராகித்தான், பட்டும்படாமல் பதில் சொன்னாராம் சின்ன தலைவி. #கருப்பனுக்குக் குசும்பு... கூலிங்கிளாஸுக்கு அடிபோடுறான்!

கதர்க் கட்சியின் பிரகாசமான எம்.பி-யை, உடன்பிறந்த தங்கையாகவே பாவித்துப் பாசம் காட்டினார் அணில் அமைச்சர். யார் கண்பட்டதோ… நேருக்கு நேர் பார்த்தால்கூடப் பேசிக்கொள்ளாத அளவுக்கு இருவருக்கும் இடையே மௌனயுத்தம் நடக்கிறது. சமாதானம் செய்துவைக்க சிலர் மெனக்கெட, ‘வேண்டாம்… அவங்க ஒரு முடிவோடு செயல்படுறாங்க…’ எனச் சொல்லித் தடுத்துவிட்டாராம் அணில் அமைச்சர். #தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி... தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சு!
சுற்றுச்சூழல் அணி ஒன்றைப் புதிதாக நிறுவி, இளைய தலைமுறை நிர்வாகிகளைக் களப்பணிகளில் இறக்கிவிட நினைத்தார் முதன்மையானவர். ஆனால், அந்த அணியின் பல நிர்வாகிகள் எந்நேரமும் கோட்டையையே சுற்றிக்கொண்டிருக்கிறார்களாம். கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களின் பிறந்தநாள் விவரங்களைத் தெரிந்துகொண்டு பொக்கே கொடுப்பதையும், போஸ் கொடுப்பதையும் மட்டுமே வேலையாக வைத்திருக்கிறார்களாம். அதனால், மாதா மாதம் செய்யும் களப்பணிகளைப் பட்டியல் போட்டுத் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறாராம் முதன்மையானவர். #இப்போ அவங்களுக்குச் சூழல் சரியில்லை. அப்படித்தானே?!