அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த அண்ணன் தலைவர், சட்டென மேடையிலேயே செருப்பை உயர்த்திய செயல் ஆளும்தரப்பைக் கடுமையாக ஆத்திரப்படுத்தியிருக்கிறதாம். ‘புதிதாக வழக்கு போடலாமா’, ‘பழைய வழக்குகளைத் தூசு தட்டலாமா?’ எனக் காக்கி அதிகாரிகள் கேட்க, ‘பதிலடித் தாக்குதல் நடத்தலாமா?’ எனக் கட்சி நிர்வாகிகள் கேட்டிருக்கிறார்கள். எதற்கும் முதன்மையானவர் பதில் சொல்லவில்லையாம். ‘இந்த விவகாரம் அமுங்கட்டும். சில நாள்கள் கழித்து ஆவேசப்படும் நடிகையிடம் புகார் வாங்கி, அந்த வழக்கில் வளைக்கலாம். நிச்சயம் அது பழிவாங்கும் நடவடிக்கையாக அமையாது’ எனக் காக்கித் தரப்புக்கு இப்போதைக்கு ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம் #அவசரப்பட்டுட்டியே குமாரு..!

சினிமாத்துறைக்கான அரசு விருதுகள், ஐந்து வருடங்களுக்கும் மேலாக அறிவிக்கப்படாமலேயே இருக்கின்றனவாம். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் இது குறித்து ஆதங்கப்பட்ட அதிகாரிகள், “மொத்த விருதுகளுக்கான தங்கம் கிலோ கணக்கில் வாங்கப்பட்டு, பல வருடங்களாகக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன” என்றார்களாம். ஆனாலும், அது குறித்து பெரிய அளவில் அக்கறை காட்டாமல் கிலோக் கணக்கிலான தங்கத்தைக் கிடப்பில் போட்டுவைத்திருக்கிறாராம் அமைச்சர். சினிமாத்துறை சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால், அடுத்து வாரிசுப் புள்ளியிடம் இந்த வருத்தத்தைச் சொல்லத் தயாராகிவருகிறார்களாம். #தங்கம் விலை ஏறும்னு காத்துக்கிட்டு இருக்காங்களோ!

காவிக் கட்சிக்கு எதிரான மெகா கூட்டணியை அமைக்கத் தீவிரமாக இருக்கும் பெங்கால் தலைவி, முதன்மையானவரை நேரில் சந்தித்துப் பேச நினைத்தாராம். கதர்க் கட்சிக்கு வீணான கலக்கத்தை உருவாக்கிவிடக் கூடாது என்றெண்ணி, சந்திப்பைச் சில காலத்துக்குத் தள்ளிப்போடலாமா எனக் கேட்டிருக்கிறார். அடுத்தகட்ட நகர்வு குறித்து இப்போது போனிலேயே இருவரும் கலந்து பேசுகிறார்களாம். #ஹலோ... கேக்கல... ஹலோ... கேக்கல!

கிசுகிசு

ரெய்டோற்சவம் தொடர்வதால் சீக்கிரமே ஆளுங்கட்சிப் பக்கம் தாவிவிடத் துடியாய்த் துடிக்கிறார் குட்கா மாஜி. அவர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகிகளைச் சரிக்கட்டியவரால், வாரிசுப் புள்ளியை மட்டும் நெருங்கவே முடியவில்லையாம். ‘எவ்வளவு கொடுக்கவும் தயார்’ எனப் பலமுறை தூது அனுப்பியும் பதில் இல்லையாம். அதனால், குடும்பத்துக்கு நெருக்கமான வேறு சிலர் மூலமாகக் காய்நகர்த்திவருகிறார் குட்கா மாஜி. #பெருசா எதிர்பார்ப்பாங்களோ?!

அமைச்சரவையிலேயே அதிர்ஷ்டத்தில் இடம்பிடித்த மில்க் மினிஸ்டர், அடுத்து தன் மகனுக்கும் மகுடம் சூட்டிப்பார்க்க ஆசைப்படுகிறாராம். கணக்கு வழக்குகளைக் கரெக்டாக ஒப்படைத்து, குட் புக்கில் இருக்கும் மில்க் மினிஸ்டர், தன் மகனுக்கு மேயர் சீட் வாங்கத் தலையைச் சொரிந்தாராம். ‘பார்க்கலாம்’ என பதில் வர, அதையே கிரீன் சிக்னலாக எடுத்துக்கொண்டு, இப்போதே போட்டியாளர்களைச் சரிக்கட்டத் தொடங்கிவிட்டாராம். தேர்தல் அறிவிப்புக்கு முன்பே ஏரியாவில் பண மழை பொழிகிறதாம். #பாத்து... பால் ரொம்ப தீஞ்சுடப் போகுது!

“புதிய சாலைகளை அமைக்கும்போது, பழைய சாலைகளின் உயரத்துக்கே அமைக்க வேண்டும்” எனப் புதிய ஆட்சி அமைந்த சில நாள்களிலேயே அறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தினார் தலையாய அதிகாரி. சில காலம் இதில் கறாராக இருந்த அதிகாரிகள், இப்போது மெத்தனம் காட்டத் தொடங்க, பல இடங்களில் குடியிருப்புகளின் உயரத்தைத் தாண்டி சாலைகள் வளரத் தொடங்கியிருக்கின்றன. ஒப்பந்ததாரர்களிடம் கறார் காட்டவேண்டிய அதிகாரிகள், கமிஷன் மழையில் நனைவதால், விரைவில் இந்த விவகாரத்தை நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டுபோகப் போவதாகச் சொல்கிறார்கள் சட்டத்தை நம்புகிற அமைப்பினர். #அட்வைஸைத் தூக்கி ரோட்ல போட்டுட்டாங்கனு சொல்லுங்க!

‘ரெய்டுக்குக் காரணம் அணில் அமைச்சர்தான்’ எனப் பொங்கினார் பெல் மாஜி. இதைத் தனக்கான பெரிய அங்கீகாரமாக எண்ணி ஆதரவாளர்களோடு கொண்டாடினாராம் அணில் அமைச்சர். ‘என்னை எதிர்த்தால் என்ன கதி ஆவாங்கன்னு அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துட்டார். அடுத்து என்னோட டார்கெட் டிரான்ஸ்போர்ட் மாஜிதான்’ எனக் கொக்கரிக்கிறாராம். “யார் வீட்டில் ரெய்டு நடத்துவது என்பதைக்கூட முதன்மையானவர் இவரைக் கேட்டுத்தான் செய்யணுமா?” எனக் குமுறுகிறார்கள் சீனியர் நிர்வாகிகள். #கப்பு எனக்குத்தான் மொமன்ட்!

கிசுகிசு