Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

“நித்யானந்தாபோல் நாமும் ஒரு தனித்தீவு வாங்கி அங்கே நம் ஆட்சியை நடத்தினால் என்ன?” எனக் கேட்டாராம் அண்ணன் தலைவர். “ஏண்ணே காமெடி பண்றீங்க?” எனத் தம்பிகள் கேட்க, “நான் சீரியஸாத்தான்ப்பா கேட்குறேன்… தனித்தீவு வாங்குவதற்கான பணம் இருந்தால் போதும். அங்கே நம் மக்களைக் குடியேற்றி தமிழர் நிலமாக நிச்சயம் மாற்றிவிடலாம்” என்றாராம். நித்யானந்தாவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசி, தனித்தீவு வாங்குவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆலோசனை நடத்திவிட்டதாகவும் சொன்னாராம். அழுவதா, சிரிப்பதா எனத் தெரியாமல் திண்டாடிக் கலைந்தார்களாம் தம்பிகள். #உள்ள அழுகிறோம்... வெளிய முழங்குறோம்... ‘தம்பி’ வேஷம்தான் வெளுத்து வாங்குறோம்!

கிசுகிசு

மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்களை நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையில், தேர்தல் நடைமுறையை மாற்றினால்தான் அதிக இடங்களை வெல்ல முடியும் என முதன்மையானவருக்கு `நோட்’ வைத்திருக்கிறதாம் உளவுத்துறை. இது குறித்து சீனியர் நிர்வாகிகளிடம் ஆலோசித்தாராம் முதன்மையானவர். “பொங்கல் பரிசு மக்களிடம் போய்ச் சேர்ந்ததும் நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்தினால், வெல்வது சுலபம்” என சீனியர்கள் சொல்ல, அதற்கேற்றபடி தேர்தல் தேதியைத் திட்டமிடச் சொல்லியிருக்கிறாராம் முதன்மையானவர். #பொங்கச் சோறுக்குப் பிறகு பூசாரித்தனம்... நடக்கட்டும்!

போக்கும் வரத்துமான துறையில் டிரான்ஸ்ஃபர் உள்ளிட்ட அத்தனை வேலைகளுக்கும் வசூல் வேட்டை தூள்பறக்கிறதாம். ஆரம்பத்தில் க்ளீன் இமேஜை மெயின்டெய்ன் பண்ணிய மன்னர் மந்திரி, இப்போது சகட்டுமேனிக்கு நடக்கும் வசூல் வேட்டையை வேடிக்கை மட்டுமே பார்க்கிறாராம். மந்திரியின் வலது, இடது கரங்களாகத் தங்களைக் காட்டிக்கொள்பவர்கள் வசூல் மழையில் நனைகிறார்களாம். #பாத்து நனைங்க பாஸ்... இடி கிடி விழுந்துறப் போவுது!

சின்ன தலைவிக்கு செக் வைக்கும்விதமாக, கடைசிவரை அணி மாறாமல் அவருக்குத் துணையாக இருக்கும் திரைத்துறை சார்ந்த பெண்மணியை, இலைக் கட்சிப் பக்கம் இழுக்கலாமா என ஆலோசித்தாராம் துணிவானவர். ‘சரியான ஐடியா’ எனச் சொன்னவர்கள், அந்த அம்மணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். “ஆதாயத்துக்காக மாறுகிற ஆளாக இருந்திருந்தால், நீங்கள் ஆட்சியில் இருந்தப்பவே மாறியிருப்பேனே… கடைசிவரை விசுவாசத்தின் அடையாளமாக இங்கேயே இருந்துவிடுகிறேன்” என அம்மணி சொல்ல, பேச்சுவார்த்தைக்குப் போனவர்கள் பேஸ்தடித்துத் திரும்பினார்களாம். #சாட்டையடி டயலாக் தோழி!

மர்மமான பங்களா விவகாரத்தில், இலைக் கட்சியின் துணிவானவரையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் சிக்கவைக்கக் கடும் முயற்சி நடந்தது. இந்நிலையில், திடீரென சின்ன தலைவிக்குப் பக்கபலமாக விளங்கும் விவேகமான இளையபுள்ளியை பங்களா விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். ரகசியமாக நடத்தப்பட்ட இந்த விசாரணையில், பங்களா விவகாரத்தோடு இதர சொத்து குறித்த விவரங்களையே அதிகமாகத் தோண்டித் துருவினார்களாம். பள்ளிப் பருவத்திலேயே வழக்கு விசாரணைகளைப் பார்த்த அனுபவத்தில், விவேகமான புள்ளி கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லையாம். #அவரும் ‘த்ருஷ்யம்’ படம் பாத்திருப்பார்ல!

கிசுகிசு

‘அமைச்சரவையில் வாரிசுக்கு இடமளிக்க வேண்டும்’ என அமைச்சர்கள் அடுத்தடுத்து பேட்டி கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள். குடும்பத் தரப்பிலிருந்து நடத்தப்படுகிற ஏற்பாடுதானாம் இது. இதனால், தங்களுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்கள் மூலமாக வாரிசு குறித்த கேள்வியைக் கேட்கவைத்து, வலிய பதிலும் சொல்லி குடும்பத்திடம் `குட் மார்க்’ வாங்க போட்டிபோடுகிறார்களாம் அமைச்சர்கள். ‘மிக விரைவில் அமைச்சரவையில் வாரிசு இடம்பிடிப்பார்’ எனச் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ஆன்மிக அமைச்சர், குடும்பத்தினர் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதை ஆன்லைனில் வைரலாக்கச் சொன்னாராம். #‘கொடுத்த காசுக்கு மேல கூவுறாங்க’ மொமன்ட்!