Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன்

மாஜி மில்க் மினிஸ்டர், `சாமி’ பட வில்லன் ரேஞ்சுக்குத் தலைமறைவாகி ஓட்டம் காட்டிவருகிறார். இந்நிலையில் இனிப்பான மாஜி, ஆளுங்கட்சி வாரிசின் மீது ‘அன்பு’கொண்ட வலதுகரத்துக்கு போன் போட்டாராம். “யப்பா சாமிகளா… வம்பு வழக்குன்னு என் மேலயும் பாய்ஞ்சீங்கன்னா, அந்தாளு மாதிரி என்னால ஓடி ஒளிய முடியாது. இப்பவே சமாதானம் பேசி சரண்டர் ஆகிடுறேன். மறப்போம் மன்னிப்போம்னு என்னைய விட்டுடச் சொல்லுங்க” என்றாராம். “நீங்க எங்களோட ஹிட் லிஸ்ட்லயே இல்லையே சார்” என வலதுகரம் சொன்ன வார்த்தைகள்தான் மாஜியை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்ததாம். #இதுக்குப் பெருமைப்படணுமா... வெக்கப்படணுமானு தெரியலையே!

இலைக் கட்சியால் வெளியேற்றப்பட்ட சீனியர் மன்னர் பிரமுகர், எந்தக் கட்சியிலும் சேராமல் அமைதிகாப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ஆளுங்கட்சியிலிருந்து முறையான அழைப்புகள் போன நிலையில், இலைக் கட்சியின் துணிவானவர் தரப்பிலிருந்தும் சிலர் தூது போனார்களாம். ‘சில காலம் அமைதியாக இருங்கள். மறுபடியும் நம் கட்சிக்கே நல்ல பொறுப்புக்கு வந்துவிடலாம்’ என்றார்களாம். ‘ஆம்’, ‘இல்லை’ என சீனியர் பிரமுகர் எந்த பதிலும் சொல்லவில்லையாம். இதற்கிடையில், இனிஷியல் தலைவரிடமிருந்தும் அழைப்பு போனதாம். மும்முனை அழைப்பையும் பொருட்படுத்தாமல் சீனியர் பிரமுகர் அமைதிகாப்பதுதான் ஆச்சர்யம். #இதையெல்லாம் அனுபவிக்கலாமா வேணாமா... மொமன்ட்!

கோட்டை மாவட்டத்தில் சீனியர் மினிஸ்டருக்கும், ஜூனியர் மினிஸ்டருக்கும் மோதல் தூள் பறக்கிறதாம். ஆரம்பத்தில், தான் கலந்துகொள்ளும் விழாக்கள் குறித்து சீனியர் மினிஸ்டருக்குத் தகவல் சொல்லி, மரியாதை பாராட்டிய ஜூனியர் அமைச்சர் இப்போது இஷ்டத்துக்கு ஏரியா தாண்டுகிறாராம். அனுபவம்கொண்ட சீனியர் அமைச்சரும் அதைச் சகித்துக் கடக்காமல், சரிக்குச் சரியாக மல்லுக்கட்டுகிறாராம். இரண்டு பேரும் அமைச்சரானதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொருமிக்கொண்டிருந்த மாவட்டப் புள்ளிகள் இதைப் புகாராக்கி மேலிடத்துக்கு அனுப்பியபடியிருக்கிறார்களாம். #‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்!

கிசுகிசு

கோல்டு அமைச்சர் கோலோச்சிய மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை, இனிஷியல் அமைச்சரின் கட்டுப்பாட்டுக்கு மாற்றி செக் வைத்தது ஆளுங்கட்சித் தலைமை. இதில் கடுப்பான சில நிர்வாகிகள் கொதிப்படைய, “சம்பாரிக்கிற துறைகளை அந்த அமைச்சருக்குத்தானே கொடுத்தாங்க. அவரே செலவு பண்ணட்டும்; செல்வாக்கைக் காட்டட்டும். இதுல வருத்தப்பட என்ன இருக்கு?” எனச் சர்வ சாதாரணமாகச் சமாதானப்படுத்தினாராம் கோல்டு அமைச்சர். கோட்டை வேலைகள் முடிந்து, வீட்டுக்குத் திரும்பி, உறவினர்களோடு நேரத்தைக் கழித்து, தான் நிம்மதியாக இருப்பதாகவும் நிர்வாகிகளிடம் சொல்லியனுப்பினாராம். #பொன்னான முடிவு!

ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ‘முருக’ப் பெயர்கொண்ட எம்.பி-யும், ‘நிதி’யான சேனல் எம்.பி-யும் எதிரெதிரே பார்த்துக்கொண்டாலும் பேசிக்கொள்வது கிடையாதாம். சில மாதங்களுக்கு முன்பு, சேனல் வெளியிட்ட விளம்பரம் குறித்து ‘முருக’ப் பெயர்கொண்ட எம்.பி காட்டிய காரசார கோபம்தான் இதற்குக் காரணமாம். இருவரையும் சேர்த்துவைக்க மற்ற எம்-பி.க்கள் எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லையாம். #பயங்கர கோவக்காரங்களா இருப்பாங்கபோல!

சமீபத்தில் ரிலீஸாகி வெற்றிபெற்ற விரல் நடிகரின் அரசியல் படத்தில், வாரிசு அரசியல் குறித்த `பொளேர்’ வசனங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போதைய ஆளுந்தரப்பு வாரிசுக்கு அதில் கடும் எரிச்சல். ஆனாலும், படம் ரிலீஸாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த வசனக் காட்சியை எடிட் செய்யச் சொன்னால், தேவையற்ற சிக்கலாகிவிடும் எனத் தயங்கினார். படத்தின் தயாரிப்பாளர், அண்ணன் கட்சித் தலைவருக்கு பகிரங்க ஆதரவு கொடுப்பவர் என்பதும் ஆளுங்கட்சி வாரிசின் அமைதிக்கு முக்கியக் காரணம். இந்நிலையில் தற்போது முன்னணி ஓடிடி தளத்தில் அந்தப் படம் வெளியாகியிருக்கிறது. வாரிசு அரசியல் குறித்த சர்ச்சை வசனங்கள் மொத்தமாக ம்யூட் செய்யப்பட்டிருக்கின்றன. ‘ஒளிபரப்பு உரிமை வாங்கிய ஓடிடி தளமே ஆளும் தரப்புக்கு அஞ்சி ம்யூட் செய்திருக்கிறது’ என்கிறது படக்குழு. ‘படக்குழுவின் அனுமதி பெறாமல் ஓடிடி தளம் ம்யூட் செய்ய வாய்ப்பே இல்லை. வாரிசின் நேரடி மிரட்டல்தான் ம்யூட்டுக்குக் காரணம்’ எனக் காதைக் கடிக்கிறார்கள் விஷயப்புள்ளிகள். #மாநாடு போட்டு விவாதிக்கலாமே பாஸ்!