Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

- கணியன் பூங்குன்றன், ஓவியங்கள்: ரவி

கிசுகிசு

மீசை அமைச்சருக்கும் பசுமை அமைச்சருக்கும் அப்படி என்னதான் நெருக்கமோ… மீசை அமைச்சர் மகனின் கோடிகள் புழங்கும் தொழிலுக்கு, துறைரீதியான அனுமதி கொடுத்து அன்பைக் காட்டியிருக்கிறாராம் பசுமை அமைச்சர். இது குறித்து முதன்மையானவர் கவனத்துக்கும் பசுமை அமைச்சர் தகவல் தெரிவிக்கவில்லையாம். # மீசைக்கார நண்பா... நமக்குள்ள கணக்கு அதிகம்யா!

கிசுகிசு

அடுத்த மூவ் குறித்த எந்தச் சிந்தனையும் இல்லாமலிருக்கிறார் சின்ன தலைவி. உடனிருக்கும் இனிஷியல் தலைவர் இன்னமும் உள்ளடி வேலைகளை விடாமல் செய்து, கட்சி நிர்வாகிகளைக் கலக்கத்திலேயே வைத்திருக்கிறாராம். இனிஷியல் புள்ளியின் கவனத்தைத் தாண்டி சின்ன தலைவிக்குத் தகவல் சொல்வதும் பெரும்பாடாக இருக்கிறதாம். அதனால், மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு தலைகளும் அணி மாற ஆயத்தமாகிவிட்டனவாம். #விசில் மட்டும்தான் வருது குக்கர்ல... ஒண்ணும் வேகுற மாதிரி தெரியலை!

கிசுகிசு

அண்ணன் தலைவரின் அட்டாக் நாளுக்கு நாள் எல்லை மீறுவதால், முன்னாள் காக்கி அதிகாரி ஒருவரைத் தூது அனுப்பினார்களாம். “தேர்தலுக்கு இன்னும் பல காலம் இருக்கு. இப்பவே ஏன் இவ்வளவு அதிரடி… கொஞ்ச காலத்துக்கு அடக்கி வாசிங்க” என்றாராம் மாஜி காக்கி அதிகாரி. “நீங்க அடக்கி வாசித்தால் நானும் அடக்கி வாசிப்பேன். எதை விதைக்கிறீங்களோ அதைத்தானே அறுக்க முடியும்” என, `பொளேர்’ பதில் கொடுத்தாராம் அண்ணன் தலைவர். #அந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வராத... நானும் வர மாட்டேன்!

கிசுகிசு

பொதுவான மூத்த அமைச்சருடன் ஒரே காரில் பயணிக்கிற நேரங்களில், தவறியும் வாய் திறக்க மறுக்கிறாராம் முதன்மையானவர். காருக்குள் ஆழ்ந்த மௌனம் நிலவுமாம். அதை சகஜமாக்கும்விதமாக மூத்த அமைச்சர் ஏதாவது ஜோக் சொல்வாராம். அதற்கும் முதன்மையானவர் எவ்வித ரியாக்‌ஷனும் காட்டிக்கொள்ளாமல் செல்போனைப் பார்க்க ஆரம்பித்துவிடுவாராம். “கார்ல ஏறினாலே தலைவர் கலகலன்னு இருப்பார். இவர் அவருக்கு நேர் எதிரா இருக்கார்” என நெருங்கியவர்களிடம் ரொம்பவே வருத்தப்பட்டாராம் மூத்த அமைச்சர். #கொஞ்சம் சிரிங்க பாஸ்!

கிசுகிசு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்கத் திண்டாடியது தொடங்கி, அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் பார் உரிமையாளர்கள் பிரச்னை செய்ததை முன்கூட்டியே எச்சரிக்காத வரையிலான பல விஷயங்களில் உளவுத்துறை ரொம்பவே கோட்டைவிட்டுவிட்டதாக நினைக்கிறாராம் முதன்மையானவர். ஆனாலும், ‘மிஸ்டர் க்ளீன் அதிகாரி’ என்பதால், அவரிடம் கோபத்தைக் காட்டாமல், ‘இனி இப்படி நடக்கக் கூடாது’ என்றாராம். உளவுத்துறையை உத்வேகமாக்க விரைவிலேயே பல பந்தாடல்கள் இருக்கும் என்கிறார்கள். #இதையாவது முன்னாடியே கண்டுபிடிச்சுருவாங்களா?

கிசுகிசு

“பொங்கலுக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கும்; அதில் நிச்சயம் உனக்கு இடம் உண்டு” என மகனுக்கு தைரியம் வார்த்திருந்தாராம் டெல்லி பிரமுகர். ஆனால், டெல்லியில் செல்வாக்கு காட்ட முடியாமல் சமீபத்தில் அவருக்கு ஏற்பட்ட பின்னடைவு, முதன்மையானவரிடம் இடைவெளியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அதனால், மகனுக்கு மகுடம் சூட்டுவதில் பிரச்னை வருமோ எனப் பதைபதைக்கிறார் டெல்லிப் பிரமுகர். #பிரிக்க முடியாதது எதுவோ..? பதவியும் பதைபதைப்பும்!

கிசுகிசு

வாய்த்துடுக்கு அமைச்சர் பெரும்பாலும் இப்போதெல்லாம் பேசுவதே கிடையாது. எம்.பி ஒருவர் மூலமாக பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்ட பிறகு, கட்சி சம்பந்தப்பட்ட ஆட்களைச் சந்திப்பதைக்கூட அமைச்சர் குறைத்துக்கொண்டார். இந்நிலையில், அவர் வகிக்கும் தொழில்நுட்பம் சம்பந்தமான பணிக்கு வேறு ஆளை நியமிக்க முடிவெடுத்த கட்சித் தலைமை, ‘பணிச்சுமை எனக் காரணம் சொல்லி விலகல் கடிதம் கொடுங்கள்’ என்றதாம். அவர் மறுப்பார், எதிர்ப்பார் என்றெல்லாம் நினைத்த நிலையில், ‘தலைமை விரும்பினால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவும் தயார்’ என்றாராம் அமைச்சர். இந்த நெகிழ்ச்சியில் கட்சிப் பதவியின் நாள்கள் கொஞ்சம் நீண்டிருக்கின்றன. #இவருக்கு அதிரடியும் வருது சென்ட்டிமென்ட்டும் வருதே!