அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

கிசுகிசு
கிசுகிசு

சின்ன தலைவியின் சேனல், `மெர்சல்’ நடிகருக்கு எதிராகத் தொடர்ந்து செய்திகள் பரப்ப, ‘இவர்களுக்குள் என்ன மோதல்?’ எனப் பலருக்கும் குழப்பம். `மெர்சல்’ நடிகரின் கடந்த படத்துக்கான விளம்பரங்களைச் சின்ன தலைவியின் சேனலுக்குக் கொடுக்க மறுத்துவிட்டார்களாம். ‘விளம்பரத்துக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்... தயாரிப்பாளரை உரியவிதத்தில் அணுகத் தெரியாமல் நம்மீது ஆத்திரப்படுவது என்ன நியாயம்?’ எனக் கொந்தளித்தாராம் `மெர்சல்’ நடிகர். ‘இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாதீர்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் தாக்கிச் செய்தி பரப்பட்டும்” என்றும் சொல்லிவிட்டாராம். #கடுப்பேத்துறவன்கிட்ட `கம்’முன்னும்... உசுப்பேத்துறவன்கிட்ட `உம்’முன்னும் இருக்கணும்!

கிசுகிசு
கிசுகிசு

ஜூன் மாதம்தான் கோட்டையின் உச்ச அதிகாரி ஓய்வு பெறுகிறார். விருப்ப ஓய்வில் முன்கூட்டியே போக நினைத்தவரை முதன்மையானவர் தடுத்து ‘தேவை உங்கள் சேவை’ எனச் சொல்ல, பணியில் தொடர்கிறார் உச்ச அதிகாரி. அவர் இடத்தைப் பிடிக்க, குடும்ப ரூட்டில் நடக்கும் அக்கப்போர் ரொம்பவே அதிகமாகிவிட்டதாம். நியாயமான அதிகாரிகள், பரிசீலனைப் பட்டியலிலேயே பெயர் அடிபடாமல் போகவும், லாபி அதிகாரிகளின் பெயர் பரபரப்பாகப் பேசப்படவும் பசைப் பரிவர்த்தனைகள் தொடங்கிவிட்டனவாம். ‘மூன்று மாதங்கள் மட்டும் அந்த உச்ச பதவியில் உட்கார்ந்துகொள்கிறேன். அதன் பிறகு வி.ஆர்.எஸ் கொடுத்துவிடுகிறேன்’ எனச் சொல்லி, வடக்கத்திய அதிகாரி ஒருவர் பேசுகிற பேரம் கோட்டையையே திகைக்க வைக்கிறதாம். #அந்த ரெண்டாயிரம் ரூபா கட்டுக பூராம் இவுககிட்டதான் இருக்கும்போல!

கிசுகிசு
கிசுகிசு

“தியாக அமைச்சரின் ஆடியோ ‘உண்மை’ என காவிக் கட்சித் தரப்பும், ‘பொய்’ என ஆளும் தரப்பும் கட்டி உருள்கின்றன. முதன்மையானவர் குறித்தும், அவர் குடும்பத்தினர் குறித்தும் தியாக அமைச்சரைத் தாண்டியெல்லாம் பேசிய அமைச்சர்களின் பட்டியல் என பெரிய லிஸ்ட்டே இருக்கிறதாம். சென்டிமென்ட் அமைச்சர், ‘ஆச்சர்ய’ அமைச்சர், மீசை அமைச்சர் எனப் பலரும் ஆஃப் தி ரெக்கார்டாக இல்லத்தினர் பற்றிக் குமுறிக் கொட்டியிருக்கிறார்களாம். தியாக அமைச்சரின் ஆடியோ விவாகரத்துக்குப் பிறகுதான் இந்த அமைச்சர்கள் அடக்கி வாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களாம். அமைச்சர்களையும் தாண்டி கடுமையாக விமர்சிப்பவர் சீனியர் மில்க் புள்ளியாம். மகனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்காத வேதனையில் இஷ்டத்துக்கு முதன்மையானவரை வறுத்தெடுத்தாராம். இப்போது அவரும் `கப்சிப்’ காக்கிறார். #‘நான் கேவலமாப் பேசுவேன்... அவங்கல்லாம் என்னையவிட ரொம்பக் கேவலமாப் பேசுவாங்க’ மொமன்ட்!

கிசுகிசு
கிசுகிசு

இலைக் கட்சியின் பணிவானவர் மலைக்கோட்டை மாநகரில் நடத்திய மாநாடு குறித்த விவரங்களைச் சேகரித்திருக்கிறது டெல்லி தரப்பு. ‘25 சி செலவு… சமுதாயரீதியிலான பெருங்கூட்டம்… ஒருமித்த உணர்வு’ என விவரம் சொல்லியிருக்கிறார்கள் மாநாடு குறித்து விசாரித்தவர்கள். ‘நாடாளுமன்றத் தேர்தலில் பணிவானவர் தரப்பும் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்’ என்கிற அளவுக்கு டெல்லிக்குச் சொல்லப்பட்டிருக்கிறதாம். ‘கூட்டமும் இல்லை. ஒருங்கிணைப்பும் இல்லை… தண்டச் செலவு’ என முந்திக்கொண்டு டெல்லியின் கவனத்துக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது துணிவானவர் தரப்பு. #பொறாமை..? லைட்டா..!

கிசுகிசு
கிசுகிசு

ஆடியோ அலப்பறைகள் அதிகமாகப் பரபரப்பாவதால், போனில் பேசுவதையே அடியோடு குறைத்துக்கொண்டாராம் அண்ணன் தலைவர். முன்பெல்லாம் பலருக்கும் போன் போட்டு மணிக்கணக்கில் பேசுகிற அண்ணன் தலைவர், வாட்ஸ்அப்பில் மட்டும் சில நிமிடங்கள் பேசி அமைதியாகிவிடுகிறாராம். தொடர்புகொள்ளும் ஆட்களுக்கும் உதவியாளர்கள் மூலமாகவே பதில் சொல்கிறாராம். “வெள்ளந்தியா பேசிக்கிட்டிருந்தவரை விலங்கு போட்டு அடைச்ச மாதிரி ஆகிடுச்சே!” என அங்கலாய்த்துக்கொள்கிறார்கள் அன்புத் தம்பிகள். #மௌனமான நேரம்... இள மனதில் என்ன பாரம்..?