பிரீமியம் ஸ்டோரி

‘விரைவில் அமைச்சரவையில் மாற்றம்’ - இந்த ரகசியச் செய்திதான் கோட்டை வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது. அமைச்சர்கள் பலரும் திடுக்கிட்டுப்போக, ‘கூடுதலாகச் சிலர் சேர்க்கப்படப் போகிறார்களே தவிர, யாரையும் நீக்கும் முடிவு இல்லை’ எனச் சொன்னதாம் குடும்பத் தரப்பு. விடுபட்ட மாவட்டங்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கலாம் என முதல்வர் நினைக்க, அதில் இடம்பிடிக்க இல்லத்து அம்மணியின் இரக்கப் பார்வைக்காகத் தவம் கிடக்கிறார்களாம் பலரும்! #கிச்சன் கேபினட்டே சரணம்!

கிசுகிசு

முதல் நாள் நெடுஞ்சாலைத்துறை, மூன்றாம் நாள் கல்வித்துறை என ஒரே அதிகாரி மாற்றி மாற்றி டிரான்ஸர் செய்யப்பட, ‘ஜெயலலிதா பாணியில் அதிகாரிகளைப் பந்தாடுவது நியாயமா?’ என முதல்வரை டேக் செய்து ட்விட்டரில் கேள்விகள் பறந்தன. ‘அந்த அதிகாரி மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து தாமதமாகத்தான் தெரிந்தது’ என விளக்கம் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். #அப்போ, காத்திருப்போர் பட்டியலில்தானே வெக்கணும். கல்வித்துறையில் வெச்சிருக்கீங்க?

“உடல்நிலை நல்லா இருக்கும்போதே மகனுக்கு மகுடாபிஷேகம் பண்ணிடுங்க” எனப் பம்பரத் தலைவரைப் பாடாய்ப்படுத்துகிறார்களாம் கட்சி நிர்வாகிகள். குடும்ப உறுப்பினர்களும் அதையே வலியுறுத்த, மகனை அழைத்துப் பேசிய பம்பரத் தலைவர், “கொரோனா நேரத்தில் மக்களுக் காகப் பணியாற்று. மற்றதை நான் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வேன்” என்றாராம். அதனால், இப்போதைக்குப் பதவி அறிவிப்பு இல்லை என்கிறார்கள். #வெயிட் பண்ணுங்க துரை!

பத்திரப் பதிவில் மோசடி செய்து பல கோடிகள் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், ரெய்டுபுகழ் புள்ளியின்மீது வழக்கு பதிவாகியிருக்கிறது. ‘வழக்கு, விசாரணை என எவ்வித வேகமும் காட்ட வேண்டாம்’ என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குக் கடுமையான நெருக்கடியாம். ஆளும்கட்சியின் அரசியல்வாதிகள் தொடங்கி அதிகாரிகள் வரை போன் பேசி அமைதிப் படுத்துகிறார்களாம். #ஆட்சி மாறிடிச்சு… காட்சி மாறலையே கோவிந்தா!

கிசுகிசு

‘குட்கா புகழ்’ மாஜியை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற முருகப் பிரமுகர், பல கோடி சொத்துகளை இழந்து மிக மோசமான நிலைக்கு வந்துவிட்டார். இந்நிலையில், திடீரென முதன்மையானவரிடமிருந்து அவருக்கு போன். ஆறுதலாகப் பேசி தைரியம் கொடுத்தவர், சீக்கிரமே சிறப்பான பதவி தருவதாகவும் உத்தரவாதம் கொடுத்தாராம். “நீங்க பேசியதே போதும் தலைவரே…” எனக் கண்ணீர் விட்டாராம் முருகப் பிரமுகர். #இது போதும் எனக்கு... இது போதுமே!

ஒரு காலத்தில் கார்டன் தலைவிக்கு விசுவாசமாக இருந்த அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர், மனம் திருந்தி தலைவியை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க விரும்பினார்களாம். ஆனால், தலைவியைச் சுற்றி நிற்கும் குடும்பத்தார் இப்போதும் முட்டுக்கட்டைகளைப் போட்டுக் கொண்டே இருக்கிறார்களாம். மறுபடியும் போன் செய்தால், “ஏன் இப்படி நச்சரிக்கிறீங்க…” என நாகரிகமற்ற வார்த்தை களையும் வீசுகிறார்களாம். #சந்திச்சு திட்டு வாங்கலாம்… சந்திக்கவே திட்டு வாங்கலாமா?

கிசுகிசு

பள்ளி விவகாரத்தில் துள்ளி விளையாடும் காவிக்கட்சி நடிகை, சமூக வலைதளங்களில் ஆவேசம் காட்டுகிறார். ‘எனக்கும்தான் அந்தப் பள்ளியில் சீட் கிடைக்கலை. அதுக்காக நானும் திட்ட முடியுமா?’ என அம்மணியின் ஆவேசப் பேச்சுக்குக் காவிக் கட்சியில் கடுமையான பாராட்டாம். பதிலடி, வசைபாடல் எனச் சமூக வலைதளங்களில் அம்மணிக்கு எதிரான தரக்குறைவான விமர்சனங்களும் வரிசைகட்ட, அதற்கெல்லாம் அஞ்சாமல் ஆவேசத்தைத் தொடர்கிறார் அம்மணி. #முழுக்க நனைஞ்சாச்சு…

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு