அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு: `பவனு'க்கு தூதுவிட்ட `ஷாக் அமைச்சர்'

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

யாரும் எதிர்பார்க்காத நிலையில் ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஒருவரை மாற்றி, முதன்மையானவர் உத்தரவு பிறப்பிக்கவைத்திருப்பது கட்சி நிர்வாகிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தென் மாவட்டங்களில் இருவர், டெல்டா மாவட்டங்களில் ஒருவர் என அடுத்தடுத்த தடாலடிகள் அரங்கேறவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் மீதான புகார்கள் குறித்து விசாரிப்பதில் திடீரென தீவிர கவனம் காட்டத் தொடங்கியிருக்கிறாராம் முதன்மையானவர். சீனியர் நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போனிலேயே வறுத்தெடுக்கிறாராம். #ம்... வண்டியை இப்பவாவது ஸ்டார்ட் பண்ணீங்களே..!

கிசுகிசு
கிசுகிசு

ஷாக் கொடுக்கும் அமைச்சரை நீக்கியே தீருவது என்பதில் மிகக் கவனமாகக் காய்நகர்த்திவருகிறார் காவிக் கட்சியின் மாஜி காக்கி. பவன் புள்ளியைச் சந்தித்து காக்கி மாஜி புகார் கொடுத்திருக்கும் நிலையில், எந்தக் கோட்டையிலும் ஊடுருவும் அளவுக்கு ராஜதந்திரம் பெற்ற ஷாக் அமைச்சர், பவன் வட்டாரத்துக்கும் தன் தரப்பு விளக்கத்தை ரகசியமாகச் சொல்ல சில தூதுவர்களை அனுப்பியிருக்கிறாராம். துறைரீதியான விளக்கங்களுடன் மேற்கொண்டும் நிறைய விஷயங்கள் பவன் புள்ளிக்கு பாஸ் செய்யப்பட்டிருக்கின்றனவாம். “ஐயோ பாவம் அவர்...” எனப் பவன் புள்ளியே பரிதாபப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லையாம். #பவருக்கு உண்டோ அடைக்கும் தாழ்?!

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்படும் விஷயத்தில், கதர்க் கட்சியின் ரகசியத் தலைவரைத் தீவிரமாகப் பேசவைக்கலாமா என டெல்லி வாரிசிடம் விவாதிக்கப்பட்டதாம். விஷய அறிவுகொண்ட ரகசியத் தலைவர் புள்ளிவிவரங்களோடு பேசினால் மத்திய அரசுக்கு நெருக்கடியாக இருக்கும் எனச் சொன்னார்களாம் சீனியர் நிர்வாகிகள். ஆனாலும், கதர்க் கட்சியின் வாரிசு, `ஆம், இல்லை’ என எந்த பதிலும் சொல்லாமல் அமைதி காத்தாராம். ரகசியத் தலைவர் மீதும், அவரின் புதல்வன் மீதும் டெல்லி வாரிசுக்கு அந்த அளவுக்குத் தீராத கோபமாம். #வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோஸ்!

கிசுகிசு
கிசுகிசு

இலைக் கட்சியின் சட்டப் போராட்டத்தில் காட்டிய வேகத்தைக்கூடக் கிடப்பில் போட்டுவிட்டு, இனிஷியல் தலைவரோடு இணக்கம் காட்டத் தொடங்கினார் பணிவானவர். ‘நமக்கும் ஒரு நல்ல ஆள் சிக்கினார்’ என எண்ணி இனிஷியல் தலைவரும் பணிவானவரைப் பலவிதமான அசைன்மென்டுகளுக்கும் ஆயத்தப்படுத்துகிறாராம். டெல்லியின் காவிக் கட்சி ஆட்களை அணுகிக் காரியம் சாதிக்க, பணிவானவரின் ரூட்டை இனிஷியல் தலைவர் எடுக்க, “அங்க போக வழியில்லாமத்தானே இங்க வந்து குத்தவெச்சேன்” எனக் குமுறுகிறாம் பணிவானவர். #நானும் எவ்வளவு நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது!

சீக்கிரமே ஆளுங்கட்சிக்கு எதிரான மாநிலம் தழுவிய போராட்டத்தைக் கையிலெடுக்கும் முடிவில் இருக்கிறாராம் இலைக் கட்சியின் துணிவானவர். சாராயச் சாவுகள் விவகாரத்தில் தங்களை முந்திக்கொண்டு காவிக் கட்சி பெயர் வாங்கியதால், ஆட்சியின் மொத்த முறைகேடுகளையும் எதிர்த்து, பெரிய அளவில் போராட்டம் நடத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசிவருகிறாராம் துணிவானவர். பல மாவட்டங்களிலும் நிர்வாகிகள் மாற்றத்தை அறிவித்து, அவர்களையும் இந்தப் போராட்டத்தில் புதுப்பாய்ச்சலாகக் களமிறக்கத் திட்டமாம். #பூவா, இலையா போராட்டம்!