அரசியல்
அலசல்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

உச்ச நடிகர் ஏற்கெனவே நடித்து ஃபிளாப் ஆன ஒரு படம் சமீபத்தில் செகண்ட் ரிலீஸ் ஆனதல்லவா... அதிலும் பெரிய வெற்றியோ, வசூலோ இல்லையாம். உச்ச நடிகர் கவனத்துக்கு இதைச் சிலர் சொல்ல, மனிதருக்கு சந்தோஷம் தாங்கவில்லையாம். ‘படம் சரியா போகலைன்னு சொல்றதுக்கு ஏன் இவர் சந்தோஷப்படுறார்?’ என விசாரித்தார்களாம்.

கிசுகிசு

ஜாதகரீதியாக, உச்ச நடிகரின் ‘அடுத்த படம் சரியாகப் போகாது’ என்று சொன்னார்களாம். அதைக் கேட்டு இடிந்துபோன உச்ச நடிகர், ஜாதகத்தையே ஏமாற்றச் செய்த ஏற்பாடுதான் ஏற்கெனவே ஃபிளாப்பான தன் படத்தை ரீ ரிலீஸ் செய்யவைத்ததாம். “இப்போது ஜாதகம், இதுதான் அடுத்த படம் என்று ஏமாந்துபோயிருக்குமல்லவா... அடுத்த படம் ஓடிவிடும் அல்லவா...” என்று விளக்கியிருக்கிறார்கள். பதிலைக் கேட்டவர்கள் விக்கித்துப்போயிருக்கிறார்கள். #ஷ்ஷ்ஷப்ப்பா மிடியல!

கிசுகிசு

சின்ன தலைவியோடு ஜெயிலில் இருந்த அந்த முன்னாள் வளர்ப்பு மகன், வெளியே வந்தும் எவரோடும் ஒட்டு உறவில்லாமல் இருக்கிறார். தனக்காக யாரும் பணம் கட்டாததால், கூடுதலாக ஒரு வருடம் உள்ளே இருந்த துயரம் அவரைப் பெரிதாக வருத்தியெடுக்கிறதாம். “எத்தனையோ பேருக்குக் கோடி கோடியா அள்ளி இறைச்சேன். என் கஷ்டத்துக்கு யாருமே உதவலையே…” எனப் புலம்புபவர், சின்ன தலைவியுடனும் பேசுவது கிடையாதாம். சில நேரங்களில், “நான் வாய் திறந்தால் உறவுகளின் கதை நாறிப்போய்விடும்” என மிரட்டவும் செய்கிறாராம். #வேணாம்... வலிக்குது... அழுதுருவேன்!

கிசுகிசு

உள்ளாட்சியை இரண்டாகப் பிரித்து, வாரிசு வசம் கொடுக்கத்தான் முதற்கட்டமாகத் திட்டமிட்டார்களாம். ஆனால், ‘இப்போதைக்குப் பெரிய துறை வேண்டாம்’ எனப் பின்வாங்கியது வாரிசுதானாம். கூடுதல் பளுவை ஏற்றிக்கொள்ள வாரிசு விரும்பவில்லையாம். ‘முழுநேர அரசியல்வாதி’ என்கிற வட்டத்துக்குள்ளேயே வந்துவிடாத அளவுக்கு, தனிப்பட்ட நட்பு வட்டத்துக்கும் நேரம் ஒதுக்கிவருகிறார் வாரிசு. ‘இன்னும் இரண்டு வருடங்களுக்கு என்னை என் போக்கில் விட்டுவிடுங்கள்…’ என வீட்டிலேயே வெடித்தாராம். அதன் பிறகுதான் அவருக்கு ஏற்ற எளிய இலாகா தீர்மானிக்கப்பட்டதாம். ‘நம்பர் ஒன் ராசியான எண்’ எனக் குறித்துக் கொடுக்கப்பட்டதாலும், கேபினெட்டில் அந்தத் துறைக்குப் பத்தாவது இடம் என்பதாலும் எல்லாம் ஒருசேர ஓகேயாகியிருக்கிறது. #குயிலைப் புடிச்சி... கூண்டில் அடச்சி... கூவச் சொல்லுகிற உலகம்!

கிசுகிசு

சட்டென பதவிக்கு வந்துவிட்ட வாரிசு, உலக நடிகரின் தயாரிப்பில் ஒரு படம் செய்ய ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்தார். பதவி வைபோகத்துக்கு ரெடியான நிலையில், ‘என்னால் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பில்லை சார்’ என உலக நடிகரிடம் தயக்கத்தோடு சொன்னாராம். ‘பரவாயில்லை’ எனக் கவலையோடு சொன்ன உலக நடிகர், போனை வைத்துவிட்டுக் கொண்டாடாத குறையாகச் சந்தோஷப்பட்டாராம். காரணம், வாரிசுடன் நெருக்கம் பாராட்ட மட்டுமே அந்தப் படத் தயாரிப்பைப் பயன்படுத்த நினைத்தாராம். மற்றபடி அவரை நடிக்கவைப்பதில் ஆர்வம் கிடையாதாம். அவராக விலகியதால் உலக நடிகருக்கு நிம்மதிதானாம். ஆனாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் கவலைகொண்டவராக மாறி வாரிசைக் கலங்கடித்ததுதான் உச்சபட்ச நடிப்பு என்கிறார்கள். #உலக நடிப்புடா சாமி!

கிசுகிசு

திடீரென தனி விமானம் குறித்து விசாரித்திருக்கிறார் அண்ணன் தலைவர். அவசரமான பயணத்துக்காக விசாரிக்கிறாரோ எனத் தம்பிகள் தடதடக்க, “நாம எப்போதான் அதுல பயணிக்கிறது?” எனச் சொல்லிவிட்டு புஹாஹாவெனச் சிரித்தாராம். உடனே, சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருக்கும் ஒருவரைத் தூக்கிவந்து அவர் முன் தம்பிகள் நிறுத்த, “சிவகங்கைக்கு ஹெலிகாப்டர்ல போயிட்டு வரலாமாப்பா?” என்றாராம் அண்ணன் தலைவர். “இது உங்க ஹெலிகாப்டர்… நீங்க எங்க வேணும்னாலும் எடுத்துட்டுப் போகலாம்” என்றாராம் அந்தப் புள்ளி. சீக்கிரமே அண்ணன் தலைவரின் ஹெலிகாப்டர் பயணத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். #‘கையில காசு வெச்சுருக்கியா... அண்ணனுக்கு ஒரு டீ சொல்லு’ மொமன்ட்!