அலசல்
சமூகம்
Published:Updated:

கிசுகிசு

கிசுகிசு
பிரீமியம் ஸ்டோரி
News
கிசுகிசு

ஓவியங்கள்: சுதிர்

‘விமான டோர்’ விவகாரத்தைவைத்தே மாஜி காக்கியைப் பதவியிலிருந்து பந்தாடிவிட தீவிரமாக வியூகம் வகுக்கிறார்களாம் காவிக் கட்சியின் உள்ளடிப் புள்ளிகள். ஆளுங்கட்சியின் எம்.பி-யை வைத்து வீடியோ வெளியிட வைத்ததும் சாட்சாத் அவர்கள்தானாம். இவ்வளவு நடந்தும் காக்கி மாஜி, “என்னை யாரும் அசைக்க முடியாது” என கெத்துகாட்டுவதுதான் உள்ளடிப் புள்ளிகளைச் சற்று உதறலுக்கு உள்ளாக்கியிருக்கிறதாம். #அடுத்த ஆபரேஷனுக்கு ரெடியாகுங்க பாஸ்!

இடைத்தேர்தலில் வேட்பாளரைத் தேர்வுசெய்ய, கதர்க் கட்சி சீனியர் புள்ளியின் குடும்பத்துக்குள் பெரிய பாசப் போராட்டமே நடந்ததாம். இளைய வாரிசை நிற்கச் சொல்லிக் கெஞ்சினாராம் தந்தை. “வேணவே வேணாம்” எனக் கையெடுத்து கும்பிட்டாராம் வாரிசு. பிறகு மறைந்தவரின் மனைவியைக் கேட்டார்களாம். “அரசியல் எண்ணமே இல்லை” என்றாராம் அவர். வேறு வழியின்றி, “எங்க குடும்பத்தில் யாருக்கும் சீட் வேண்டாம். நீங்கள் வேறு யாருக்காவது கொடுங்கள்” என்று கதர்க் கட்சித் தலைவரிடம் சொன்னாராம் சீனியர் புள்ளி. “இந்தக் காலத்தில் இப்படியொரு குடும்பமா?” என அசந்துபோன கதர்க் கட்சித் தலைவர், விஷயத்தை முதன்மையானவர் கவனத்துக்குச் சொன்னாராம். பிறகுதான், “நீங்களே நில்லுங்கள்” என முதன்மையானவர் அறிவுறுத்தினாராம். அவரின் அன்பைத் தட்ட முடியாமலேயே சீனியர் புள்ளி களமிறங்கச் சம்மதித்தாராம். #இப்படியும் ஒரு வாரிசு!

கிசுகிசு

மீசை அமைச்சரின் தம்பி வழக்கைத் தீவிரமாக்க, உண்மை கண்டறியும் சோதனை சமீபத்தில் நடத்தப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கான சாதகங்கள் அமையாவிட்டாலும், விசாரணையை வேகமாக்கும் அளவுக்கான விஷயங்கள் கிடைத்திருக்கின்றனவாம். இன்னும் சிலருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த நீதிமன்ற அனுமதி கேட்கப்போகிறார்களாம். வழக்கின் அப்டேட், மீசை மினிஸ்டருக்கு நம்பிக்கை அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள். #ரொம்ப ஸ்லோ!

தென் மண்டல மூத்தவரின் சொல்லுக்குத் தலையாட்டுவதா, வேண்டாமா எனக் கடுமையான குழப்பத்தில் இருக்கிறார்களாம் ஆளுங்கட்சியின் சீனியர் புள்ளிகள். வாரிசு வீடு தேடிப்போய் சந்தித்த பிறகு, ‘மோதல் போக்கு முடிவுக்கு வந்திருப்பதாகக் கசியும் தகவலில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பதே கட்சியின் சீனியர் புள்ளிகளுக்குப் புரியவில்லையாம். அமைச்சர்களின் நிலைமை அதைவிட மோசமாம். “நாங்கள் போனில் பேசியதற்குக் கடுமையாகக் கண்டித்தார்கள். ஆனால், வாரிசு நேரடியாகவே சந்திக்கிறார். ஆளுக்கு ஒரு நீதியா?” என அலுத்துக்கொள்கிறார்களாம். #மாமியா உடைச்சா மண்குடம்.... மருமக உடைச்சா?

கிசுகிசு

மாநிலத்தையே பரபரப்பாக்கிய வாட்டர் டேங்க் விவகாரத்தில், மாவட்ட அதிகாரியின் செயல்பாடு மக்களால் பாராட்டப்பட்டாலும், அரசுத் தரப்புக்கு அவ்வளவு திருப்தி இல்லையாம். “விஷயம் பெரிதானதே அவரால்தான்” என ஆளும் புள்ளிகளே போட்டுக்கொடுத்திருக்கிறார்களாம். இப்போதைக்கு டிரான்ஸ்ஃபர் செய்தால் பரபரப்பு இன்னும் பெரிதாகிவிடும் என்பதால், அடக்கி வாசிக்கச் சொல்லி மேலிடம் உத்தரவிட்டிருக்கிறதாம். #அப்ப... அடிக்கடி நீங்க முழங்குற அந்தச் சமூகநீதி?